வார்த்தையான இறைவா எம்முள்ளே வாழ்வாகுவாய்! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil
பொதுக்காலத்தின் 15 ஆம் ஞாயிறு
மு.வா: எசா: 55: 10-11
ப.பா: திபா: 65: 9. 9-10. 11-12. 13
இ.வா: உரோ: 8: 18-23
ந. வா: மத்: 13: 1-23
வார்த்தையான இறைவா எம்முள்ளே வாழ்வாகுவாய்!
அன்பு இறை சமூகமே!
இன்றைய நாள் இறைவாக்கு வழிபாடு நம்மையெல்லாம் இறைவார்த்தையை வாழ்வாக்கி பலன்தரும் வாழ்வு வாழ அழைக்கிறது.
ஒரு நாள் காற்றோட்டமான வெளிச்சமானை ஆழகிய பாத்திரத்திலே வைக்கப்பட்டிருந்த விதையானது மண்ணிலே புதைக்கப்பட்டது. அவ்விதைக்கு பயங்கர வேதனை. ஒரே புழுக்கம். உள்ளே இருட்டு. கரடுமுரடான இடம். பயங்கரமான துன்பத்தை அனுபவித்தது அவ்விதை. அதன் மேலுறை கிழிய ஆரம்பித்தது. நான் மடிந்தேன் என எண்ணியது விதை. ஆனால் புதிதாக முளை கிளம்பி மண்ணை முட்டி வெளியே வளர்ந்து புதிய செடியாகி பலன் தர தொடங்கியது. விதைக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
இதே போல் தான் கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்வும். இன்றைய இரண்டாம் வாசகம் இதைத்தான் கூறுகிறது. நாம் இவ்வுலகில் படும் துன்பம் மேலுலக இன்பத்தோடு ஒப்பிடும் போது ஒன்றுமில்லை. ஆனால் நாம் துன்பங்களை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும் .
அதற்கு நாம் சக்தியை எங்கிருந்து
பெறுகிறோம் ?இறைவார்த்தை மூலமே. மழையும் பனியும் மண்ணிற்கு வந்து பலன் தராமல் போவதில்லை. அதே போல இறைவார்த்தை யாருடைய வாழ்வில் நிலைத்திருக்கிறதோ அவர்களுடைய வாழ்வும் பலன் தராமல் போகாது.
இறைவார்த்தையை வாழ்க்கையாய் மாற்றுபவர்களின் வாழ்வு கரடுமுரடான நிலம் போலவோ , காய்ந்து பிளவுபட்டு வறண்ட நலம் போலவோ, தரிசான முட்புதர்கள் நிறைந்த நிலம் போலவோ அல்லாமல் பண்பட்ட நிலமாய் இருக்கும்.
இங்கே பண்பட்ட என்ற வார்த்தை நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையயை குறிக்கிறது. ஞானத்தோடு வாழ்வின் நிறைகுறைகளை பார்க்கும் குணத்தை குறிக்கிறது. இறைபற்றுள்ள ஆன்மீக வாழ்வை குறிக்கிறது. தெளிந்த துணிச்சலான மனநிலையை முறையை குறிக்க்கிறது. மேலாக இன்பத்திலும் துன்பத்திலும் சமநிலையோடு சாட்சியாய் வாழ்ந்து இறையன்பை பகிரும் உண்மையான கிறிஸ்தவ வாழ்வைக் குறிக்கிறது.
எனவே இறைவார்த்தையை நம் வாழ்வாக மாற்ற முயல்வோம்.இறைவார்த்தையை வாழ்வதால் ஏற்படும்இன்னல்களை இறைவார்த்தை தரும் பலத்தோடு ஏற்றுக்கொண்டு மறுஉலக வாழ்வுக்காய் நம்மை தயாரிப்போம். இறைவார்த்தை நம்மிலே பலன் தரட்டும். ஆமென்.
இறைவேண்டல்
இறைவா! உம் வார்த்தையால் எம் வாழ்வை பலனுள்ளதாக்கும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
திருஅவைச் சட்டப்படிப்பு
புனித பேதுரு பாப்பிறை இறையியல் கல்லூரி, பெங்களூர்
