ஒன்றிணைந்த பயணத்தின் அடித்தளம்: பிறரை கிறிஸ்துவின் பார்வையில் காணும் மனமாற்றம் – கர்தினால் தாக்லே | FABC | Veritas Tamil

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆவது நிறைவிறுதிப் பேரவைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக ஜூலை 22 அன்று இடம்பெற்ற நாள் முழுவதுமான தியான நிகழ்வில், "நீங்கள் இன்னும் பெரியவற்றைக் காண்பீர்கள்… மேய்ப்புப் பணித் தலைவர்களின் ஒன்றிணைந்த பயணத்திற்கான (Synodal) மனமாற்றத்திற்கான அழைப்பு" என்ற தலைப்பில் தனது இரண்டாவது உரையை கர்தினால் லூயிஸ் அந்தோனியோ ஜி. தாக்லே அவர்கள் வழங்கினார்.`

திருஅவையின் ஒன்றிணைந்த பயணம், திருஅவையின் கட்டமைப்புகளையோ அல்லது மேய்ப்புப் பணித் திட்டங்களையோ மாற்றுவதில் தொடங்குவதில்லை; மாறாக, திருஅவைத் தலைவர்கள் பிறரைப் பார்க்கும் பார்வை மாறுவதில்தான் அதன் உண்மையான புதுப்பிப்பு தொடங்குகிறது என்று அவர் வலியுறுத்தினார்.

"மேய்ப்புப் பணியாளர்கள் பிறரை முற்சார்பு எண்ணங்கள், பொதுப்படையான எண்ணங்கள் அல்லது வெறும் மனிதக் கணிப்புகளின் அடிப்படையில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால், ஒன்றிணைந்த பயணம் பலனளிக்காது. உண்மையான ஒன்றிணைந்த மனமாற்றம் என்பது, இயேசு பிறரைப் பார்த்ததுபோல் அவர்களைப் பார்க்கக் கற்றுக்கொள்வதில்தான் தொடங்குகிறது" என்று கர்தினால் தாக்லே கூறினார்.

நத்தனியேல் இயேசுவைச் சந்தித்த நற்செய்தி நிகழ்வை எடுத்துரைத்த அவர், "நாசரேத்திலிருந்து நல்லது ஏதேனும் வருமா?" என்ற நத்தனியேலின் சந்தேகமான கேள்வி, மனிதர்கள் பிறரைப் பற்றிய தங்களது பார்வையை கலாச்சாரப் பின்னணியும் தனிப்பட்ட அனுபவங்களும் எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாக விளக்கினார்.

"நத்தனியேலுக்கு யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்ற தனக்கென ஒரு அளவுகோல் இருந்தது. தனது ஊர் நாசரேத்தைவிட சிறந்தது என்று அவர் நினைத்தார். ஆனால், இயேசு அவரிடம் அதைவிடப் பெரிய ஒன்றைக் கண்டபோது அந்தப் பார்வை முற்றிலும் மாறியது" என்று அவர் கூறினார்.

நத்தனியேலின் முற்சார்பு எண்ணத்ததைக் கண்டித்துவிடாமல், "இதோ, வஞ்சகம் இல்லாத உண்மையான இஸ்ரயேலர்" என்று அவருக்குள் இருந்த நன்மையை இயேசு முதலில் பாராட்டியதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே, மற்றவர்கள் ஒருவரின் வரம்புகளை மட்டுமே பார்க்கும் வேளையில், கிறிஸ்து அவருடைய ஆழ்ந்த அடையாளத்தையும் அழைப்பையும் காண்கிறார் என்றார்.

"நாம் சாதாரணமானவற்றையோ அல்லது பிரச்சினைகளையோ மட்டுமே காணும் இடத்தில், இயேசு மகத்துவத்தைக் காண்கிறார். நாம் அறியாத நம்முள் இருக்கும் சிறப்பையும் அவர் கண்டறியச் செய்கிறார்" என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு மனிதரிடமும் இறைவன் விதைத்துள்ள நன்மையையும் அழைப்பையும் அறிந்துகொள்ளும் 'இயேசுவின் கண்களை' மேய்ப்புப் பணித் தலைவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இத்தகைய மனமாற்றம் இல்லையெனில் திருஅவைத் தலைமை மேலோட்டமானதாகவும், சிலரை மட்டும் உள்ளடக்கியதாகவும் மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் தாக்லே, "சில நேரங்களில் கண்ணாடியில் என்னைப் பார்த்து, 'நான் இயேசுவாக இருந்திருந்தால், இந்த நபரை கர்தினாலாகத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்' என்று நினைத்திருக்கிறேன்" என்றார்.

குருத்துவ அருள்பொழிவுக்கு முன்பும் இதேபோன்ற சந்தேகங்களை அனுபவித்ததாகக் கூறிய அவர், இறுதியில் தனது சொந்த தீர்ப்பை அல்ல, இறைவனின் பார்வையை நம்பக் கற்றுக்கொண்டதாக விளக்கினார்.

"'அழைப்பது நீரே; நான் காணாத ஒன்றை நீர் காண்கிறீர். எனவே, நீர் பார்க்கும் பார்வையையே நான் நம்புகிறேன்' என்று நான் செபித்ததை நினைவுகூர்கிறேன்" என்று அவர் பகிர்ந்துகொண்டார்.

பிறப்பு, கலாச்சாரம் அல்லது சமூக நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதால், பலர் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறாமல் போகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நாம் அவர்களிடம் எந்த நன்மையையோ மகத்துவத்தையோ காணாத காரணத்தால், திருஅவையில்கூட முழுமையாக மலர முடியாமல் போனவர்கள் இருக்கலாம்" என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இறுதியாக, கலாச்சாரப் பழக்கவழக்கங்கள், முன்முடிவுகள் அல்லது பழக்கப்பட்ட எண்ணங்கள் தங்களது மேய்ப்புப் பணியைப் பாதிக்கின்றனவா என்பதை சுயபரிசோதனை செய்யுமாறு பிரதிநிதிகளை அவர் அழைத்தார்.

ஒன்றிணைந்த பயணத்திற்கான உண்மையான மனமாற்றம் என்பது, நற்செய்தி நமது இதயத்தைத் தூய்மைப்படுத்த அனுமதிப்பதிலும், அதன் மூலம் திருஅவைத் தலைவர்கள் பிறரை கிறிஸ்துவின் கண்களால் காணக் கற்றுக்கொள்வதிலும் தொடங்குகிறது என்று கர்தினால் தாக்லே தனது உரையை நிறைவு செய்தார்.

Tamil Survey Popup Image