சிலுவையைக் கிறிஸ்துவுடன் சுமப்போம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
19 பிப்ரவரி 2026
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன்
இ.சட்டம் 30: 15-20
லூக்கா 9: 22-25
சிலுவையைக் கிறிஸ்துவுடன் சுமப்போம்!
முதல் வாசகம்.
கடவுள் நமக்கு முன் இரு தேர்வுகளை முன்வைக்கிறார் என்பதை இன்றைய வாசகங்கள் நினைவூட்டுகின்றன. மோசே வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டை நெருங்கி வரும்போது, அவர் நுழையமாட்டார் என்று தெரிந்தும், அவர் இஸ்ரயேலர்களுக்கு ஒரு எளிய தேர்வை வழங்குகிறார்: அது வாழ்க்கை அல்லது மரணம்.
அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிதலையும் விசுவாசத்தையும் தேர்வுசெய்தால், அவர்கள் காலடி வைக்கும் வாக்களிக்கப்பட்ட நாடான கானானில் வாழ்க்கை, செழிப்பு மற்றும் கடவுளின் ஆசீர்வாதத்தை அனுபவிப்பார்கள். இருப்பினும், அவர்கள் கடவுளைக் கைவிட்டு மற்ற தெய்வங்களிடம் திரும்பினால், அவர்கள் விளைவுகளை அனுபவிப்பார்கள் - இறுதியில் நிலத்தில் பல இழப்புகளை எதிர்கொள்வர். எனவே, மோசே அவர்களும் அவர்களின் சந்ததியினரும் வாழ்ந்து செழிக்க "வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்" என்று வலியுறுத்துகிறார். ஆனாலும், முடிவை அவரவர் கையில் விட்டுவிடுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்களுக்குத் தம்முடைய இறையாட்சிக்கான பணியில், மற்றவர்களின் கைகளில் ஒப்படைக்கப்டும் அவரது துன்பமும் மரணமும் அடங்கும் என்று தெரிவிக்கிறார். அவருடன் ஒன்றித்து, அவரைப் பின்பற்ற விரும்புவோர் உண்மை வாழ்வான நிலைவாழ்வைப் பெறுவதற்காக துன்புற்று இறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்.
ஆனாலும், தேர்வு அவர்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் (நாமும்) ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்ற சில வேதனையான முடிவை எடுக்க வேண்டும் என்றும் என்றுமுள மகிழ்ச்சியான நிலைவாழ்வுக்கு சீடர்களின் முடிவெடுத்தல் இன்றியமையாதது எனும் படிப்பினை இன்று தரப்படுகிறது.
சிந்தனைக்கு.
இன்று தவக்காலத்தின் இரண்டாம் நாள். இயேசு அவர்தம் பாடுகளை முன்வைத்து, நம்மோடு பேசுகிறார். நற்செய்தியில் இயேசு அவரைப் பற்றிய நான்கு விடயங்களை முன்வைக்கிறார்.
1. மானிட மகன் 'பலவாறு துன்பப்படுவார்.
2. தம் சொந்த மக்களால் 'உதறித் தள்ளப்படுவார்.
3. அவர் 'கொலை செய்யப்படுவடுவார்.
4. அவர் 'உயிருடன் எழுப்பப்படுவார்.
இயேசு, அவர் அடையப்போகும் துன்பங்களையும் மரணத்தையும் வெளிப்படுத்தியப்பின், தன்னைப் பின்பற்றுகிறவர்கள், தன்னலம் துறக்கவும், சிலுவையைத் தூக்கவும், தொடர்ந்து பின்பற்றவும் வேண்டும் என்கிறார்.
இதன்படி, எவர் ஒருவர் தனது மண்ணக வாழ்க்கையைக் காப்பாற்ற விரும்புகிறாரோ அவர் தனது நிலைவாழ்வை இழப்பார். ஆனால், எவர் ஒருவர் தனது மண்ணக வாழ்க்கையை இயேசுவுக்காகவும் நற்செய்திக்காகவும் இழப்பாரோ, அவர் தனது நிலைவாழ்வை நிச்சயமாகத் தற்காத்து கொள்வார் என்பது இயேசுவின் அறிவுறுத்தலாக உள்ளது. இந்த இரண்டிலும் தேர்வு நமதாக உள்ளது.
நாம் சிலுவையை அன்பு செய்வதோடு சுமக்கவும் வேண்டும். சிலுவை நமக்கு ஓர் அலங்கரிப்புப் பொருள் அல்ல. அது நமது மீட்புக்கான உன்னத அடையாளமும் கருவியுமாகும். தூய ஆவியாருடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நம் வாழ்க்கையின் துன்பங்களை நமது மீட்பின் கருவிகளாக மாற்ற வேண்டும். இதற்கு இத்தவக்காலமே மிகவும் பொறுத்தமான காலம் என்கிறது திருஅவை.
தவறு செய்வது மனித இயல்பு அதிலிருந்து மீண்டு நற்செயல்களினால் நமது வாழ்வை நாம் மாற்றியமைக்க இக்காலம் அழைக்கிறது. அவரை நோக்கித் திரும்பி வரவும், மனம் மாறவும், அழைக்கப்படும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய எண்ணங்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் எண்ணங்களுக்கும் இடையே உள்ள தூரத்தை சிறிதளவாவது குறைக்க இந்த தவக்காலத்தை முழுமையாகப் பயன்படுத்துவோம்.
முதல் வாசகத்தில், வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையத் தயாராகும் இஸ்ரேலிடம் கடவுள் அறிவுறுத்தலை மோசே எடுத்துரைத்ததுபோலவே, கடவுள் நம்மை அவரை அன்பு செய்வதன் மூலமும், அவரது கட்டளைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலமும், அவரது வழிகளில் நடப்பதன் மூலமும் நிலை வாழ்வைத் தேர்ந்தெடுக்க அழைக்கிறார்.
நாம் பெரும்பாலும் "வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது" பற்றி பேசுகையில் உடல் நலம், வெற்றி, மகிழ்ச்சி என்று கருதி பேசுகிறோம். ஆனால் நற்செய்தியில், வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது என்பது முரண்பாடாக சிலுவையை ஏற்றுக்கொள்வதாகும் என்று இயேசு எடுத்துரைக்கிறார். இது ஆறுதல், ஈகோ மற்றும் உலக ஆசையைப் பற்றிக்கொண்டிருக்கும் தவறான எண்ணத்தையும் செயலையும் துறப்பதைக் குறிக்கிறது.
ஆதலால், தவக்காலம் என்பது நாடகத்தனமான, சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றியது அல்ல; அது அன்றாட முடிவுகளைப் பற்றியது.
இறைவேண்டல்.
ஆண்டவரே, தூய ஆவியின் வல்லமையினாலும் தூண்டுதலினாலும், நான் எனது சிலுவையைச் சுமக்கவும், உமது வழிநடத்துதலைப் பின்பற்றவும் உதவுவீராக, ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
+6 0122285452