இறைவாரத்தை செயலுக்கு ஆற்றல் அளிக்கிறது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 12ஆம் வாரம் –  வியாழன்

2 அரசர்  24: 8-17
மத்தேயு 7: 21-29


இறைவாரத்தை செயலுக்கு ஆற்றல் அளிக்கிறது!
 
  
முதல் வாசகம்.

 இன்றைய முதல் வாசகத்தில் யோயாக்கீனுக்கு பதினெட்டு வயதாக இருந்தபோது யூதாவை ஆட்சி செய்தான். அவன் தன் தந்தை செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். என்று அறிகிறோம்.  இதன் விளைவாக, கடவுளின் சினத்திற்கு ஆளானான். கடவுள் வேற்று நாட்டு (பாபிலோனின்)  மன்னன் நெபுகத்நேசர் எருசலேமை முற்றுகையிட்டான். யோயாக்கீனும் அவனுடைய தாயும் அதிகாரிகளும் பாபிலோனியரிடம் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.
எருசலேம் ஆலயத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. நாட்டின் தலைவர்கள், வீரர்கள், கைவினைஞர்கள் ஆகியோரும் நாடுகடத்தப்பட்டனர். ஏழை மக்கள் மட்டும் நாட்டில் விடப்பட்டனர். யோயாக்கீனின் இடத்தில் அவனுடைய சிறிய தந்தையான மத்தனியாவை அரசனாக நியமித்து, அவனுடைய பெயரை செதேக்கியா என்று மாற்றினார் எருசலேம் மன்னன் நெபுகத்னேசார் என்று விவரிக்கப்பட்டுள்ளது. செதேக்கியா” என்ற பெயரின் பொருள்: “ஆண்டவர் என் நீதி” அல்லது “ஆண்டவர் நீதிமானவர்” என்பதாகும்.

நற்செய்தி.

இந்தப் பகுதியில் இயேசு, வெறும் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் இறைவனுக்குக் கீழ்ப்படிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதை மத்தேயு பதிவுச் செய்துள்ளார். 
 “ஆண்டவரே, ஆண்டவரே” என்று அழைப்பவர்கள் அனைவரும் விண்ணரசில் நுழைய மாட்டார்கள்; மாறாக, பரலோகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களே நுழைவார்கள் என்று இயேசு கூறுகிறார். வெளிப்படையான சமயச் செயல்கள் மட்டுமல்ல, உண்மையான விசுவாசமும் கீழ்ப்படிதலும் அவசியம்.

மேலும், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவர், பாறையின் மேல் வீட்டைக் கட்டிய புத்திசாலியைப் போன்றவர். மழை, வெள்ளம், புயல் வந்தாலும் அந்த வீடு நிலைத்து நிற்கும். ஆனால், கேட்டும் செயல்படுத்தாதவர் மணலின் மேல் வீட்டைக் கட்டிய அறிவிலியைப் போன்றவர்; சோதனைகள் வரும்போது அவரது வாழ்க்கை சிதைந்துவிடும் என்று எச்சரிக்கிறார். 
நிறைவாக, இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள் வியப்படைந்தனர். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞர்களைப் போல அல்லாமல், அதிகாரமுள்ளவராகப் போதித்தார் எனபதையும் மத்தேயு குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.

செயல் இல்லாத சொல், வேர் இல்லாத மரம் என்பதாகும். வேரில்லா மரம் நிலைப்பதும் பலன் தருவதுமில்லை. சில வேளைகளில் இத்தகைய மரங்கள் வெளித்தோற்றத்திற்கு மிகவும் அழகாகத் தோன்றும். வெளித்தோற்றம் உண்மையாகாது. 

“ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்லுகிறவன் அல்ல, தந்தையின் திருவுளத்தின்படி செய்கிறவனே விண்ணரசில் நுழைவான் என்று இயேசு போதிக்கிறார். ஆம், உண்மை சீடத்துவம் கீழ்ப்படிதலிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும். முதல் வாசகத்தைக் கூர்ந்து வாசித்தால், யூதேயா மக்கள் இறைவனின் கட்டளைகளைப் புறக்கணித்ததால் எருசலேம் வீழ்ச்சியடைந்து, மக்கள் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டனர். இறைவனின் விருப்பத்தை விட்டு விலகிய   வாழ்க்கையானது எப்போதும் இழப்பையும் துன்பத்தையும் கொண்டு வரும் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.

இறைவன் நம்மை அவரது வாரத்தைகளை கேட்பவர்களாக அல்ல, கேட்டவாறு நற்பணி செய்து வாழ  அழைக்கிறார். அப்போது நமது வாழ்க்கை கிறிஸ்து என்ற பாறையின் மேல் கட்டப்பட்ட வீட்டைப் போல உறுதியாக இருக்கும். 

நம்மில் பலர் நினைப்பதுபோல்,  விழுந்து விழுந்து இறைவேண்டல் செய்வதாலும், மிக உயர்ந்த பக்தி நிலையில் நிலைத்திருப்பதாலும் விண்ணக நிலைவாழ்வு கிடைத்துவிடாது. 


புனித யாக்கோப்பு எழுதிய திருமுகத்தில், ‘ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும் (யாக் 2:15-17) என்று கூறுகிறார். ஆகவே, நமது சொல்லில் செயலும், செயலில் சொல்லும் இணைந்திருக்க வேண்டும் என்தே நமக்கான படிப்பினை.

இறைவண்டல்.

ஆண்டவரே, உமது வார்த்தையைக் கேட்பதற்கு மட்டுமல்ல, அதன்படி வாழும் அருளையும் தாரும். என் வாழ்க்கையை உம்மேல் உறுதியாகக் கட்டி, எல்லாச் சோதனைகளிலும் நிலைத்திருக்க உதவுவீராக. ஆமென்.

  
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452