பிரிவும் பிளவும் சாத்தானின் சூழ்ச்சி... | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பாஸ்கா 7-ம் வாரம் –வியாழன்
 தி.பணி 22: 30; 23: 6-11
யோவான் 17: 20-26
 
 பிரிவும் பிளவும் சாத்தானின் சூழ்ச்சி... 
 
 முதல் வாசகம்.
  
நமது முதல் வாசகத்தில், எருசலேமில் பவுல் அடிகள் விசாரிக்கப்படுவதைக் அறிகிறோம். பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை அறிந்த பவுல்,  பரிசேயர்கள்  மரணத்திற்குப் பின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால்,   பவுலும் ஒரு பரிசேயர் என்பதால்  இயேசுவின் மரணத்திற்குப் பின்  இயேசு  உயிர்த்தெழுந்ததை  நம்புகிறார் என்றும் வலியுறுத்துகிறார்.
 
மரணத்திற்குப் பின் நிகழுக்கூடிய உயிர்த்தெழுதலில் நப்பிக்கை அற்றவர்கள்  சதுசேயர்கள்.  ஆகவே, சபையில் இருதரப்பினருக்கும்  இடையே வாக்குவாதம் மூண்டது. அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.  இச்சூழல் பவுல் அடிகளுக்குச் சாதகமாக அமைந்தது என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
 
பரிசேயப் பிரிவினைச் சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, “இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!” என வாதாடினர். இத்தருணத்தில், ஆயிரத்தவர் தலைவர் பவுல் அடிகள் தாக்கப்படலாம் என்று அஞ்சி அவரை அங்கிருந்து அகற்றிவிட்டார். 
 
நறசெய்தி. 
 
இன்றைய நற்செய்தியின்  முக்கிய அம்சம் என்னவென்றால், இயேசு தம்முடைய தந்தையை நோக்கி, கடவுளின் அன்பைப் பற்றிய செய்தியை அறிவிக்கும் சீடர்களையும் பணியையும்  தற்காத்து ஆசீர்வதிக்குமாறு மன்றாடுகிறார். அதே வேளையில் நற்செய்தியால்   தொடப்படுபவர்களுக்காகவும் இயேசு வேண்டுகிறார்.  இயேசுவின் இறைவேண்டலில் குறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கையின் முக்கிய அம்சமானது,    ‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்’ எனும் செய்தியாகும்.
 
நிறைவாக,   உலகம் தோன்றும் முன்னே தந்தையாம் கடவுள்  இயேசு மீது அன்பு கொண்டு அவருக்கு மாட்சி அளித்தார் என்ற வெளிப்பாடும் நமக்கு இன்றியமையா செய்தியாக பகிரப்படுகிறது.
 
சிந்தனைக்கு.
 
இன்றைய கிறிஸ்தவர் மட்டில் பல்வேறு பிரிவினைகள், கருத்து வேறுபாடுகள், போட்டா போட்டிகள், தலைமைத்துவப் போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.   உலகினருக்கு அறிவுரை கூறும் தகுதியை, உலகிறகு ஒளியாய் ஆற்ற்லை  நம்மில் எழும் பிரிவினையால் நாம் நாளுக்கு நாள் இழந்து வருகிறோம் என்றால் மிகையாகாது.      
 
இயேசுவோ தம்முடைய தந்தையில் தூய ஆவியுடன் ஒன்றாக இருப்பது போல, எல்லா ஆடுகளும் தம்மிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். மண்ணகத்தில் நிலைமை இன்று வேறு. ஏறக்குறைய 1500 ஆண்டுகள் ஒரே திருஅவையாக ஒளிவீசிய திருஅவையில் ‘சாத்தான்’ பிளவுகள் ஏற்படுத்தினான். பிரித்தாள்வது சாத்தானின் சூழ்ச்சிமிகு வேலை.  இன்று தெருவுக்குத் தெரு பிளவுப்பட்டுள்ளோம். பிரிந்த சகோதரர்களின் பாஸ்டர்களுக்கிடையேயும் உயர்த்தித் தாழ்த்திப் பேசும் அவலம் கொடிகட்டி பறக்கிறது. சொத்துக் குவிப்பு இன்று எங்கும் பரவலாகப் பேசப்படுகிறது.
 
ஒரு குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நிகழ்வது இயல்பு. அதற்காகக் குடும்ப உறவில் இருந்து பிரிவது பெரும் பாவம். இது இயேசுவின் மன்றாட்டுக்கு முற்றிலும் எதிரானது. சுயநலமும், பணத்தாசையும், புகழாசையும்  பலரின் கண்களை மறைக்கின்றன. எங்கள் சபை இயேசுவின் சபை என்று இயேசுவின் பெயரில் பல சபைகள் தோன்றுகின்றன. எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்று மன்றாடும் இயேசு எப்படி இத்தனை சபைகளை ஏற்படுத்துவார்?  அவர் பொய்யரா? அவர் பித்தலாட்டக்காரரா?

இயேசுவின் இந்த அழகான இறைவேண்டல் , அவரது முழுமையான பணியையும் அடையாளத்தையும் உள்ளடக்கி, தந்தையுடனான அவருடைய ஆழ்ந்த நெருக்கத்தையும், தமக்கும், தந்தைக்கும் , அவரில் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கும்  அனைவருக்கும் இடையே ஒன்றிப்பு ஏற்பட வேண்டும் என்ற அவருடைய ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த இறைவேண்டலின் மூலம், தந்தையுடனான அவரது  உறவின் தன்மையையும், அவரைப் பின்பற்றுபவர்களுக்காக அவர் விரும்பும் ஒன்றிப்பையும் , தம்மில் ஒன்றித்து இருப்பவர்களுக்கு வரவிருக்கும் நிலையான மாட்சியையும் இயேசு இன்று வெளிப்படுத்துகிறார்.

உண்மையில், இயேசு ஏற்படுத்திய திருஅவைக்கு அவர் கொடுத்தது பேதுருவின் தலைமையிலன ஒரே தலைமைத்துவம் (மத் 16:18) என்பதை ஏற்க மறுப்போரு இயேசுவின் இநுத இறைவேண்டலுக்குப் புறம்பானவர்கள்.   பேதுருவின் தலைமைத்துவம் இயேசுவின் இரண்டாம் வருகைவரை நீடிக்கும் ஒரே வழிமரபிலான தலைமைப்பீடம். அன்னை மரியாவின் தாயுள்ளம் (கத்தோலிக்க) கொண்ட தலைமைப்பீடம்.   அன்று ஒரு வார்த்தை இன்று ஒரு வார்த்தை என மாற்றி பேசி இயேசு ஒரு பச்சோந்தி அல்ல. அவரே உண்மை. உண்மையே அவர். 

ஆகவே, காலத்துக்கும் ஒன்றித்துப் பயணிப்பதே நமது மண்ணகப் பயணம். பிரிவும் பிளவும் சாத்தானின் சூழ்ச்சி....இதை ஏற்க மறுப்போர் துயருறுவர்.
 
இறைவேண்டல்.
 
எங்களின் ஒரே இணைப்பாளரான ஆண்டவரே, தூய ஆவியாரின் வழியாக, உண்மையின்  ஞானத்தையும் புரிதலையும் நான் பெற்று, உமது ஒரே திருரஅவையைக் கட்டி எழுப்பும் பணியில் என்னை வழிநடத்துவீராக. ஆமென். 
 
  
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452