ஆண்டவரில் பற்றுறுதி- சீடத்துவத்தின் அடித்தளம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

12 பிப்ரவரி 2026                                                                                                                  
பொதுக்காலம் 5ஆம் வாரம் –வியாழன்

1 அரசர் 11: 4-13
மாற்கு   7: 24-30 

 
ஆண்டவரில் பற்றுறுதி- சீடத்துவத்தின் அடித்தளம்!

முதல் வாசகம்.


இந்தப் பகுதி தாவீதின் மகனான சாலமோன் அரசரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணத்தை விவரிக்கிறது. சாலமோன் தனது ஆட்சியை மிகுந்த ஞானத்துடனும் கடவுளுக்கு விசுவாசத்துடனும் தொடங்கினாலும், அவர் படிப்படியாக அந்த நம்பிக்கை வாழ்விலிருந்து எவ்வாறு விலகிச் சென்றார் என்பதை வாசகம் விவரிக்கிறது. 

சாலமோனின் இதயம் அவரது அன்னிய நாட்டு மனைவியரால் திசைதிருப்பப்பட்டது அவர் வயதாகும்போது, சாலமோனின் பல அந்நிய மனைவிகள் அவரை தங்கள் கடவுள்களின் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தனர். இஸ்ரயேலின் கடவுளான யாவேவுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதற்குப் பதிலாக, அவரது இதயம் பிளவுபட்டது.

சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்கோமையும் வழிபடலானார்.   அந்த தெய்வங்களுக்கு ஆலயங்களைக் கட்டினார், மேலும் அவர் தனது அனைத்து மனைவிகளின் தெய்வங்களையும் வழிபட்டார்.   

அவரை மட்டுமே வழிபட வேண்டும் என்ற கடவுளின் கட்டளைக்கு சாலமோன்  கீழ்ப்படியாததால், கடவுள் கோபமடைந்தார். சாலமோனின் மகனிடமிருந்து அரசாட்சி பறிக்கப்படும் என்றும், தாவீது மற்றும் எருசலேமுக்காக ஒரு கோத்திரத்தை மட்டுமே விட்டுவிடுவார் என்றும் அவர் அறிவித்தார்.

நற்செய்தி.

இயேசு இஸ்ரயேலின் பாரம்பரிய எல்லைகளுக்கு வெளியே உள்ள தீர் மற்றும் சீதோன் பகுதிகளுக்குச் சென்று, அமைதியை எதிர்பார்த்து ஒரு வீட்டிற்குள் செல்கிறார். இருப்பினும், அவரது வருகையைப் பற்றிய செய்தி பரவுகிறது. அப்போது திடீரென ஒரு   யூதரல்லாத புறவினத்துப்   பெண் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை அணுகுகிறாள். அவளுடைய மகள் ஒரு அசுத்த ஆவியால் பீடிக்கப்பட்டிருந்தாள்.  தன் மகளைக் குணப்படுத்தும்படி இயேசுவிடம் கெஞ்சும்போது, இயேசு, “முதலில்  பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுவது சரியல்ல” என்று பதிலளிக்கிறார்.

அந்தப் பெண் அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டாலும், மனத்தாழ்மையுடனும் “ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தார்
அவளுடைய நம்பிக்கையின் ஆழத்தை இயேசு உணர்ந்து, உறுதியுடன் பதிலளித்து, பேய் தன் மகளை விட்டுச் சென்றுவிட்டது என்று கூறுகிறார். அந்தப் பெண் வீடு திரும்பியதும், தன் மகள் குணமடைந்திருப்பதைக் காண்கிறாள்.

சிந்தனைக்கு.

இயேசுவின் நற்செய்தி பணி  கடவுளின் இரக்கமும் மீட்பும்  எல்லா மக்களுக்கும் நீண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. ஒரு கிரேக்க  சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த பெண்ணின் நம்பிக்கை கலாச்சார மற்றும் சமயத் தடைகளைத் தாண்டி இயேசுவை அண்டி வருவதை வெளிப்படுத்துகிறது.

அந்தப் பெண் இயேசுவுடன் வாதிடுவதில்லை, மாறாக மனத்தாழ்மையுடன் பதிலளிக்கிறாள்.  இயேசுவின் பணியின் முன்னுரிமை யூதர்களுக்கே என்பதை அறிந்திருந்த மோதும்,  தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாள். அவளுடைய விடாப்பிடியான மற்றும் மரியாதைக்குரிய நம்பிக்கை, அவளுடைய கோரிக்கையை நிறைவேற்ற இயேசுவைத் தூண்டுகிறது.

அவள் கிறிஸ்துவின் குணப்படுத்தும் சக்தியின் "சிறு துண்டுகள்" கூட போதுமானது என்பதை ஏற்றுக்கொள்கிறாள். இங்கே மற்றொரு விடயமும் உண்டு. இயேசு ‘நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல’ என்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால், இயேசு அந்தப் பெண்ணை மரியாதைக் குறைவாக நடத்தினது போல் தோன்றும். இதற்குக் காரணம்...
பண்டைய யூத உலகில், இன்று போல் நாய்கள் வீட்டு செல்லப் பிராணிகளாக இல்லை. அவை பெரும்பாலும்  காட்டு விலங்குகளாகவும் அசுத்தமானவையாகவும் ஆபத்தானவையாகவும் கருதப்பட்டன. எனவே, விருத்தசேதனம் செய்யாத அன்னியர்களை, புறவினத்தாரை யூதர்கள் ‘நாய்களாக’ விமர்சிந்தனர். இயேசுவுக்கு இதில் உடன்பாடு இருந்திருக்க முடியாது. ஆனாலும் அந்த பெண் அன்னியவள், யூதர்களால் வெறுக்கப்பட்டவள் என்பதை வெளிப்படுத்த இயேசு நடைமுறையில் உள்ள செற்றொடரை பயன்படுத்துகிறார். ஆனாலும், யூதர்களைவிட (பரிசேயர்கள்) இவளிடம் இருந்த நம்பிகையைப் பாராட்டி அவளுக்கு உதவி செய்கிறார்.
 
முதல் வாசகத்தில், சாலமோனிடம் கடவுளின்  மிகுந்த ஆசீர்வாதங்களும் ஞானமும் இருந்தபோதிலும் - தனது இதயத்தில் அன்னிய தெய்வங்களுக்கு இடமளித்தார். அந்நிய கடவுள்கள் மற்றும் உறவுகளால் பாதிக்கப்பட்டதன்  மூலம் அவர் முழு மனதுடன் கடவுள் உறவிலிருந்து விலகிச் சென்றார். அவரது துரோகம் நியாயத்தீர்ப்புக்கும் இழப்புக்கும் வழிவகுக்கிறது.

நற்செய்தியில், ஒரு புறஜாதிப் பெண் - இஸ்ரயேலின் உடன்படிக்கைக்கு அப்பாற்பட்டவள் - இயேசுவில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாள். அவள் இயேசுவின் இரக்கத்தில்  நம்பிக்கையுடனும்  விடாப்பிடியாகவும் இருக்கிறாள், சாலமோனிடம் இத்தகைய அசைக் முடியாத நம்பிக்கை யாவே கடவுள் மீது இல்லை. 

சாலமோனின் கதை, பிளவுபட்ட நம்பிக்கை மற்றும் கடவுளுக்கு முதலிடம் அளிக்காத குற்றம்  போன்றவற்றின் ஆபத்துகளைப் பற்றி அறிகிறோம்.  சாலமோனைப் போல, நாமும் உலக ஆசைகளுக்காக இயேசுவில் கொண்ட நம்பிக்கையிலருந்து  விலகிச் செல்கிறோமா? அல்லது  நம்மை நாமே சோதித்துப் பார்த்து, நற்செய்தியில் வரும் பெண்ணைப் போல, நம்பிக்கையுடன், மனத்தாழ்மை மற்றும் விடாமுயற்சியுடன் இயேசுவை அண்டிக்கொள்வதில் கருத்தூன்றி வாழ்கிறோமா? 

இறைவேண்டல்.

ஆண்டவரே. உம்மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டோரை என்றும் கைவிடாதவரே, நான் என்றும் உம்மில் பற்றுறுதி (trust)  கொண்டு வாழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.

 

ஆர்கே. சாமி (மலேசியா)
 
+6 0122285452