நம்பிக்கையால் ஆண்டவரின் வல்ல செயல் நம்மிலும் நிகழும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 14ஆம் வாரம் – திங்கள்
 
ஓசேயா 2: 14-16, 19-20
மத்தேயு 9: 18-26

 
 நம்பிக்கையால் ஆண்டவரின் வல்ல செயல் நம்மிலும் நிகழும்!

முதல் வாசகம்.

இன்று நாம் இறைவாக்கினர் ஓசேயா நூலில் இருந்து வாசிக்க் கேட்கிறோம்.  இறைவாக்கினர் ஓசேயா வடநாடான இஸ்ரயேலில் ஆமோசுக்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்தவர். இவர் கோமேர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, அவரைவிட்டு விலகிச் சென்றாள். அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு ஓசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார். குறிப்பாக, அன்னியதெய்வ (பாகால்) வழிபாட்டை விட்டு மனந்திரும்ப அழைக்கிறார். 
 இந்த வாசகத்தில், இறைவன் தம் மக்களை அன்போடும் இரக்கத்தோடும் மீண்டும் தம்மிடம் அழைத்துக்கொள்வதாக இறைவாக்கினர் ஓசேயா  வாக்குரைக்கிறார். அவர்கள் தம்மைவிட்டு விலகியிருந்தாலும், அவர்களை கைவிடாமல் புதிய உறவை கடவுள் விரும்புவதாக கூறுகிறார்.   
இறைவன் தனது மக்களுடன் நீதியிலும், நேர்மையிலும், அன்பிலும், இரக்கத்திலும், பிரமாணிக்கமான நம்பிக்கையிலும்  நிரந்தர உடன்படிக்கையை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கிறார். இதன் மூலம் அவர்கள் உண்மையாகவே இறைவனை அறிந்து, அவரோடு நெருக்கமான உறவை அனுபவிக்க வேண்டும் என்று போதிக்கிறார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், ஒரு தொழுகைக் கூடத் தலைவர் (யூதர்)  ஒருவர்   இயேசுவிடம் வந்து, தன் மகள் இறந்துவிட்டாள் என்றும், இயேசு வந்து அவள்மேல் கை வைத்தால் அவள் உயிருடன் எழுந்திருப்பாள் என்று நம்பிக்கையுடன் வேண்டுகிறார். . இயேசு அவனுடன் செல்கிறார்.
வழியில், பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்ட ஒரு பெண், "அவருடைய ஆடையையாவது தொட்டால் நான் குணமடைவேன்" என்ற நம்பிக்கையுடன் இயேசுவின் ஆடையைத் தொடுகிறாள். இயேசு அவளை நோக்கி, "மகளே, தைரியமாக இரு; உன் நம்பிக்கை உன்னைச் சுகமாக்கியது" என்று கூற, அவள் உடனே குணமடைகிறாள்.
பின்னர் இயேசு அந்த தொழுகைக் கூடத் தலைவர்  வீட்டிற்கு வந்து, துக்கம் அனுசரிப்பவர்களை வெளியே அனுப்பி, "சிறுமி இறக்கவில்லை; தூங்குகிறாள்" என்று கூறுகிறார். மக்கள் அவரை நகைக்கிறார்கள். ஆனால் இயேசு சிறுமியின் கையைப் பிடித்ததும், அவள் உயிருடன் எழுந்தாள். இந்த வல்ல செயலின் செய்தி அந்தப் பகுதி முழுவதும் பரவியது என மத்தேயு சித்தரிக்கிறார். 

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில், உடநாட்டு இஸ்ரயேல் மக்கள் பிரமாணிக்கமற்ற நிலையில் அன்னிய தெய்வமான பாகால் தெய்வத்தை நம்பி வாழ்கிறார்கள். அவர்களைக் கண்டித்து நல்வழிப்படுத்த முயன்றார் ஓசேயா. மனமாறினார் கடவுளின் இரக்கத்தைப் பெறுவார்கள் என்கிறார்.  அவர்களது வாழ்வில் பல அற்புதங்களைச் செய்து கானானில் குடிவைத்தார் காடவுள். அக்கடவுளை அவர்கள் நம்பவில்லை. அவர்களின் பிரமாண்க்கம் விலைபோனது. இறுதியில் அவர்கள் கைவிடப்பட்டனர். 

இன்றைய நற்செய்தியில், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு நபர்களை நாம் சந்திக்கிறோம். அவர்கள் இருவரும் தாங்க முடியாத ஆழ்ந்த துயரத்திலும் வேதனையிலும் இருந்தனர். முதலில், ஒரு தந்தை இயேசுவின் முன் மண்டியிட்டு, தனது மகள் இப்போதுதான் இறந்துவிட்டாள் என்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறார். இருப்பினும், அசைக்க முடியாத நம்பிக்கையுடன், இயேசு வந்து அவள்மேல் தமது கையை வைத்தால் அவள் மீண்டும் உயிர் பெறுவாள் என்ற உறுதியோடு அவர் மன்றாடுகிறார். 

அடுத்து,   பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அமைதியாக வேதனைப்பட்டு வந்த ஒரு பெண், அவருக்குப் பின்னால் வந்து, “அவருடைய ஆடையின் ஓரத்தையாவது தொட்டால் நான் குணமடைவேன்” என்ற நம்பிக்கையுடன், அவருடைய ஆடையின் குஞ்சத்தைத் தொட்டாள்.
 
லேவியர் நூலில் காணப்படும் சட்டத்தின்படி, அவளுக்கு தொடர்ந்து இரத்தப்போக்கு இருந்ததால், அவள் சடங்குமுறையின்படி அசுத்தமானவளாகக் கருதப்பட்டாள். அதன் காரணமாக, பொதுவான வழிபாட்டிலும்  சமூக வாழ்க்கையிலும் இருந்து அவள் விலக்கப்பட்டாள்.  
இரு நிகழ்விலும், இயேசுவின் மீது வைத்த உண்மையான நம்பிக்கை வல்ல செயலுக்கு இட்டுச் சென்றது. இயேசுவுக்கு நோயும் மரணமும் ஒரு பொருட்டல்ல என்பது இங்கே எண்பிக்கப்பட்டது. ஆம், நம்பிக்கையுடனும் துணிவுடனும் இயேசுவை அணுகுபவர்களுக்கு அவர் இரக்கத்தையும் மீட்பையும் அளிக்கிறார் என்ற நம்பிக்கை மேலெழுகிறது. 

நமது காயங்கள் புதிதாக இருந்தாலும், பழையதாக இருந்தாலும் ஆண்டவர் முன்னிலையில் முழங்கால்பணிந்து மன்றாடுவோருக்கு விடுதலை உண்டு.  அவர் ஒருபோதும் நம்மை புறக்கணிக்கமாட்டார் என்ற நம்பிக்கை நம்மில் வேரூன்ற வேண்டும். 
 
இறைவேண்டல்.  

அன்பின் ஆண்டவரே,   என் வாழ்க்கையில் சோதனைகள் cc tv வரும்போது,  முழு இருதயத்தோடு உம்மை அண்டி வர உமது அருளை என்னில் பொழிந்தருள்வீராக. ஆமென்.
 

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image