அச்சத்தை வெல்லும் இறைநம்பிக்கை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 14ஆம் வாரம் – சனி
எசாயா 6: 1-8
மத்தேயு 10: 24-33
அச்சத்தை வெல்லும் இறைநம்பிக்கை!
முதல் வாசகம்.
உசியா அரசன் இறந்த ஆண்டில், எசாயா ஆண்டவரை மகிமையோடு
அரியணையில் வீற்றிருப்பதைக் காண்கிறார். செராபீம்கள் ‘படைகளின்
ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது
மாட்சியால் நிறைந்துள்ளது’ என்று உரத்த குரலில்
கூறிக்கொண்டிருந்தனரெ என்கிறார் எசாயா.
அவ்வேளையில், தன் பாவநிலையை உணர்ந்த எசாயாவை, செராபீம்
ஒருவர் பலிபீடத்திலிருந்து எடுத்த நெருப்புத்தழலால்
தூய்மைப்படுத்துகிறார். பின்னர், "யாரை நான் அனுப்புவேன்?" என்று
ஆண்டவர் கேட்டபோது, எசாயா மனமுவந்து, "இதோ, நான்
இருக்கிறேன்; என்னை அனுப்பும்" என்று பதிலளித்து, இறைவனின்
பணியை ஏற்றுக்கொள்கிறார்.
நற்செய்தி.
இப்பகுதியில், இயேசு தம் சீடர்களை அச்சமின்றி தைரியமாக வாழவும்,
நற்செய்தியை அறிவிக்கவும் அழைக்கிறார். தம்மைப் பின்பற்றுபவர்கள்
எதிர்ப்புகளையும் துன்பங்களையும் சந்திப்பார்கள்; ஆனால்
மனிதர்களுக்கு அஞ்சாமல், அனைத்தையும் அறிந்திருக்கும் இறைவனை
நம்ப வேண்டும் என்று போதிக்கிறார்.
தொடர்ந்து, மக்களுக்கு முன்பாக இயேசுவை துணிவுடன்
ஏற்றுக்கொள்பவர்களை, விண்ணகத் தந்தையின் முன்பாக இயேசுவும்
ஏற்றுக்கொள்வார் என்று உறுதியளிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய முதல் வாசகத்தில், எசாயா இறைவனின் மாட்சியைக்
காட்சியாகக் கண்டு, "ஐயோ! நான் அசுத்த உதடுகள் கொண்டவன்"
என்று தன் தகுதியின்மையை உணர்கிறார். ஆனால், இறைவன் அவரைத்
தூய்மைப்படுத்தி, "நான் யாரை அனுப்புவேன்?" என்று கேட்டபோது,
"இதோ நான் இருக்கிறேன்; என்னை அனுப்பும்" என்று தயக்கமின்றி
பதிலளிக்கிறார். இந்நிகழவில் நாம் அறிவதென்னவென்றால், இறைவன்
தகுதியற்றவர்களையும் அழைத்து அவரது பணிக்கு தகுதியுள்ளவர்களாக
மாற்றுகிறார் என்பதாகும்.
நற்செய்தியில், இயேசு தம் சீடர்களிடம், "அஞ்சாதிருங்கள்" என்று மூன்று
முறை வலியுறுத்துகிறார். அவரது பார்வையில், குருவிகளைக் காட்டிலும்
நாம் அவருக்கு மிகவும் விலையுயர்ந்தவர்கள். எனவே, மனிதருக்கு
அஞ்சாமல், கிறிஸ்துவை நம் வார்த்தைகளாலும் வாழ்க்கையாலும்
துணிவுடன் அறிக்கையிட வேண்டும் என்பது நமக்கான அழைப்பாக
உள்ளது.
யூதூர்களில் பல சமயத் தலைவர்கள் இயேசுவை நிராகரித்தனர். மேலும்,
அவர் செய்த செயல்கள் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலின்
சக்தியால் நடைபெறுகின்றன என்று பொய்யாகக் குற்றம் சாட்டினர்.
இதைப் போலவே, தம்முடைய சீடர்களும் எதிர்ப்புகளையும்
அநியாயமான குற்றச்சாட்டுகளையும் சந்திக்க நேரிடும் என்று இயேசு
அறிந்தே சீடர்களை எச்சரித்தார். இயசுவின் இந்த எச்சரிக்கை நமக்கும்
உரித்ததாகும்.
இன்றைய வாசகங்களைக் கூர்ந்து கவனித்தால், அவை நமக்கு இரண்டு
அழைப்புகளைத் தருகின்றன: முதலில், எசாயாவைப் போல இறைவனின்
அழைப்பிற்கு "இதோ நான் இருக்கிறேன்" என்று பதிலளிக்க வேண்டும்.
இரண்டாவது, இயேசுவின் சீடர்களாக எந்தச் சூழலிலும் அஞ்சாமல்
கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ வேண்டும். இவை இரண்டையும்
கடைப்பிடித்து வாழ்ந்தால் மறுவுலக வாழ்வுக்கான நிலைவாழ்வு நமக்கும்
உண்டு என்பதில் ஐயமில்லை.
இறைவேண்டல்.
அன்பான ஆண்டவரே, எனது கிறிஸ்தவ வாழ்வில், எதிர்ப்புகளும்
சோதனைகளும் வந்தாலும், உம்மீது முழு நம்பிக்கையுடன் நிலைத்திருக்க
என்னை திடப்படுத்துவீராக,
ஆர். கே. சாமி (மலேசியா).
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
