இறைவனின் வெளிப்பாடு ஓர் அருள் கொடை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 15ஆம் வாரம் – புதன்
எசாயா 10: 5-7, 13-16
மத்தேயு 11: 25-27
இறைவனின் வெளிப்பாடு ஓர் அருள் கொடை!
முதல் வாசகம்.
இன்றைய இவ்வாசகத்தில் வழி தவறிய, கீழ்ப்படியாத வடநாட்டு
இஸ்ரயேல் மக்களத் திருத்துவதற்காக அசீரிய அரசை கடவுள்
பயன்படுத்தியதை வாசிக்கிறோம். ஆனால் அசீரிய மன்னன் இது
கடவுளது செயல் என்று அறியாமல், தன்னுடைய வெற்றிகள் அனைத்தும்
தனது வல்லமையாலும் ஞானத்தாலும் கிடைத்தவை என்று பெருமை
கொள்கிறான். இறைவனின் திட்டத்தை அறியாமல், தன்னைத்தானே
உயர்த்திக் கொள்கிறான்.
ஆகையால், அகந்தையால் நிரம்பிய அசீரியாவின் பெருமையை
இறைவன் தாழ்த்தி, அதற்குரிய தண்டனையை வழங்குவார் என்று
இறைவாக்கினர் எசாயா அறிவிக்கிறார்.
நற்செய்தி.
இப்பகுதியில் இயேசு தம் தந்தையாகிய இறைவனைப் போற்றுகிறார்.
உலக ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைக்கப்பட்ட
இறையாட்சியின் உண்மைகளை, எளிய மனமும் தாழ்மையும்
கொண்டவர்களுக்கு இறைவன் வெளிப்படுத்தியதற்காக அவர் நன்றி
செலுத்துகிறார்.
மேலும், தந்தையும் மகனும் கொண்டுள்ள தனித்துவமான உறவை இயேசு
இன்று விவரிக்கிறார். தந்தையை முழுமையாக அறிந்தவர் மகன்
மட்டுமே; மகனை உண்மையாக அறிந்தவர் தந்தை மட்டுமே. மகன்
வெளிப்படுத்த விரும்புகிறவர்களே தந்தையை உண்மையாக அறிந்து
கொள்ள முடியும் என்பதை இயேசு முன் வைத்து போதித்ததை மத்தேயு
இவ்வாறு பதிவுச் செய்துள்ளார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில் இரு முக்கிய விடயங்களை அறிகிறோம்.
முதலாவதாக, தாழ்ச்சி மனம் கொண்டோருக்கு இறைவன் தம்மை
வெளிப்படுத்துகிறார். அடுத்து, இயேசுவின் வழியாகவே தந்தையாகிய
இறைவனை உண்மையாக அறிய முடியும் என்பனவாகும்.
இன்றைய முதல் வாசகத்தில், அசீரியா அரசன் தனது வெற்றிகளெல்லாம்
தனது வலிமையாலும் ஞானத்தாலும் கிடைத்தவை என்று பெருமை
பேசுகிறான். ஆனால் இறைவாக்கினர் எசாயா, மனிதன் இறைவனின்
கருவி மட்டுமே என்பதை நினைவூட்டுகிறார். கருவி தன்னைப்
பயன்படுத்துகிறவரைவிட பெரியது அல்ல.
நற்செய்தியில் இயேசு, “ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும்
மறைக்கப்பட்டதை, குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு தந்தை
வெளிப்படுத்தினார்” என்று இறைவனைப் புகழ்கிறார். இறையாட்சியின்
மறைபொருளை நமது அறிவால் மட்டும் அறிய முடியாது; தாழ்மையான,
திறந்த உள்ளத்துடன் இறைவனை அணுகுபவர்களே உண்மையை
உணர்கிறார்கள். மேலும், “மகனைத் தந்தையைத் தவிர யாரும் அறியார்;
தந்தையை மகனும், மகன் வெளிப்படுத்த விரும்புகிறவர்களும் தவிர
யாரும் அறியார்” என்று கூறி, தம் மூலமாகவே தந்தையை அறிய முடியும்
என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார்.
இயேசு ஓர் அருளடையாளம். ஏனெனில், அவர் நமது கண்ணுக்குப்
புலப்படாத, யாரும் நேரில் கண்டறியாக கடவுளை வெளிப்படுத்துகிறார்.
.
இவ்விரு வாசகங்களும் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை
அளிக்கின்றன: அகந்தை இறைவனிடமிருந்து நம்மைத் தூரமாக்குகிறது;
தாழ்மை இறைவனின் அருளையும் உண்மையையும் நமக்குத் திறக்கிறது.
நமது திறமைகள், சாதனைகள், பதவிகள் அனைத்தும் இறைவன் தந்த
வரங்கள் என்பதை உணர்ந்து நன்றியுடனும் தாழ்மையுடனும் இறைவனை
வழிபடுவதோடு, அவரது விருப்பத்தை அறிந்துணர்ந்து மக்களாக
பயணிக்க வேண்டும்.
இறைவேண்டல்.
அன்பின் ஆண்டவராகிய இயேசுவே, என் உள்ளத்திலிருந்து
அகந்தையையும் தற்பெருமையையும் அகற்றி, குழந்தையின் மனதோடு
உம்மை நம்பி பின்பற்றும் அருளை எனக்குத் தாரும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம்
+60122285452
