கடவுளின் தயாளத்தில் நம்பிக்கை | ஆர்கே. சாமி | Veritas Tamil

13 ஜனவரி 2026
பொதுக்காலம் முதல் வாரம் – செவ்வாய்

1 சாமுவேல்  1: 9-20
மாற்கு  1: 21-28


கடவுளின் தயாளத்தில் நம்பிக்கை ! 


முதல் வாசகம்.


 இந்த வாசகம் சாமுவேலின் பிறப்பு கதையின் ஆரம்பத்தை விவரிக்கிறது. இது குழந்தை பேறு  இல்லாததால் மிகவும் துயரமடைந்த அன்னா என்ற பெண்ணை மையமாகக் கொண்டுள்ளது. பண்டைய இஸ்ரயேலில், குழந்தைகளைப் பெறுவது - குறிப்பாக ஒரு மகனைப் பெறுவது - எதிர்காலத்திற்கான ஆசீர்வாதமாகவும் பாதுகாப்புக்கான வழிமுறையாகவும் கருதப்பட்டதால் அன்னா தன்நிலை கண்டு துயருற்றாள். குழந்தை பாக்கியத்திற்காக கடவுளிடம் மன்றாடி வந்தாள். அவளுடைய மன்றாட்டு வெறும் வார்த்தைகள் அல்ல, அது அவளுடைய இதயத்திலிருந்து ஊற்றெடுத்தது.

கடவுளுக்கு அவள் செய்த உறுதிமொழி யாதெனில்,  கடவுள் அவளுக்கு ஒரு மகனைக் கொடுத்தால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருடைய சேவைக்காக முழுமையாக அர்ப்பணிப்பாள் -எனபதும்  எந்த சவரக்கத்தியும் அவன் தலையைத் தொடாது என்பதுமாகும். 

அவள் உதடுகளை மட்டும் அசைத்துக்கொண்டு  குருவாகிய  எலி அவள் குடிபோதையில் இருப்பதாகத் தவறாக நினைக்கிறார்.  


நற்செய்தி.
  

இன்றைய நற்செய்தியில், இயேசு கப்பர்நாகூமில் தனது நற்செய்தி பணியைத் தொடங்குகிறார். ஓய்வுநாளில், தொழுகைக்கூடத்திற்குச் சென்று  மக்களுக்குப் போதித்ததையும், அவரது போதனையானது மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோரனையில் இருந்ததாகவும் மாற்கு பதிவுச் செய்துள்ளார். எனவே, அவரது  போதனை மக்களுக்கு மேலும் ஆச்சரியத்தை மூட்டியது என்றும் மாற்கு விவரிக்கிறார்.

அத்தருணத்தில்,   அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதன் அவரை எதிர்கொண்டு, அவரை "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று அழைக்கவே,   அந்த மனிதனை விட்டு வெளியேறும்படி கட்டளையிடவே, அசுத்த ஆவி கீழ்ப்படிந்து அந்த மனிதனை விட்டு வெளியேறியது.  மனிதன் விடுவிக்கப்பட்டான். 

அங்கு கூடியிருந்த மக்கள் தங்களுக்குள் பிரமிப்பாலும் ஆச்சரியத்தாலும் திகத்து நின்றனர்.  இயேசு   அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவை அவருக்குக் கீழ்ப்படிகின்றன எனும்  இயேசுவைப் பற்றிய செய்தி கலிலேயா முழுவதும் வேகமாகப் பரவியது என்ற மாற்கு இப்பகுதியை நிறைவு செய்கிறார். 


சிந்தனைக்கு.

 
இன்றைய நற்செய்தியில் ஒரு முக்கியமான விடயத்தை நாம் அறிய வருகிறோம்.  இயேசு கடவுளின் சித்தத்தைப் பற்றி வேறு யாரோ கூறியதிலிருந்து அல்லது கேள்விப்பட்டதை  கற்பிக்கவில்லை - அவர் கடவுளின் திருவுளத்தை தானே வெளிப்படுத்துகிறார். அவர இறைவாக்கினர்களை மேற்கோள்காட்டி போதிக்கவில்லை.   

 இது இயேசு கடவுளைப் பற்றிய வெறும் போதகராக இல்லாமல், நம்மிடையே உயிருடன் இருக்கும் கடவுளின் வார்த்தை என்பதைக் காட்டுகிறது. அடுத்து, அசுத்த ஆவியால் பாதிக்கப்பட்ட மனிதனை குணப்படுத்துவதன் மூலம், மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கும் கண்ணுக்குத் தெரியாத ஆன்மீக சக்திகளின் மீது தனக்கு அதிகாரம் இருப்பதை இயேசு நிரூபிக்கிறார்.   இது அவரது பணி வெறும் கற்பித்தல் மட்டுமல்ல, ஆன்மீக விடுதலையையும் வெளிப்படுத்துகிறது என்பதை நாம் அறிகிறோம். 

இயேசு, கடவுளின் ஒரே மகனாக மட்டுமல்ல, தந்தை மற்றும் தூய ஆவியாருடன்  இணைந்து ஒரே கடவுளாகவும் படைப்பாளராகவும் உள்ளரா என்பதை நாம் அறிவோம்.  இந்த உண்மை இன்றைய நற்செய்தியில் வெளிப்படுவதை மனதில் நிறுத்தவ வேண்டும். 

இயேசு கப்பர்நாகூமில் உள்ள தொழுகைக்கூடத்தில் நுழைந்தபோது, அவருடைய போதனை மக்களை ஆச்சரியப்படுத்தியது. மறைநூல் அறிஞர்கள்  தங்கள் மூதாதையர்களின் மரபுகளையும் மற்றவர்களின் விளக்கங்களையும் நம்பி கற்பித்தனர். இங்கே, இயேசு தெய்வீக அதிகாரத்துடன் பேசினார். வேறுபட்ட போதனை. இயேசு பத்தோடு பதினொன்று அல்ல.


நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலத்தை தொடங்கும்போது, இயேசுவின்   பல அதிகாரப்பூர்வ போதனைகளைக் கேட்டு உள்வாங்க வேண்டிய ஒரு பருவத்தில் நுழைகிறோம் என்பதை நினைவில் கொள்வோம். நம்மைத் தடுத்து நிறுத்தும் பயம், பாவம், தவறான நம்பிக்கைகள் மற்றும் கடவுளின் குழந்தைகளாக முழுமையாக வாழ்வதைத் தடுக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்திலிருந்தும்  இயேசு நம்மை விடுவிக்கிறார் என்பதை ஏற்று வாழ்வோம். 

இறைவேண்டல். 


ஆண்டவரே, உமது தெய்வீக அதிகாரத்தால் என்னோடு பேசுவீராக, என் இதயத்தையும் என்னைச் சுற்றியுள்ள உலகத்தையும் பாதிக்கும் பல தீய ஆவிகளை எனக்கு எண்பிப்பீராக, ஆமென். 


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452