ஈடு இணையற்ற கடவுளின் இரக்கம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil
9 ஜனவரி 2026
திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி
1 யோவான் 5: 5-13
லூக்கா 5: 12-16
ஈடு இணையற்ற கடவுளின் இரக்கம்!
முதல் வாசகம்
இன்றைய முதல் வாசகத்தில், புனித யோவான் இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன் என்று உறுதிபட கூறுகிறார். மேலும், இயேசு கிறிஸ்து நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என்றும், அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என்பதற்குத் தூய ஆவியார் சான்று பகர்கிறார் என்ற படிப்பினையைத் தருகிறார்.
நிறைவாக, இயேசு கிறிஸ்து நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என்று சான்று பகர்வதற்குத் தூய ஆவியும், நீரும், இரத்தமும் என மூன்று உள்ளன என்கிறார் யோவான்.
நற்செய்தி.
நற்செய்தியில் ஒரு தொழுநோயாளி இயேசுவிடம் வந்து அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என மன்றாடினார். இயேசுவும், அவர் மீது இரக்கம்கொண்டு கையை நீட்டி, அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று என லூக்கா குறுப்பிட்டு எழுதியுள்ளார்.
நிறைவாக, அவரை நோக்கி, “நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று கட்டளையிட்டார் இயேசு.
சிந்தனைக்கு,
நற்செய்தியில் இயேசுவின் தன்னடக்கத்தைக் காண முடிகிறது. மக்களின் பாராட்டைபைப் பெறுவது அல்ல, மாறாக, ஒதுக்கப்பட்டவராக ஊருக்கு வெளியே துன்புறும் ஒருவர் மீது இரக்கம் காட்டுவதும் உதவுவதும் பெரிதென கொள்கிறார். இயேசு வல்ல செயல்கள் புரிவது விளம்பத்திற்காக அல்ல, தந்தையின் இரக்கத்தையும், அன்பையும் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறத.
வாழ்க்கை எப்போதும் எளிதானது அல்ல. நாம் அனைவரும் வலி, விரக்தி, சந்தேகம், வெறுப்பு, மன கசப்பு, இகழ்ச்சி போன்றவற்றை அனுபவிக்கும் நேரங்கள் உள்ளன. இவற்றை கடவுள் ஏன் அனுமதித்தார் மற்றும் எதிர்மறையான அனுபவங்களின் தாக்கத்தைத் தடுக்க அல்லது குறைக்க கடவுள் ஏன் எதையும் செய்யவில்லை என்று நாம் கலங்குவதும் கடவுளைக் குறைகூறுவதுமுண்டு. அப்படியென்றால் நம் கடவுள் இரக்கமற்றவரா?
நற்செய்தியில், தொழுநோயாளி இயேசுவை அறைகுறையான நம்பிக்கையில் நாடவில்லை. அவரது திருவுளத்திற்குப் பணிந்து (நீர் விரும்பினால் என்று ) வேண்டினார். எனவே, நமது தேவைகள் எதுவாயினும் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நிறைவேறுவதை விரும்ப வேண்டும். நாம் கடவுளுக்குக் கட்டளையிட முடியாது மாறாக, அவரது விருப்பத்திற்கு அடிபணிய வேண்டும்.
குணமடைய வேண்டும் என்ற தொழுநோயாளியின் வேண்டுதலும் மனத்தாழ்மைக்கும் நம்பிக்கைக்கும் ஒரு எடுத்துக்காட்டு. தன்னைக் குணப்படுத்தும்படி அவர் இயேசுவிடம் நேரடியாகக் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, இயேசுவின் குணப்படுத்தும் அருளில் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி, "ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணப்படுத்த உம்மால் முடியும்" என்று கூறினார்.
"சரி, இதுவே நான் உங்களுக்குக் இரக்கம் காட்டப் போகிற கடைசி முறை " என்று கடவுள் ஒருபோதும் சொல்பவர் அல்ல. திருப்பாடல் 118 இல் அதன் ஆசிரியர், “ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு” என்கிறார். ஆம், கடவுளின் இரக்கத்திற்கு ஒரு முடிவு இல்லை. எல்லா துன்ப நேரத்திலும் அவரை அண்டி வருவோரை அவர் கைவிடுவதில்லை. கடவுளின் இந்த தன்மையை இயேசு இன்று வெளிப்படுத்துகிறார்.
மரணம், துன்பம் மற்றும் சோகம் ஆகியவை மனிதனின் ஒரு பகுதி என்பதை நாம் உணர வேண்டும். நம்மில் பெரும்பாலோர் துன்பத்தால் அவதியுறுகிறோம், சோகம் நம்மைப் பாதிக்கிறது என்ற உண்மையை நம்மால் தள்ளிப்போட முடியாது. மேலும் நாம் நலமாக வாழ்கிறோம் என்பதால் நாம் "அதிர்ஷ்டசாலிகள்" அல்லது பேறுபெற்றோர் என்று மார்த்தட்டிக்கொள்ளவும் இயலாது. வதல்ல. அதிர்ஷ்டத்திற்கும் நமது நல வாழ்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதிர்ஷ்டத்தில நம்பிக்கைக் கொள்பவர் கிறிஸ்தவராக இருக்க முடியாது.
இயேசு கிறிஸ்து நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என்பதில் நம்பிக்கை கொண்டு வாழ்வதும், நம்முடைய வாழ்விற்கு அடிப்படையும் ஆதாரமாகவும் இருக்கும் கடவுளின் இரக்கத்தை ஆழமாய் உணர்ந்தவர்களாய், நாம் அதை மற்றவருக்கு வெளிப்படுத்துதவதும் நமது பணியென உணர்வோமானால், கடவுளின் இரக்கம் நம் மீது நிழலிடும். இயேசு கிறிஸ்து அனுபவித்தத் துன்பங்கள் வாயிலாக நமது துன்பங்களின் வேதனையை நன்கு அறிந்தவர் கடவுள். ‘எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்’ (விப 3:7) என்றவர் நம் கடவுள்.
இறைவேண்டல்.
நீராலும் இரத்தத்தாலும் வந்தவரான இயேசு ஆண்டவரே, எனது துன்பத்திலும் துயரத்திலும் என்னைச் சூழ்தவராக நீர் இருந்து தந்தையின் இரக்கத்தை எமக்கு வெளிப்படுத்தும் ஆண்டவரே, உமக்கு நன்றி. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
+6 0122285452