துன்பத் துயரத்தை ஏற்க மறுப்பது போலி சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பாஸ்கா 5-ம் வாரம், சனி

திபணிகள் 16: 1-10
யோவான்  15: 18-21


துன்பத் துயரத்தை ஏற்க மறுப்பது போலி சீடத்துவம்!


முதல் வாசகம்

 இந்த பகுதியில்   பவுலின் இரண்டாம் மறைத்தூதுப் பயணத்தின் ஆரம்பத்தைப் பற்றி விவரிக்கப்படுகிறது. இப்போது பவுல் லிஸ்திரா எனும் ஊரில் உள்ளார். இங்கே பவுல் தீமோத்தேயுவுன் பணியில் இணைகிறார். ஆகவே, திமொத்தேயு  பவுலுடன் சேருவது, தூய ஆவியாரின் வழிநடத்தல், மற்றும் மக்கெதோனிய அழைப்பு ஆகிய முக்கிய சம்பவங்கள் இடம்பெறுகின்றன. திமொத்தேயுவின்   தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப் பெண் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
பவுல் தீமோத்தேயுவைத் தன்னுடன் ஊழியத்திற்குக் கூட்டிச் செல்ல விரும்பினார். அப்பகுதியில் இருந்த யூதர்களுக்குத் தடையாக இருக்காதபடி, தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டது.
பவுலும் அவரது உடன் உழைப்பாளிகளும் நகரங்களுக்குச் சென்று, எருசலேமில் திருத்தூதர்கள் தீர்மானித்த கட்டளைகளை இறைமக்களுக்கு அறிவித்தார்கள்.
இதனால்:
•    சபைகள் நம்பிக்கை உறுதியாகியது. 
•    தினந்தோறும் இறைமக்கள் எண்ணிக்கை அதிகரித்தது என லூக்கா மேலும் குறுப்பிடுகிறார்.
 


நற்செய்தி.


இந்த பகுதியில், இயேசு  தமது சீடர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுக்கிறார்.  அதாவது, அவரது சீடர்கள் அவரைப் பின்பற்றுவதால் உலகம் அவர்களை வெறுக்கக்கூடும் என்கிறார். இதில் முக்கியமாக, “உலகம் உங்களை வெறுத்தால், அது முதலில் என்னையே வெறுத்தது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.” என்கிறார்.

இயேசுவை உலகத்தில் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோல, உண்மை மற்றும் கடவுளின் வழியில் நடக்கும் இறைமக்களையும் உலகம் ஏற்காது. இதன் மூலம், கிறிஸ்துவை பின்பற்றுவதால் வரும் சிரமங்கள் இயல்பானவை என்று இயேசு கூறுகிறார்.
இயேசு துன்பத்தையும் துரோகத்தையும் அனுபவித்தார்.
அவருடைய சீடர்களும் அதேபோன்ற சோதனைகளை சந்திக்க வேண்டும். ஆனால், சிலர் இயேசுவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டது போல, சீடர்களின் செய்தியையும் சிலர் ஏற்றுக்கொள்வார்கள் என்று இயேசு அறிவிக்கிறார்.

சிந்தனைக்கு,

இன்றைய வாசகங்களை ஒருங்கிணைத்துப் பார்த்தால், இயேசுவைப் பின்பற்றும் சீடர்களுக்கு (நமக்கு) எதிரப்பும், துன்பத் துயரங்களும் ஏற்படுவது தவிரக்க முடியாதது. வெறுக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. ஆனாலும், நம் ஆண்டவர், “நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டதால், உலகம் உங்களை வெறுக்கிறது” என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறார். உலகம் உங்களை வெறுக்கக்கூடும் என்றோ அல்லது நீங்கள் ஏதேனும் அநீதிக்கு ஆளாகக்கூடும் என்றோ அவர் கூறவில்லை. அவர் உலகத்திலிருந்து தெரிந்துகொண்டவர்கள் உலகத்தால் வெறுக்கப்படுவார்கள் என்று அவர் அறிவிக்கிறார்.

இந்தச் சூழலில் “உலகம்” என்பது படைப்பு அல்ல. கடவுள் படைத்த அனைத்தும் நல்லதே. உலகம் என்பது பாவத்தில் சிக்கிக்கொண்ட, வீழ்ச்சியடைந்தத் தீயோனை குறிக்கிறது.  கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது, தெய்வீக நோக்கமும் நிலை வாழ்வு கொண்ட ஒரு வாழ்க்கைக்காகப் பிரிக்கப்படுவதாகும். இந்த அழைப்பு நம்மை அவருடன் ஐக்கியத்திற்குள் இழுத்து, துன்பத்தை மாட்சிக்கான  பாதையாக மாற்றுகிறது. சீடர்களின் அடையாளம் சுயமாக உருவாக்கப்பட்டதல்ல, மாறாக அவருடைய தெரிவில் வேரூன்றியுள்ளது.  

தவிர்க்க முடியாத ஒன்றுக்கு நம்மைத் தயார்படுத்தும் விதமாக, இயேசு இந்த ஆழ்ந்த உண்மையை நமக்குக் கூறுகிறார்: “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.’ என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.   நாம் துன்புறுத்தலையோ, வெறுப்பையோ, அல்லது எந்த விதமான தீர்ப்பையோ விமர்சனத்தையோ சந்தித்தாலும், நாம் மனச்சோர்வடையாமலும் பயப்படாமலும் இருப்பதற்காக, அவருடைய வார்த்தையையும், அவருடைய எச்சரிக்கையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டுமம் என்று அறிவுறுத்தினார் இயேசு.


கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையும், உலகத்திலிருந்து அழைக்கப்பட்டதன் விளைவுகளையும் இன்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாறுபட்ட உலகில் மாறுபட்ட வாழ்வுக்காக நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து வாழ்வோம். 


இறைவேண்டல்


ஆண்டவரே, என் கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்வுக்காக நான் துன்புறுத்தப்படும்போது, எனக்குத் தைரியத்தையும் மனவுறுதியையும் அளித்து என்னைத் திடப்படுத்துவீராக.  ஆமென்.


ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6012 228 5452