இயேசுவின் உயிர்ப்பே நம் கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரம்! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

பாஸ்கா காலம்-உயிர்ப்பு ஞாயிறு 
மு.வா: திப: 10:34, 37-43
ப.பா: தி.பா 118:1-2, 16-17, 22-23
இ.வா: கொலோ:3:1-4
ந.வா :யோ: 20: 1-9

 இயேசுவின் உயிர்ப்பே நம் கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரம்! 

நாற்பது நாட்கள் நாம் புரிந்த தவ முயற்சிகளும் நோன்புகளும் கொண்டாடிய துக்கங்களும் நிறைவுறும் நாள் இன்று.  ஆம் இது சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்த இயேசுவின் உயிர்ப்பு நாள். இயேசுவால் உலகமே மீட்கப்பட்டது என பறைசாற்றும் நாள். கடவுளையும் அரின் மக்களையும் எந்நாளும் பிரிக்க முடியாது என்ற நிலையான ஒப்பந்தம் இடப்பட்ட நாள். 

இந்நாள் நமக்கு கூறும் செய்தி என்ன?

முதலாவதாக தோல்வி நிலையல்ல.  இயேசுவின் மூன்று வருட பணிவாழ்வின் தோல்வியாக சிலுவை மரணம் இருந்தது. கூடவே இருந்த சீடர்களும், புகழ்ந்து பாடிய மக்களும் சிதறுண்டு போனார்கள். இயேசுவின் பணிக்கு பலனே இல்லாதது  போல இது தோன்றினாலும் இத்தோல்வி  நீடிக்கவில்லை .  இயேசு உயிர்த்தார்.  ஆகவே நம் வாழ்வில் தோல்வி எப்போதும் நிரந்தமல்ல. தோல்வி முடிவல்ல என உணர்ந்து  நாம் வாழ்ந்தால் நாமும் உயிர்க்கலாம். 

இரண்டாவதாக உயிர்த்துடிப்பு அடங்காது.  இயேசு எவ்வாறு முழு கடவுளோ அவ்வாறே முழுமனிதனாக வாழ்ந்தார். அருடைய வாழ்வும் பணியும் உயிர்துடிப்போடு உயிரோட்டத்தோடு இருந்தது.  எனவே தான் மூன்று நாட்களுக்கு மேல் பூமியால் கூட அவரை தனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடிவில்லை.  ஒரு மனிதன் முழுமையாக உயிரோட்டத்துடன் வாழ்வதே கடவுளுக்கு மாட்சி எனக் கூறுவார் புனித எரேனியுஸ். நம் வாழ்வு உயிர்துடிப்புள்ளாதக இருந்தால் தடைகள் இருந்தாலும் தயங்கி நின்றாலும் அது நதி போல ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் பல வேளைகள் ஏன் நான் வாழ்கிறேன் என வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் நாம் இருக்கிறோம். இந்நிலையை நாம் மாற்ற வேண்டுமென்ற அழைப்பை இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நமக்கெல்லாம் தருகிறது. 

மூன்றாவது வாழ வாய்ப்புகள் அதிகம். 
கடவுள் பல வாய்ப்புகளை நமக்குத் தருகிறார். இயேசுவின் பாடுகள் மரணம் போன்றவை அவருடைய வாழ்வின் இறுதியல்ல. அவருடைய உயிர்ப்பு மீண்டும் ஒரு வாய்ப்பு.  நாம் பாவம் செய்யலாம். தவறி விழலாம். இறந்தவர்கள் போல வாழலாம். ஏன் வாழ்க்கையையே சபிக்கலாம். இருந்தாலும் பல புதிய நாட்களைக் காண்கிறோம். ஏன்?அவையெல்லாம் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. ஒவ்வொரு புதிய நாளுமே புதிய வாழ்விற்காக வாய்ப்பு.  ஒவ்வொரு இறைவேண்டலும் கடவுளோடு இருக்க தரப்படும் வாய்ப்புகள். ஒவ்வொரு முறையும் நாம் பெறுகின்ற அருள்டையாளங்கள் இயேசுவின் உயிர்ப்பில் பங்குபெறும் வாய்ப்பு. அதன் பலன் நாம் அந்த வாய்ப்பை பயன்படுத்தும் முறையில்தான் இருக்கிறது. இயேசுவின் உயிர்ப்பு நிலைவாழ்வுக்காக இறைவன் தரும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்த நம்மை அழைக்கிறது. 

இயேசுவின் உயிர்ப்பு தரும் இச்செய்திகள் அல்லது உண்மைகள் நமது வாழ்வில் நிறைவு பெற நாந் என்ன செய்ய வேண்டும். 

முதலில் அவரைத் தேட வேண்டும். அன்பின் மிகுதியால் மகதலா மரியா இயேசுவின் பிரிவை தாங்க இயலாதவளாய் அவரைக் காண அவரோடு துணையிருந்து துக்கம் கொண்டாட அதிகாலையிலேயே எழுந்து சென்றார். இயேசுவை தேடினாள். உயிர்ப்பின் நற்செய்தி அவளுக்குதான் முதலில் அறிவிக்கப்பட்டது.  

நம்முடைய தேடல் எது? கலைமான் நீரோடையை நாடுவது போல நான்  உம்மை நாடுகிறேன் என பாடலை பாடிவிட்டு அவரைத் தேடாமல் உலகத்தின் நாட்டங்களையே தேடிக்கொண்டிருந்தால் நம் வாழ்வில் உயிர்ப்பு இருக்காது. எனவே நமது முதல் தேடல் இயேசுவாக இருக்கவேண்டும் என்ற உறுதியை இந்நாளில் எடுத்துக்கொள்வோம்.

இரண்டாவதாக நாம் அவரோடு இறக்க வேண்டும். நமது பாவங்கள் பலவீனங்கள் கடந்த கால கசப்புகள் பகைமை வெறுப்பு பொறாமை நம்பிக்கையின்மை போன்ற அனைத்தையும் சிலுவையில் அறைந்து இயோசுவோடு நாம் இறந்தோமெனில், இயேசுவைப்போல அன்பு அமைதி இரக்கம் மன்னிப்பு நம்பிக்கை போன்ற நற்செல்களோடு நாமும் உயிர்க்கலாம். 

இவ்வாறாக கிறிஸ்துவின் உயிர்ப்பே  நமது கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரம் என்பதை உணர்த்தும் இவ்வுயிர்ப்பின் உண்மைகளை நமது வாழ்வில் அனுபவிக்க இயேசுவைத் தேடி அவரோடு இறந்துயிர்த்து உயிர்த்துடிப்புள்ள வாழ்வு வாழுவோம். அனைவருக்கும் உயிர்ப்பு நாள் வாழ்த்துக்கள். 

 இறைவேண்டல் 
உயிர்த்த இயேசுவே உம்மோடு நாங்களுள் உயிர்த்து உயிர்துடிப்புள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ உதவுவீராக. ஆமென்.