உலகப் பற்று அற்ற வாழ்வே சீடத்துவ வாழ்வு! | ஆர்கே. சாமி | Veritas Tamil

12 ஜனவரி 2026
பொதுக்காலம் முதல் வாரம் - திங்கள்

1 சாமுவேல்  1: 1-8
மாற்கு  1: 14-2


உலகப் பற்று அற்ற வாழ்வே சீடத்துவ வாழ்வு!
 

முதல் வாசகம்.

இனைறய முதல் வாசகத்தில், எல்கானா என்பவருக்கு  இரு மனைவிகளான அன்னா மற்றும் பெனின்னா என்ற இருவர்  இருந்தனர்.    எல்கானா அன்னாவை மிகவும் அன்பு செய்தார். வருடாந்திர பலியில் அவளுக்கு ஒரு சிறப்புப் பங்கைக் கொடுப்பது வழக்கம்.  ஆனால் அன்னா குழந்தை பேறு அற்றவள் என்பதால், மிகவும் கலக்கமுற்றாள், வருந்தினாள்.

அக்காலத்தில், இஸ்ரயேலின் பண்பாட்டில் குழந்தை பேறு அற்றவர்கள் சமூகத்தில் தாழ்த்தப்படுவர்.  எனவே, அவள்  சமூக களங்கத்தையும் உணர்ச்சி ரீதியான வேதனையையும் கொண்டிருந்தாள்.  இதற்கிடையில், குழந்தைகளைப் பெற்ற பெனின்னா, அன்னாவைக் கேலி செய்கிறார், இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது. இச்சூழலில் கணவன் எல்கானா அவளுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார் என்று அறிகிறோம்.


நற்செய்தி.
  

இன்று, ஆண்டவரின் திருமுழுக்கோடு, நாம் பொதுக் காலத்திற்குள் நுழைகிறோம்.  மாற்கு பதிவு செய்தபடி இயேசுவின் முதல் நற்செய்தி அறிவிப்பைக் கேட்கிறோம். “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று இயேசு, திருமுழுக்கு யோவான்  கைது செய்யப்பட்ட பிறகு,  தமது நற்செய்திப் பணியைத் தொடங்குகின்றார்.

தொடக்கமாக, கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது, கடலில் வலை வீசிக்கொண்டிருந்த சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டு,   “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார்.

சிந்தனைக்கு.

இயேசுவின் முதல் அழைப்பை இன்று வாசிக்கிறோம். ஆழ்ந்து கவனித்தால் அவரது அழைப்பின் தன்மை விளங்கும். அவர் தம் சீடரை  மிகவும்  எளிய ஆனால் சக்திவாய்ந்த வார்த்தைகளால் அழைக்கிறார்:

"என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்’ என்பதில்,  அழைப்பு என்றாலும், ‘ஆக்குவேன்’ என்பது ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றை உருவாக்குவதைக் குறிக்கிறது. அவர்கள் எளியவர்கள். செல்வ சீமான்களோ, உயர் படிப்பாளிகளோ, ஞானிகளோ அல்லது உயர் இலட்சியங்களைக் கொண்டவர்களோ அல்ல.  இயேசுவின் இந்த அழைப்பு தனிப்பட்டது என்றாலும், அது மாற்றத்தை ஏற்படுத்தியது. இயேசு அவர்களை அறிவுபூர்வமாகப் பின்பற்ற அழைக்கவில்லை - அவர் அவர்களை உறவு மற்றும் பணிக்குள் அழைக்கிறார். நாள் ஊதியமோ, மாத ஊதியமோ அல்லது பதிவியோ அவர் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. அழைக்கப்பட இருவரும் அவரிடம் இவற்றைக் குறித்துப் பேரம் பேசவில்லை. 

அவ்வாறே, இயேசு நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்திருக்கிறார். (யோவான் 15:16). சாதாரண வாழ்க்கையிலிருந்து வந்த முதல் சீடர்களை அழைத்தது போல, நம்மை அழைக்கிறார். ஆம்,  கடவுளின் அரசில்  முழுமையாக வாழ்வதிலிருந்து நம்மைத் தடுக்கும் எதையும் விட்டுவிட அழைக்கிறார். 

கடவுளின் அரசு நெருங்கிவிட்டது:

இது வெறும் எதிர்கால நம்பிக்கை அல்ல - இது இயேசுவின் மூலம் நம் வாழ்வில் நுழையும் ஒரு நிகழ்கால நிகழ்வுக்குரியது. இன்றைய வாழ்வுக்குரிய அழைப்பு. மேலும், இயேசுவைப் பின்பற்றுவது என்பது அறிவுபூர்வமாக நம்புவதை விட மேலானது. இதில், நமது செயல்கள், விருப்பங்கள்  மற்றும் முன்னுரிமைகளுக்கு  முக்கியத்தவம் என்பதல்ல. 

உலகம் தோன்றியதிலிருந்து திட்டமிடப்பட்ட அனைத்தும், பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும் இந்த இறையாட்சி நெருங்கி வந்துவிட்ட தருணத்தை சுட்டிக்காட்டின. கடவுளின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் காலம் இது.  இயேசு யார் என்று அறியாமலே, அவர்  அருகில் நடந்த பலர், அவரது மனத்தாழ்மையை மகிமைப்படுத்தினர்.  இன்று நாமும் அத்தகைய வாழ்வுக்கு அழைக்கப்படுகிறோம். நமது சொல்லாலும் செயலாலும், சாட்சிய வாழ்வாலும் ஆண்டவரை மாட்சிபடுத்த வேண்டும். இதுவே நமக்கான அழைப்பு.

நமது வாழ்க்கையில் உள்ள "வலைகள்" அவரை முழுமையாகப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத்  தடுக்கின்றனவா? நம்மைத் தடுக்கும் உலக இணைப்புகள், பற்றுகள் அல்லது கவனச்சிதறல்கள் ஏதேனும் உள்ளனவா? அவற்றிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ஆண்டவரின் துணைய நாடுவோம். உலகப் பற்று அற்ற வாழ்வே உண்மை சீடத்துவ வாழ்வு.


இறைவேண்டல். 


என் ஆண்டவரே, நீர் உமது பொதுப் பணியைத்  தொடங்கியபோது,  உமது அழைப்பை நம்பிக்கையோடு கேட்டவர்களின் மனங்களிலும் இதயங்களிலும் உமது வார்த்தைகள் எதிரொலித்தன. இப்போதும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்,   நீர் என்னை அழைக்கும்போது, முழுமையாகவும் தயக்கமின்றியும் பதிலளிக்க எனக்கு வல்லமை தாரும். இயேசுவே, நான் உம்மில் பற்றுறுதி கொள்கிறேன். ஆமென்.


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452