யூபிலி ஆண்டில் 3 கோடியே 35 லட்சத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகள் ரோமுக்கு வருகை !| Veritas Tamil

யூபிலி ஆண்டின் போது, 185 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 கோடியே 35 லட்சம் (33.5 மில்லியன்) திருப்பயணிகள் ரோமுக்கு பயணம் செய்துள்ளதாக,  அறிவிப்புத் துறையின் (Dicastery for Evangelization) துணைத் தலைவர் (Pro-Prefect) மற்றும் யூபிலிக்கான திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பாளருமான பேராயர் ரினோ ஃபிசிகெல்லா தெரிவித்தார். ஜனவரி 5 அன்று வத்திக்கானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கடந்த யூபிலி ஆண்டின் முழுமையான மதிப்பாய்வுடன் அவர் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

“புனித ஆண்டின் போது உலகம் முழுவதும் ரோமுக்கு வந்தது,” என்று பேராயர் ஃபிசிகெல்லா கூறினார். முன்பு ரோமா ட்ரே பல்கலைக்கழகம் சுமார் 3 கோடி 10 லட்சம் திருப்பயணிகள் வருவார்கள் என கணித்திருந்த நிலையில், இறுதி எண்ணிக்கை அந்த மதிப்பீட்டை மீறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், திருஅவையுடன்  நெருக்கமாக இணைந்து பணியாற்றிய உள்ளூர் குடிமக்கள் நிர்வாக அதிகாரிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பொதுவாக “யூபிலி முறை” என அழைக்கப்படும் இந்த ஒத்துழைப்பு, ஆண்டு முழுவதும் நிகழ்வுகளைச் சிறப்பாக ஒழுங்குபடுத்தவும், தேவையான அடித்தள வசதிகளை அமல்படுத்தவும் உதவியது.

திருப்பயணிகளில் பெரும்பாலானோர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்; மொத்த எண்ணிக்கையில் 62% ஐரோப்பாவிலிருந்து வந்தனர், இதில் இத்தாலியே அதிக பங்கேற்பை பதிவு செய்தது. வட அமெரிக்கா 17% பங்களிப்புடன் அடுத்த இடத்தில் இருந்தது. இத்தாலிக்கு அடுத்ததாக, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஸ்பெயின், பிரேசில் மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலிருந்து அதிகமான திருப்பயணிகள் வந்தனர்.

ஆன்மீக புதுப்பிப்பை மையமாகக் கொண்ட யூபிலி

பங்கேற்பு எண்ணிக்கைகள் மற்றும் 35 முக்கிய நிகழ்வுகளைத் தாண்டி, யூபிலியின் ஆழ்ந்த அர்த்தம் அதன் ஆன்மீக தாக்கத்தில் இருப்பதாக திருச்சபை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
“யூபிலியின் அடிப்படையாக இருந்த ஆன்மீக பரிமாணம், ஜெபத்திற்கும் மனமாற்றத்திற்கும் ஆழ்ந்த ஆசையுடன் பயணிக்கும் மக்களை நாம் காண வழிவகுத்தது,” என்று பேராயர் ஃபிசிகெல்லா கூறினார்.

பாப்பரசர் பேராலயங்களிலும், புனித படிக்கட்டுகள் (Holy Stairs) உள்ளிட்ட பிற ஜெபத் தலங்களிலும் பங்கேற்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக அவர் தெரிவித்தார். “அறிக்கையிடல் (Confession) அதிகரித்துள்ளது; முழுமையான மன்னிப்பை வழங்கும் யூபிலி அருள்வரமான இண்டல்ஜென்ஸ் அனைவரையும் சென்றடைந்துள்ளது,” என்றும் அவர் கூறினார்.

யூபிலியின் இதயமாக ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள்

விழாக்களின் பின்னணி மனித முயற்சிகளை சுட்டிக்காட்டிய பேராயர் ஃபிசிகெல்லா, 7,000 தன்னார்வலர்களின் சேவையை சிறப்பாகக் குறிப்பிட்டார். இதில் 5,000 பேர் ஆண்டு முழுவதும் பணியாற்றியதாகவும், மேலும் 2,000 மால்டா ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு பாப்பரசர் பேராலயங்களில் முதலுதவி சேவைகளுக்கு ஆதரவளித்ததாகவும் கூறினார். “எளிதில் தனிநபர்மயமாகும் இந்த காலத்தில், அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது” என்று அவர் பாராட்டினார்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு பங்களிப்புகள்

பெரும் அளவிலான குடிமக்கள் ஒருங்கிணைப்பைப் பற்றி விளக்கிய லாசியோ மண்டலத்தின் தலைவர் பிரான்செஸ்கோ ரொக்கா, “யூபிலி முறை” போட்டியை அல்ல, அமைதியான ஒத்துழைப்பை ஊக்குவித்ததாக தெரிவித்தார்.
“அவசர மருத்துவ சேவைகள் 5,80,000 தலையீடுகளை மேற்கொண்டன; இது முந்தைய ஆண்டைவிட 40,000 அதிகம்,” என்று அவர் கூறினார். அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான வருகை 16 லட்சமாக உயர்ந்ததாகவும், இது 2024 ஐ விட 1 லட்சம் அதிகம் என்றும் அவர் சேர்த்தார்.

செய்தியாளர் சந்திப்பை முடிவுறுத்திய ரோமின் பிரிஃபெக்ட் லாம்பெர்டோ ஜியானினி, பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட அணுகுமுறையை விளக்கினார்.
“எங்களுக்கு பாதுகாப்பும் அமைதியும் தேவைப்பட்டது; அதற்காக, இராணுவமயமாக்குவதன் மூலம் அல்ல, பிரச்சினைகள் உருவாகாமல் தடுப்பதன் மூலம் பாதுகாப்பை வெளிப்படுத்த முயன்றோம்,” என்று அவர் கூறினார். இளைஞர் யூபிலியை நினைவுகூர்ந்த அவர், “சர்க்கஸ் மேக்சிமஸில் அமைக்கப்பட்ட அறிக்கையிடும் அறைகள் (Confessionals) என்னை மிகவும் பாதித்தது. அது அனைவரின் நினைவிலும் நிலைத்திருக்கும் ஒரு தனித்துவமான அனுபவம்” என்று தெரிவித்தார்.