நமக்கான வடிவமைப்பும் தீர்ப்பளிப்பும் அவரது தயவு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

எரேமியா 18: 1-6
மத்தேயு 13: 47-53

நமக்கான வடிவமைப்பும் தீர்ப்பளிப்பும் அவரது தயவு!

இன்று, ஆண்டவர் எரேமியாவை குயவனின் வீட்டிற்குச் செல்லும்படி
கூறுகிறார். அங்கு குயவன் களிமண்ணைக் கொண்டு ஒரு பாத்திரத்தை
உருவாக்கும்போது அது கெட்டுப்போனால், அதே களிமண்ணை மீண்டும்
தனது விருப்பப்படி புதிய பாத்திரமாக உருவாக்குகிறான். இதன் மூலம்,
ஆண்டவர் இஸ்ரவேல் மக்களிடம், "குயவனின் கையில் களிமண்
இருப்பதுபோல, நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்" என்ற இறைவனின்
செய்தியை எரேமியா நம்மோடு பகிர்கிறார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், இயேசு வலையைக்கொண்டு மற்றொரு
உவமையின் வழி விண்ணரசின் த்னமையை விவரிக்கிறார். கடலில்
வீசப்பட்ட வலை எல்லா வகையான மீன்களையும் பிடிக்கிறது. பின்னர்,
நல்ல மீன்கள் தனியாகச் சேகரிக்கப்படுகின்றன; பயனற்ற மீன்கள்
வெளியே எறியப்படுகின்றன. இதன் மூலம், உலக முடிவில்
நீதிமான்களும் தீயவர்களும் பிரிக்கப்படுவார்கள் என்பதை இயேசு
விளக்குகிறார்.
அதன்பின், இந்த உவமைகளைப் புரிந்துகொண்ட சீடர்களிடம் இயேசு,
விண்ணரசைப் பற்றிக் கற்றறிந்த மறைநூல் அறிஞர் ஒருவர் தனது

களஞ்சியத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் எடுத்துக்காட்டும்
வீட்டுத் தலைவனைப் போன்றவர் என்று கூறுகிறார். இவ்வுபதேசங்களை
முடித்தபின், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்று மத்தேயு
குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய இரு வாசகங்களையும் ஒருமித்துத் தியானிக்கும்போது,
இறைவன் அனைவருக்கும் மீட்புக்கான வாய்ப்பை அளிக்கிறார்
என்பதும், இறுதியில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை மற்றும்
செயல்களின் அடிப்படையில் நியாயந்தீர்ப்பைச் சந்திப்பார்கள் என்பதும்
தெளிவாகிறது.

இறைவன் நம்மை உருவாக்கும் குயவனைப் போன்றவர். நாம்
மனந்திரும்பி அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர் நம்மைத் தனது
திருவுளத்தின்படி மாற்றி, புதிதாகவும் பயனுள்ளவர்களாகவும்
உருவாக்குவார். "நீங்கள் என் கைகளில் இருக்கும் களிமண்
போன்றவர்கள்" என்பதில், நமது வாழ்க்கையில் தோல்விகள், பாவங்கள்,
பலவீனங்கள் இருந்தாலும், இறைவன் நம்மைக் கைவிடுவதில்லை என்ற
உண்மை புலப்படுகிறது. நாம் அவரிடம் திரும்பினால், அவர் நம்மை
புதிதாக வடிவமைத்து பயனுள்ள கருவிகளாக மாற்றுவார் என்பது அவரது
வக்குறுதியாக உள்ளது.

நற்செய்தியில், இயேசு வலையைப் பற்றிய உவமையைச் சொல்கிறார்.
இந்த உவமை, இறுதித் தீர்ப்பை நினைவூட்டுகிறது. இன்று நாம் வாழும்
விதமே, இறைவனின் முன்னிலையில் அவரது தேர்வை தீர்மானிக்கும்.

முதலாவதாக, கடவுள் நம்மை உருமாற்ற விரும்புகிறார்; மற்றொன்று,
அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நீதியிலும் அன்பிலும் வாழ நம்மை
அழைக்கிறார். ஆகவே, இறைவனின் கைகளில் நம்மை முழுமையாக
ஒப்படைப்பதே சாலச் சிறந்தது. நற்செய்தியின் இறுதியில்,
‘இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு சீடர்களைக்
கேட்க, அவர்கள், “ஆம்” என்றார்கள். இன்று அதை கேளவியை இயேசு
நம்மிடமும் கேட்கிறார். நாம் அவரது திருவுளத்தைப் புரிந்துள்ளோமா?

இறைவேண்டல்.

ஆண்டவரே, என்னை உமது கைகளில் இருக்கும் களிமண்ணாக மாற்றும்.
உமது விருப்பத்தின்படி என்னை வடிவமைத்து, உமக்கான உன்னத
வாழ்வை வாழும் அருளைத் தாரும்" ஆமென்.


ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம்
+60122285452

Tamil Survey Popup Image