நல்லாயன் இயேசு நிலைவாழ்வு தருபவர்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பாஸ்கா4-ம் வாரம் – செவ்வாய்
தி.பணிகள் 11: 19-26
யோவான் 10: 22-30
நல்லாயன் இயேசு நிலைவாழ்வு தருபவர்!
முதல் வாசகம்.
நமது முதல் வாசகத்தில், கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோர் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதைப் பற்றி நாம் அறிகிறோம். ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டதை கண்டு, பல நம்பிக்கையாளர்கள் (கிறிஸ்தவர்கள்) எருசலேமைவிட்டு அக்கம் பக்கம் உள்ள பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா போன்ற ஊர்களுக்குச் சிதறிப்போயினர் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
இதுவும் கடவுளின் ஏற்பாடாக இருந்தது எனலாம். ஏனெனில், அப்பகுதியில் உள்ள புறவினத்தாருக்கும் நற்செய்தி அறிவிக்க வாய்ப்பாக அமைந்தது. தீமையிலும் ஒரு நன்மை என்பதுபோல, பல புறவிஇனத்தார் இயேசுவில் நம்பிக்கைகொள்ளத் தொடங்கினர். மேலும் பர்னபாவைப் போன்ற திருஅவையின் ஆரம்பகாலத் தலைவர்கள், யூதரல்லாதவர்களின் வாழ்க்கையில் கடவுள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை உணரத் தொடங்கினர். பர்னபா, பின்பு மனமாற்றம் கொண்ட சவுலைத் தேடி அவரது ஊராகிய தர்சுக்குச் சென்று, அவரை அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார் என்றும், அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் அழைக்கப்பட்டார்கள் என்றும் லூக்கா பதிவு செய்துள்ளார்.
நற்செய்தி.
இந்த பகுதியில், இயேசு Gருசலேமில் ஆலயத்தில் இருந்தபோது, யூதர்கள் அவரைச் சுற்றி வந்து, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.. அதற்கு இயேசு, “நான் சொல்லியிருக்கிறேன், ஆனால் நீங்கள் நம்பவில்லை” என்று பதிலளிக்கிறார். அவர் செய்த செயல்கள் தன்னைப் பற்றிச் சாட்சி அளிக்கின்றன என்றும் கூறுகிறார்.
இயேசு மேலும்,
• “என் ஆடுகள் என் குரலைக் கேட்கின்றன”
• “நான் அவற்றை அறிகிறேன்”
• “அவை என்னைப் பின்பற்றுகின்றன”
என்று மேலும் எடுத்துரைக்கிறார்.
•
அவருடைய ஆடுகளுக்கு நிலைவாழ்வு தருவதாகவும், அவற்றை யாரும் அவருடைய கையிலிருந்து பறிக்க முடியாது என்றும் உறுதியாக அறிவிக்கிறார். முடிவில், “நானும் தந்தையும் ஒன்றே” என்று கூறுகிறார்.
சிந்தனைக்கு.
‘நல்லாயன்’ என்பது விவிலியத்தில் காணப்படும் மிகச் சிறந்த ஒருவகம் என்றால் மிகையாகாது. அக்காலத்தில் ஓர் ஆட்டு மந்தைக்கு ஒரு மேய்ப்பன் நியமிக்கப்படுவது வழக்கம். இரவெல்லாம் காவல் காத்தப்பின், ஒவ்வொரு காலையிலும் மேய்ப்பன் தனது மந்தையை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல மீண்டும் அழைப்பான். தங்கள் மேய்ப்பனின் பழக்கமான குரலைக் கேட்டவுடன், மந்தை அவனை மட்டுமே பின்தொடரும். பழக்கமில்லாத குரலைப் பின்தொடரமாட்டா.... அதனால்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மக்களை, அவர் தேடி வந்த தன் மந்தையாக, "என் ஆடுகள் என் குரலைக் கேட்கின்றன; நான் அவற்றை அறிவேன், அவை என்னைப் பின்தொடர்கின்றன" என்று விவரிக்கிறார்.
அவருடைய அழைப்பு உலக மக்கள் மத்தியில் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் உள்ளது. இயேசுவின் வடிவில் பல ஆயிரக்கணக்கான ஆயர்கள் திருஅவையில் உள்ளனர். இவர்கள் வாயிலாக அவரது அழைப்புக்குரல் ஒலித்துக்கொண்டுதான் உள்ளது. அவரது இரண்டாம் வருகைவரை அது ஓயாது.
1. நம்பிக்கை இல்லாத மனம்
யூதர்கள் இயேசுவின் அற்புதங்களையும் போதனைகளையும் பார்த்தும், அவரை ஏற்கவில்லை. நாம் இயேசுவின் செயல்களை அறிந்தும், உண்மையில் நம்புகிறோமா?
2. நல்ல மேய்ப்பரும் ஆடுகளும்
இயேசு தன்னை நல்ல மேய்ப்பராகக் காட்டுகிறார்.
• ஆடுகள் → நாமே (நம்பிக்கை கொண்டவர்கள்)
• ஆயன்→ இயேசு
நம் வாழ்க்கையில் அவருடைய குரலை (வார்த்தையை, அழைப்பை) எந்தளவுக்கு கேட்டு அவருக்கு உகந்த வாழ்வு வாழ்கிறோம் என்பதே இன்றைய கேள்வி.
3. நிலைவாழ்வுக்கான வாக்குறுதி
• அவரைப் பின்பற்றுபவர்கள் அழிவதில்லை
• யாராலும் அவர்களைக் கவர்ந்து செல்ல முடியாது என்ற அவரது வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டு செய்லபடுவது இன்றியமையாதது.
• இயேசுவின் குரலை நாம் கேட்க வேண்டும்.
• அவரைப் பின்பற்றும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும்
• சந்தேகம் இல்லாமல் உறுதியான நம்பிக்கை கொண்டு வாழ வேண்டும்
• அவர் தரும் நிலை வாழ்வில் நம்பிக்கை வைக்க வேண்டும்
இயேசு நம்மை அறிந்திருக்கிறார், நம்மை அழைக்கிறார், நம்மை பாதுகாக்கிறார். நாம் செய்ய வேண்டியது — அவருடைய குரலைக் கேட்டு, அவரைப் பின்பற்றுவது மட்டுமே.
பாவம் என்ற கல்லறைக்குப்பல வழி, என்றும் தர்ம தேவன் கொவிலுக்கு ஒரு வழி என்பது நாம் அறிந்த ஒன்று. அதுவே, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ (யோவான் 14:6) என்ற நமது நல்லாயனின் குரல்.
நிறைவாக, கடவுளின் அன்பையும் நமது அக்கறையையும் பாதுகப்பையும் ஒருவருக்கொருவர் உறுதிப்படுத்த வேண்டும். ஆடுகள் சிதறக்கூடாது. இதற்காகத் தான் இயேசு ‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக’ என்று தந்தையை வேண்டுகிறார் (யோவான் 17:21). நாம் அவரின் ஒரே மந்தையாக, தூய ஆவியாரால் வழிநடதப்படும் திருஅவையைச் சார்ந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவரது குரல் நம் வழியாக உலகில் எதிரொலிக்க வேண்டும்.
இறைவேண்டல்.
நல்லாயனாகிய ஆண்டவரே, தூய ஆவியாரின் வல்லமையால், எனது மன இருள் நீக்கப்படவும், கண்கள் திறக்கப்படவும், பாவிகளை அல்ல பாவத்தை வெறுக்கும் உம் மந்தையில் ஓர் ஆடாக நான் வாழ என்னை ஆசீர்வதியும். அமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452