ஆண்டவரின் வலப்பக்கம் நமது தேர்வாகட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

23 பிப்ரவரி 2026
தவக்காலம் முதல் வாரம் - திங்கள்
லேவியர் 19: 1-2, 11-18
மத்தேயு 25: 31-46

 ஆண்டவரின் வலப்பக்கம் நமது தேர்வாகட்டும்!

முதல் வாசகம்.

நாம் மற்றவர்களை நடத்தும் விதம்தான்  கடவுளுடனான நமது உறவைப் பிரதிபலிக்கிறது என்பதை இன்றைய வாசகங்கள் உணர்த்துகின்றன. லேவியர் நூலில்  இருந்து, பத்து கட்டளைகளின் விரிவாக்கத்தைக் கேட்கிறோம்.  நமது அண்டை வீட்டாரின் அன்பை பராமரிக்க  சில நடைமுறை வழிகளை நமக்கு வழங்குகிறது. 
பெரும்பாலான கட்டளைகள ‘செய்யக்கூடாது....’ போன்ற எதிர்மறையான    வடிவத்தில் இருந்தாலும்  நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை அறிந்துணர அவை நமக்கு உதவுகின்றன. குறிப்பாக  11 முதல் 18 வரையிலான வசனங்களை நாம் கவனத்தில் கொண்டால் “மற்றவர்களின் சொத்துக்களை மரியாதையுடன் நடத்துங்கள், நேர்மையாக இருங்கள், மற்றவர்களுடன்  நியாயமாக நடந்துகொள்ளுங்கள்,  நீங்கள் பணம் செலுத்த வேண்டியவர்களுக்குத் திருப்பிச் செலுத்துங்கள். ஊனமுற்றோரை கண்ணியத்துடன் நடத்துங்கள், அவர்களுக்கு உதவி தேவைப்படுவதால்  உதவுங்கள் போன்றவை கடவுள் தம் மக்களுக்கான படிப்பினையாகத் தருகிறார். 
நிறைவாக, ‘உங்களைப் போலவே உங்கள் அண்டை வீட்டாரையும் அன்பு செய்யுங்கள்’  என்பது பொதுவான அறிவுறுத்தலாக கடவுள் முன்வைக்கிறார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தி ஆண்டவரின் இறுதி நியாயத்தீர்ப்பு பற்றிய பகுதியாக உள்ளது.   விண்ணரசுக்குள் நாம் வரவேற்கப்படுவதற்கான அளவுகோல், ஏழைகளையும் வறியோரையும் எவ்வாறு நடத்தினோம் என்பதுதான். மற்றவர்களை நாம் கவனித்துக் கொள்வதிலும், அவர்களுக்கு சேவை செய்வதிலும்தான் நாம் கடவுள் மீது நம் அக்கறையையும் அன்பையும் காட்டுகிறோம் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார் ஆண்டவர். 
 
சிந்தனைக்கு.

நற்செய்தியில் இயேசு கூறும் உலக மக்கள் மீதான கடவுளின் நியாயத்தீர்ப்பு நாளுக்கும் ஆடுகளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று நாம் நினைக்கக்கூடும்.  பாலஸ்தீனம் போன்ற பாலைநில பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் மிகக் குறைவாக இருந்ததால், பகலில் ஆடுகளையும் செம்மறிகளையும் ஒன்றாகத்தான் ஓரிடத்தில் மேய்ப்பார்கள். அவற்றைப் பிரித்து  தனித்தினயாக  மேய்க்க போதிய இடம் கிடையாது. ஆனால்,  இரவு நேரத்தில், மேய்ப்பன் செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் அவற்றின் கொட்டகைகளுக்கு   ஓட்டி வரும்போது அவற்றை இனம் வாரியாகப் பிரித்து அடைப்பான். 

ஆடுகள் குணத்தால் சற்று முரடுத்தனமானவை.   ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டவை. யாராவது தங்கள் இடத்தில் ஊடுருவுகிறார்கள் என்று நினைக்கும் போதெல்லாம் அவை தங்கள் கொம்புகளால் தாக்க முற்படும். மாறாக, செம்மறி ஆடுகளோ, சாதுவானவை. 
 
ஆண்டவர், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இவற்றின் தன்மைகளைக் கொண்டு, இறுதி தீர்ப்பு  எப்படி இருக்கும் என்பதை விவிக்கிறார்.  இந்த மண்ணுலகில் நாம் எப்படி வாழ்கின்றோமா அதற்கேற்ற கைம்மாறுதான் விண்ணகத்தில் கிடைக்கும் என்பதை இயேசு எடுத்துரைக்கிறார்.  எனவேதான், மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவின் வார்த்தைகள் நம் மனதில் பசு மரத்தில் ஆணி அடித்தாற் போல் பதிய வேண்டும். 

இறுதியில், நாம் வாரம் எத்தனை திருப்பலிகளில் பங்கேற்றோம், ஆலயத்தில் எவ்வளவு பெரிய தொகை காணிக்கையாகப் போட்டோம் என்பதாக ஆண்டவரின் கேள்விகள் இருக்கப்போவதில்லை. திருப்பலிகள், சிலுவை பாதை போன்ற இறைவேண்டல் வழிபாடுகள் அனைத்தும் ஏழையாரின் உள்ளதோராக நம்மை உருமாற்றாவிடில், ஆண்டவரின் வலதுபக்கம் நாம் நிற்கப்போதில்லை. அங்கே தயவு தாட்சணியத்திற்கு இடமில்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோலத்தான் தீர்ப்பு இருக்கும். 

எனவேதான்,  ‘என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்’ (மத். 7:21) என்று அறிவுறுத்தியதை நினைவில் கொண்டு, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற மனிதர்கள் மத்தியில் மனிதநேயத்தோடு நடந்துகொள்வோம்.  மனித நேயம் நமது வாழ்வாக மாறட்டும்.

பெரும்பாலும், இவ்வுலக  வாழ்க்கையே ஒரு முடிவு என்பது போல் வாழ வேண்டும் என்ற ஆசை நம்மை ஆதிக்கம் செலுத்துவதால் நாம் தடுமாறுகிறோம். ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்று உறுதிபட கூறும் ஆண்டவர் நமது இறுதி தீர்ப்பு நாளில் அவரது வலப்பக்கம் சேர்க்கவே விரும்புகிறார். ஆனாலும் வலமா? இடமா? எது நமது இடம் என்பது நமது வாழ்வை மையமாகக் கொண்டது என்பதை மனதில் கொள்வோம். 

இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, தீர்ப்பு நாளில் நான் உமது வலப்பக்கம் நிறுத்தப்பட என்னில் மனிதநேயம் பெருக்கெடுக்க அருள்புரிவாராக. ஆமென்.

 
 
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்

+6 0122285452