ஆவியாரின் அருளில் அன்னை மரியாவுடன் பயணிப்போம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 8 ஆம் வாரம் –திங்கள்
தொ.நூ. 3: 9-15, 20
யோவான் 19: 25-27
ஆவியாரின் அருளில் அன்னை மரியாவுடன் பயணிப்போம்!
முதல் வாசகம்.
தொடக்க நூலின் இன்றைய பகுதியில், மனிதன் பாவத்தில் விழுந்த பிறகு இறைவன் ஆதாமையும் ஏவாளையும் அழைத்து விசாரிக்கும் திகழ்வு விவரிக்கப்புகிறது,
இறைவன் “நீ எங்கே இருக்கிறாய்?” என்று ஆதாமை அழைக்கிறார். அப்போது ஆதாம் தாம் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்து பயந்ததால் ஒளிந்துகொண்டதாகச் சொல்கிறான். இறைவன் அவரிடம் கட்டளையை மீறி தடைசெய்யப்பட்ட கனியைத் தின்றாயா என்று கேட்க, ஆதாம் குற்றத்தை ஏவாள்மீது சுமத்துகிறான்; ஏவாள் அதை பாம்பின் மேல் சுமத்துகிறாள்.
இதனால் இறைவன் பாம்பைச் சபித்து,’”உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார் இந்த வசனம் தீமையின் மீது இறுதியில் நன்மை வெற்றி பெறும் என்பதற்கான நம்பிக்கையைக் காட்டுகிறது.
20 ஆம் வசனத்தில், ஆதாம் தனது மனைவிக்கு “ஏவாள்” என்று பெயரிடுகிறான்; ஏனெனில் அவள் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருப்பாள் என்று மேலும் கூறப்படுகிறது.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி பகுதியில், சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசு தமது தாயாரான மரியாவையும், தாம் அன்புகூர்ந்த சீடரையும் (பொதுவாக யோவான் என்று கருதப்படுகிறவர்) பார்த்து கூறும் வார்த்தைகள் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வு ஆழமான அன்பையும் பொறுப்பையும் வெளிப்படுத்துகிறது.
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். யோவான் உடனே மரியாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார் என்று நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்கள் புனித கன்னி மரியா, திரு அவையின் அன்னை நினைவுக்கு உரியது என்பதை மனதில் கொள்வோம். இயேசு மிகுந்த வேதனையில் சிலுவையில் இருந்தபோதும், தமது தாயின் எதிர்காலத்தை நினைத்தார். மரியாவை தனிமையில் விடாமல், அன்புச் சீடரின் பாதுகாப்பில் ஒப்படைத்தார். இது:
• பெற்றோருக்கான பொறுப்பு,
• குடும்ப அன்பு,
• மனித நேயம் என்பவற்றின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.
இதில், இயேசு மரியாவை யோவானிடம் ஒப்படைத்ததானது குடும்ப உறவாக மட்டுமல்ல; அனைத்து நம்பிக்கையாளருக்கும் மரியா ஓர் ஆன்மிகத் தாயாக இருப்பதற்கான அடையாளமாகவும் அமைகிறது. ஆழ்ந்து சிந்தித்தால், சிலுவை அடியில் நிகழ்ந்த இந்த நிகழ்வு மரியாவின் தாய்மைப் பணியை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும், யோவான் உடனே மரியாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார் என்பது, சீடர் இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததை எடுத்துரைக்கிறது.
இதிலிருந்து, நாம் ஓர் உண்மையைக் கண்டறிய வேண்டும். ஆம் துன்பத்திலும் பிறரின் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொள்ள வேண்டும். மேலும், இயேசுவின் இப்பணி ஒப்படைப்பானது, அவரில் அனைவரும் ஒரு குடும்பம் என்பதை நினைவூட்டுகிறது.
நேற்று, முதல் சீடர்கள் மீது தூய ஆவியானவர் வந்திறங்கியதையும் , திருஅவையின் பிறப்பையும் நினைவுகூரும் வகையில், பெந்தெகொஸ்தே பெருவிழாவைக் கொண்டாடினோம். படைப்பின்போது, கடவுள் ஆதாமுக்கு உயிரை "மூச்சு" கொடுத்தது போல், தூய ஆவியானவர், கடவுளின் மூச்சை, கிறிஸ்துவின் திருவுடலான திருஅவைக்குத் தந்து புதுப் பிறப்பைத் தருகிறார். பெந்தெகொஸ்தே நாளில், கன்னி மரியாவும் இணைந்திருந்தார். ஆகவே, அன்னை மரியாவையும் திருஅவையையும் பிரித்துப் பார்ப்போர் திருஅவைக்கு உரிய சீடர்களாக இருக்க முடியாது.
இன்று, நாம் அன்னை மரியாவை மீட்பரின் தாயாக மட்டுமல்ல, நமது தாயாக , அதாவது மீட்கப்பட்டவர்களின் தாயாகவும் மதிக்கிறோம், வணங்குகிறோம், இது கடவுளின் ஏற்பாடு.
முதல் வாசகத்தில், ”உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்” என்பதை ஆழ்ந்து சிந்தித்தால், ‘அவள் வித்து ‘ என்பது இயேசுவின் திருவுடலான திருஅவையைச் சுட்டிக்காட்டப்பட்டதாக அறிகிறோம். இதன் நிமித்தம் அலகைக்கும் திருஅவைக்கும் இடையிலான போராட்டம் இன்றும் தொடர்கிறது. சுருங்கச் சொன்னால், நமக்கும் (திருஅவைக்கும்) அலகைக்கும் இடையில் கடுமையான போராட்டம் இயேசுவின் இரண்டாம் வருகை வரை தொடரும். அலகை பலவழிகளில் திருஅவையின் தலையை நசுக்க அயராது போராடிக்கொண்டிருக்கிறான். அவன் அரக்கப் பாம்பு.
முன்பு காலத்தில், அன்னை மரியாவின் குதிங்காலை பாம்பு (அலகை) காயப்படுத்தும் என்பது நேரடியாகப் பொருள் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக முன்பு செய்யப்பட்ட மரியாவின் சுரூபங்களில் பாதத்தில் பாம்பு இருப்பதாகச் செய்யப்பட்டன. இக்காலத்தில் விவலிய அறிஞர்களின் விளக்கப்படி மாதாவின் சுரூபங்களில் அடியில் பாம்பு வைக்கப்படுவதில்லை. ‘அவள்’ என்பது மரியாவை அல்ல, திருஅவையைக் குறிப்பதாக அறிகிறோம்.
இறைவேண்டல்.
திருஅவையின், தாயே, அலகைக்கு எதிரான எனது போராட்டத்தில் நான் அயராதுப் போராட எனக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452