உலகம் காணாத பேறுகளை இறைவன் அளிக்க வல்லவர்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 10 ஆம் வாரம் – திங்கள்
1 அரசர் 17: 1-6
மத்தேயு 5: 1-12
உலகம் காணாத பேறுகளை இறைவன் அளிக்க வல்லவர்!
முதல் வாசகம்
இஸ்ரயேலில் ஆகாப் அரசன் ஆண்ட காலத்தில், இறைவாக்கினர் எலியா ஆகாபைச் சந்தித்து, தாம் அறிவிக்கும் வரை நாட்டில் பனியும் மழையும் பெய்யாது என்று ஆண்டவரின் பெயரால் அறிவித்தார்.
பின்னர் ஆண்டவர் எலியாவிடம், யோர்தானுக்கு கிழக்கே உள்ள கெரீத் ஓடையருகே சென்று மறைந்து வாழும்படி கட்டளையிட்டார். அங்கே ஓடையிலிருந்து தண்ணீர் குடிக்கவும், காக்கைகள் மூலம் அவருக்கு உணவு வழங்கவும் ஆண்டவர் ஏற்பாடு செய்தார். எலியா ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து கெரீத் ஓடையருகே தங்கினார். காக்கைகள் காலையிலும் மாலையிலும் அவருக்கு அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தன; அவர் ஓடையிலிருந்து தண்ணீர் குடித்தார் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
நற்செய்தி.
மத்தேயு 5:1-12 என்பது இயேசுவின் மலைப்பொழிவின் (Sermon on the Mount) தொடக்கப் பகுதியாகும். இதில் இயேசு உலகம் நினைக்கும் வெற்றியின் அளவுகோலை அல்ல, இறையாட்சியில் உண்மையாகப் பேறுபெறுவோர் யார் என்பதை எடுத்துரைக்கிறார்.
சிந்தனைக்கு.
இந்தப் பேறுபெற்றோர் வாக்குறுதிகள் உலக மதிப்பீடுகளை மாற்றுகின்றன. செல்வம், அதிகாரம், புகழ் ஆகியவை அல்ல; மாறாக பணிவு, இரக்கம், தூய்மை, நீதி, சமாதானம் ஆகியவற்றோடு வாழ்பவர்களே இறைவனின் பார்வையில் உண்மையான பேறுபெற்றோர் என இயேசு போதிக்கிறார்.
அகந்தையை விட்டுவிட்டு இறைவனை நம்புதலும், பிறரிடம் இரக்கமும் மன்னிப்பும் காட்டுதலிலும், என்றும் நீதியையும் உண்மையையும் தேடுவதிலும், குடும்பம் மற்றும் சமூகத்தில் அமைதியை உருவாக்குவதிலும், நிறைவாக கிறிஸ்துவுக்காக வரும் சிரமங்களை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வதிலும் நமது கிறிஸ்தவ வாழ்வின் மையமாக அமைதல் வேண்டும்.
முதல் வாசகத்தின் செய்தியானது, இறைவன் தம் பணியாளர்களைக் கைவிடாமல் பாதுகாக்கிறார் என்பதோடு, இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்தைத் தருகிறது என்றும் கடினமான சூழ்நிலைகளிலும் இறைவனின் பராமரிப்பிலும் அருளிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் நாம் நினைவூட்டப்படுகிறோம். .
உண்மையில் உலகியல் அதிகாரம், செல்வம் அல்லது சுகபோகத்தை அனுபவிப்பவர்களுக்கு, இயேசுவின் மலைப்பொழிவு போதனைகள் மிகவும் சவாலானவை. ஆயினும், பலவீனமானவர்கள், ஏழைகள் அல்லது துன்புற்றவர்களுக்கு, பேறுபெற்றோர் போதனைகள் ஆழ்ந்த ஆறுதலை அளிக்கின்றன.
நமது வாழ்நாள் முழுவதும், நாம் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த எண்ணற்ற முரண்பட்ட கருத்துக்களை இவ்வுலகில் நாம் எதிர்கொள்கிறோம். ஆயினும் உலகியல் ஞானம் ஆரோக்கியமான மற்றும் வசதியான வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடும் என்றாலும், இறை ஞானத்தால் மட்டுமே உண்மையான மற்றும் நீடித்த மகிழ்ச்சிக்கான ஆன்மாவின் ஆழ்ந்த ஏக்கத்தை நிறைவேற்ற முடியும் என்பது தெளிவாகிறது.
நமது பலவீனமானது நமது சிந்தனையை மங்கச் செய்து, நமது மனவுறுதியைப் பலவீனப்படுத்துகிறது. இதனால், நாம் விரும்பும் நிறைவை நோக்கிய உண்மையான பாதையைக் கண்டறிவது கடினமாகிறது. இத்தகைய பலவீனத்தை நாம் போராடி மேற்கொள்ள வேண்டும்.
இறைவேண்டல்;
ஆண்டவரே, உமது வழியை அறிந்துகொள்ளும் ஞானத்தையும், அதை உண்மையுடன் பின்பற்றும் அருளையும் எனக்குத் தந்தருளும். ஆமென்
.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452