நமது தனித்துவத்தை இழக்காமல் வாழ்வோம்! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

ஆண்டின் பொதுக்காலம் 5 வாரம் ஞாயிறு 
மு.வா: எசா: 58:7-10
ப.பா :  திபா : 112:4-5, 6-7, 8-9
இ.வா: 1 கொரி: 2:1-5
ந.வா: மத்: 5:13-16

 நமது தனித்துவத்தை இழக்காமல் வாழ்வோம்! 

ஒருமுறை ஒரு சிறுவனிடம் ஆசிரியர் ஒருவர் நீ யாராக மாற ஆசைப்படுகிறாய் என கேட்டார். சிறிது நேரம் அச்சிறுவன் அமைதியாக யோசித்தான்.அந்தச் சிறுவன் யாராவது ஒரு நடிகரையோ அல்லது விளையாட்டு வீரரையோ பற்றி சொல்லப் போகிறான் என அந்த ஆசிரியர் எண்ணினார். அந்த ஆசிரியர் வியந்து போகும் வண்ணம் அச்சிறுவன் நான் என் தனித்துவத்தை இழக்க விரும்பவில்லை நான் நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்றான். அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத ஆசிரியர் அச்சிறுவனைப் பாராட்டி பிற மாணவர்களுக்கு முன்  ஒரு உதாரணமாக நிறுத்தினார்.

அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நம்மை உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ அழைக்கிறார். உப்பு அதன் தனித்துவம் உவர்ப்பு சுவை. அந்த உவர்ப்பு சுவை இல்லாத எந்த உணவும் ருசிக்காது. இனிப்பான பண்டங்களுக்கு கூட ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்தால் தான் அது ருசியாக இருக்கும். ஆனால் அந்த உப்பு அந்த உவர்ப்பு தன்மையை இழந்தால் அது கொட்டப்பட்டு மிதிப்படும். இதே போல தான் நம் ஒவ்வொருவரின் வாழ்வும். 

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இந்த உலகில் ஒரு மனிதரைப் போல இன்னொருவர் இருக்க இயலாது. ஏன் இரட்டை குழந்தைகளுக்கு கூட ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்கும் .அது அவர்களின் தனித்துவம். ஆனால் பல வேளைகளில் நாம் நமது தனித்துவத்தை உணர மறந்துவிடுகிறோம். பிறரைப் போல வாழ எண்ணி நம் வாழ்வின் சுவையை இழக்கிறோம். நமது வாழ்வில் சுவையையே நாம் இழந்தால் பிறருக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும்? இயேசு கூறியது போல பிறர் வாழ்வுக்கு ஒப்பாக எப்படி அமைய முடியும்?

இன்று நாம் சிந்திக்க வேண்டிய கருத்து என்னவென்றால் நமது தனிப்பட்ட வாழ்விலும் , குழும வாழ்வு அல்லது குடும்ப வாழ்விலும் ,குறிப்பாக நமது கிறிஸ்தவ வாழ்வில் கடவுள் நமக்கு கொடுத்த தனித்துவத்தை எந்த அளவு உணர்ந்து காக்கிறோம் என்பதே. கிறிஸ்தவர்கள் ஆகிய நாம் ஒவ்வொருவரும் கடவுளின் சாயலில் உருவானவர்கள். என்றால் கடவுளுடைய தனித்துவங்களில் ஏதாவது ஒன்று நம்முடைய சாயலில் நமது பாணியில் வெளிப்படுகின்றது. அது நமது அன்புள்ளமாக இருக்கலாம். நாம் பிறருக்கு உதவி செய்யும் பாங்காக இருக்கலாம். நம்முடைய வேறுபட்ட பணிகளாக இருக்கலாம். நமது கனிவான பேச்சு நற்செயல்கள் நன்னடத்தை என எதுவாகவும் இருக்கலாம். அவற்றில் நமது தனித்துவத்தை என்றாவது ஆழ்ந்து யோசித்து இருக்கிறோமா என்றால் இல்லை.

இயேசுவின் சீடர்கள் 12 பேர். அவர்கள் ஒவ்வொருவரும் இயேசுவை பின்பற்றிய விதத்தில் ஒரு தனித்துவம் இருக்கிறது. தன்னுடைய கிறிஸ்தவ வாழ்வில் தங்கள் தனித்துவத்தை இழக்காமல் கிறிஸ்துவை வெளிப்படுத்திய புனிதர்கள் பலர் உள்ளார்கள். புனித அந்தோனியார் பொய்யே சொல்லாமல் நற்செய்தியை வெளிப்படுத்தினார். அன்னை தெரசா தன்னுடைய பரிவு என்ற தனித்துவத்தால் பல உள்ளங்களை ஈர்த்தார் .புனித குழந்தை தெரசாள் நான்கு சுவர்களுள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு தனித்துவமான நற்செய்தி அறிவிப்பு.  இப்படி இவர்கள் அனைவரும் தங்கள் தனித்துவத்தை காத்துக் கொண்டு தங்கள் வாழ்வுக்கு மட்டுமல்ல பிறர் வாழ்வுக்கும் சுவையூட்டினார்கள்.  

இன்று நாம் சிந்திப்போம். கடவுள் நமக்கு கொடுத்துள்ள அந்த தனித்துவத்தை தியானத்தில் உணர்வோம். அதை மெருகூட்டுவோம். அத்தநித்துவம் நிச்சயம் ஒரு நாள் உப்பு உணவுக்கு சுவை தருவது போல பிறர் வாழ்வுக்கு சுவையூட்டும் .நமது தனித்துவத்தை உணராமல் உலகத்திற்காக அதன் மாயைக்காக வாழ்ந்து நமது தனித்துவத்தை இழந்தால் நமது வாழ்வு நமக்கே பயனின்றி போய்விடும்.

இயேசு தனது தனித்துவத்தை ஒரு நாளும் விட்டுக் கொடுத்ததில்லை.கடவுளின் மகனாக இறைவனோடு ஒன்றிப்பு  அன்பு பொறுமை உண்மை சமத்துவம் மன்னிப்பு பரிவு துணிவு தியாகம் போன்ற தனித்துவமான பண்புகளால்   அவர் ஏழைகள் கைவிடப்பட்டவர்கள் நலிந்தவர்களின் வாழ்வில் உப்பை போல சுவையூட்டினார்.  அவரை பின்பற்றி நாமும் பிறர் வாழ்வுக்கு சுவையூட்டும் நமது தனித்துவங்களை காத்துக்கொள்ள இறையருள் வேண்டுவோம். 

 இறைவேண்டல் 
இயேசுவே உம்மைப்போல் பிறர் வாழ்வு ஏற்றம் பெற எங்கள் தனித்துவங்களை உப்பை போல் பயன்டுத்த வரம் தாரும். ஆமென்

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
திருஅவைச் சட்டப்படிப்பு
புனித பேதுரு பாப்பிறை இறையியல் கல்லூரி, பெங்களூர்