பொறுமை வேண்டும்... பொறாமை அல்ல!| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் இரண்டாம் வாரம்–வெள்ளி
தொடக்க நூல் 37: 3-4, 12-13a, 17b-28
தொ.நூல் 21: 33-43, 45-46
பொறுமை வேண்டும்... பொறாமை அல்ல!
முதல் வாசகம்.
மனிதர்களின் தீய சதிகளிலிருந்தும் கடவுள் நல்ல காரியங்களைச் செய்ய முடியும். நமது முதல் வாசகம் யோசேப்பின் சகோதரர்கள் அவருக்கு எதிராக எவ்வாறு சதி செய்தார்கள் என்பதை விவரிக்கிறது. யோசேப்பு தனது சகோதரர்களால் வெறுக்கப்படுகிறார், ஏனென்றால் அவர்களின் தந்தையான இஸ்ராயேல் எனப்படும் யாக்கோபு யோசேப்பின் மீது அதிக அனபு வைத்திருந்தார். இதனிமித்தம் மற்ற சகோதரர்கள் யோசேப்பின் மீது பொறாமை கொண்டு அவரை தீர்த்துக்கட்ட முயல்கிறார்கள். இறுதியில் அவரை மிதியான் நாட்டு வணிகரிடம் இருபது வெள்ளிக்காசுகளுக்கு விற்றுவிடுகிறார்கள். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர். அங்கே அவரை கடவுள் பெரிய அதிகாரியாக ஏற்படுத்தினார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு ஒரு உவமையைச் சொல்கிறார், ஒரு திராட்சைத் தோட்ட முதலாலளி தனது தோட்டத்தை தோட்டத் தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
சில நாட்களுக்குப் பிறகு குத்தகைப்பணத்தை அவர்களிடம் இருந்து வாங்குவதற்காக தன்னுடைய பணியாளர்களை அந்த உரிமையாளர் அனுப்புகிறார். ஆனால் அந்த குத்தகைக்காரர்களோ உரிமையாளர் அனுப்பிய பணியாளர்களை அடித்துத் துன்புறுத்துகிறார்கள்; ஒருசிலரை கொலைசெய்கிறார்கள்.
தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.
இயேசு உவமையைக் கூறிய பின், திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார். அதற்கு பரிசேயர் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள்.
இந்த உவமையின் உட்கருத்தைப் புரிந்துகொண்ட தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவர்கைளக் குறித்தே இப்படி கூறினார் என்று உணர்ந்துகொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களைப் பற்றி நான் சிந்திக்கும்போது, யோசேப்புக்கும் இயேசுவுக்கும் இடையிலான அனைத்து ஒற்றுமைகளையும் நான் நினைவு கூர்கிறேன். இருவரும் தங்கள் தந்தையின் அன்பான மகன்கள். இருவரும் தங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டனர். இருவருக்கும் எதிராக கொலை திட்டங்கள் திட்டமிடப்பட்டன. இருவரையும் நெருங்கிய மக்கள் வெள்ளிக் காசுகளுக்கு விற்றனர். பொய் சாட்சிகள் காரணமாக யோசேப்பும் இயேசுவும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் கடவுளாளல் இருவரும் மாட்சிக்குரிய பதவிகளுக்கு உயர்த்தப்பட்டதன் மூலம் மற்றவர்களுக்கு முழுமையையும் வாழ்க்கையையும் கொண்டு வந்தனர்.
ஆம், எத்தகையத் தீமையிலிருந்து நல்லதை கொண்டு வர வல்லவர் கடவுள். கடவுள் யோசேப்போடு இருந்தது போல, கடினமான காலங்களில் நம்முடன் இருக்கிறார் என்பதை நாம் ஆழ்ந்துணர வேண்டும். கடவுளின் ஒரே மகனான இயேசுவும் துன்பங்களையும் சிரமங்களையும் எதிர்கொண்டதால், கிறிஸ்தவர்களும் உண்மை கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதென்பது துன்பங்களையும் சிரமங்களையும் உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். கடவுள் பயம் ஞானத்தின் தொடக்கம் என்பதுபோல், கடவுள் அச்சம் என்றும் நம்மில் நிலைக்க வேண்டும். பச்சோந்தி ஒன்று இப்படி எழுதி வைத்துவிட்டு இறந்து போனதாம்: “நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம் நான் தோற்றுப்போனேன், ஆகவே தூக்கில் தொங்குகிறேன்” என்று.
ஆகவே, எப்போதும் பேச்சிலும் செயலிலும் நமது நல்லெண்ணம் பிரதிபலிக்க வேண்டும். நம்மை மதிப்பவரிடம் தாழந்து பேசனும்; நம்மை மிதிப்பவரிடம் வாழந்து பேசனும். மாறாக பொறைமை கொண்டு அடுத்தவரை வீழ்த்தவோ, தாழ்த்தவோ நினைப்பது அநீதி. ஆபேல் கொல்லப்படுவதற்கு காயின் கொண்ட பொறாமை காணமாக இருந்தது. மனிதர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் குணங்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை. இந்த பொறாமை குணம் யாரையும் விட்டுவைப்பது இல்லை. அது சாத்தானின் ஆயுதம். நம்மில் போட்டி மனப்பான்மை இருக்கலாம், ஆனால், பொறாமை இருக்கக்கூடாது.
இறைவேண்டல்.
ஆண்டவரே, இரக்கத்தின் பிறப்பிடமே, என் விண்ணக வாழ்க்கைப் பயணத்தில் நான் எதிர்கொள்ளும் எல்லா வகையான தடைகளையும் எதிர்கொள்ளும் துணிவை எனக்கு அருள்வீராக. ஆமென்..
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
