திருமுழுக்கால் அழைக்கப்பட்ட நாம் பேறுபெற்றோர்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 14ஆம் வாரம் – புதன்

ஓசேயா  10: 1-3, 7-18,12

மத்தேயு 10: 1-7

திருமுழுக்கால் அழைக்கப்பட்ட நாம் பேறுபெற்றோர்!

முதல் வாசகம்.

ஓசேயா இறைவாக்கினர், இஸ்ரயேல் மக்கள் இறைவன் அளித்த ஆசீர்வாதங்களையும் வளத்தையும் அவருக்குப் மாட்சியாகப்  பயன்படுத்தாமல், சிலை வழிபாட்டிற்கும் தங்கள் சுயநல வாழ்க்கைக்கும் பயன்படுத்தியதைக் கண்டித்து இறைவாக்குரைக்கிறார்.  

மக்கள் இறையச்சம் இன்றி வாழ்ந்ததால், "எங்களுக்கு அரசன் இல்லை; ஆண்டவருக்கு அஞ்சவில்லை; அரசனால் எங்களுக்கு என்ன செய்ய முடியும்?" என்று அவர்கள் உணர வேண்டிய நிலை ஏற்படும் என ஓசேயா எச்சரிக்கிறார். அவர்களின் அரசனும் அதிகாரமும் நிலைத்திருக்காது; சமாரியாவின் அரசன் நீர்மேல் மிதக்கும் நுரையைப் போல விரைவில் அழிந்துபோவான் ஓசேயா அறிவுறுத்துகிறார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், இயேசு தமது பன்னிரு திருத்தூதர்களை அழைத்து, தீய ஆவிகளை விரட்டவும், எல்லா நோய்களையும் குணப்படுத்தவும் அதிகாரம் அளிக்கிறார். அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்கள் இஸ்ரயேல் மக்களிடையே, குறிப்பாக வழிதவறிய ஆடுகளிடம் முதலில் செல்லுமாறு கட்டளையிடுகிறார். மேலும், அவர்கள் செல்லும் இடமெல்லாம் "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" என்ற நற்செய்தியை அறிவிக்கும்படி அனுப்புகிறார்.

சிந்தனைக்கு.

இந்த வாசகம், இறைவன் அழைப்பவர்களைத் தமது பணிக்குத் தகுதிப்படுத்தி அதிகாரமளிப்பதையும், நற்செய்தியை அறிவிக்கும் பணி ஒவ்வொரு சீடரின் முதன்மையான பொறுப்பாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது. இயேசுவின் சீடராக இருப்பது அவருடைய அன்பையும் இரக்கத்தையும் உலகிற்கு எடுத்துச் செல்லும் ஒரு திருப்பணி என்பதை நாம் உணர்ந்து செயலில் இறங்க வேண்டும். திருமுழுக்கால் நாமும் அனுப்பப்பட்டவர்கள்தான்.  பனித பவுல் கூறியதைப் போல் அழைக்கப்பட்ட நாம் சொல்லாலும் செயலாலும் நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ கேடு என்பது நமக்கும் பொருந்தும்.

திருத்தூதர்களின் வாழ்க்கை இறையாட்சிக்காக மிகுந்த பலன் தந்ததற்குக் காரணம், அவர்கள் இறைமகனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்களாக இருந்ததுதான். அது அவர்களுடைய சொந்த விருப்பத்தால்  நமது  நிலைவாழ்வுக்கான  திட்டத்தை அவர்கள் தாங்களாகவே உருவாக்கவில்லை. தங்களுடைய எதிர்காலத்தைத் தாங்களே வகுத்து, தங்களுடைய விருப்பத்தின்படி அதை நிறைவேற்றவும் முயலவில்லை. மாறாக, தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட இறைப்பணியின் மகத்துவத்தை ஆழமாக உணர்ந்து, மீட்பரால் அனுப்பப்பட்டபோது அழைப்புக்கும் ஏற்ற் பணிக்கும் கீழ்ப்படிந்தனர். இறைவனின் திருவுளத்திற்கான அவர்களுடைய கீழ்ப்படிதல்தான்  இறையருள் உலகமெங்கும் பெருக்கெடுக்க உதவியது என்றால் மிகையாகாது.

ஆம், இறைவனின் அருளையும் ஆசீர்வாதங்களையும் தவறாகப் பயன்படுத்தி, அவரை விட்டு விலகிச் செல்லும் வாழ்க்கை இறுதியில் வீழ்ச்சியையே தரும். உண்மையான பாதுகாப்பும் நிலைத்த வாழ்வும் இறைவனுக்கான நம்பிக்கையிலும், நமது அன்றாட நற்செயதிப் பணியிலும் அடங்கியுள்ளது.

இறைவேண்டல்.

நற்செய்தியாக மனுவுருவான ஆண்டவரே, எனது வாழ்வால் உமது நற்செய்திக்கு சாட்சியாக விளங்கச் செய்வீராக.ஆமென்.

 

ஆர். கே. சாமி (மலேசியா)

ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்

+6 0122285452

Tamil Survey Popup Image