நமது உள்ளம் ஏழையரின் உள்ளமாகட்டும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

திறுநீற்று புதன்
யோவேல் 2: 12-18
2 கொரி 5: 20- 6: 2
மத்தேயு 6: 1-6, 16-18
நமது உள்ளம் ஏழையரின் உள்ளமாகட்டும்!
முதல் வாசகம்.
இன்று திறுநீற்று புதன். இந்நாள் தொடக்கம், இரக்கத்தின் சிறப்பு காலமாகிய தவக்காலத்தில் பாதம் பதிக்கின்றோம்.
நோன்பு, அறச் செயல்கள், இறைவேண்டல் என்னும் முப்பெரும் தவச் செயல்களில் ஈடுபட இன்றைய வாசகங்கள், குறிப்பாக நற்செய்தி வாசகம் அழைப்பு விடுக்கிறது. இறைவாக்கினர் யோவேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்திலிருந்து, ‘முழு இதயத்தோடு ஆண்டவரிம் திரும்பி வாருங்கள்’ என்ற இறைவனின் அழைப்பைக் கேட்கிறோம்.
கடவுள் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர் என்கிறார் யோவேல். மனாற்றத்திற்காக புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறிக்கச் சொல்கின்றார். “மேலும், இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் தன் மக்கள் மீது இரக்கம் காட்டினார் என்று வாசிக்கின்றோம் (யோவே 2:18) ஆகையால், நாம் ஆண்டவரின் மக்கள் என்ற காரணத்திற்காக அவரது இரக்கத்தைப் பெற திரும்பி வரவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறோம்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகள் கொரிந்தியரை நோக்கி, “கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்ற வேண்டுகோளை விடுக்கின்றார். இத்தகைய வேண்டுகோளை அவர் தாமாக அல்ல, கடவுளே விடுப்பதாகக் கூறுகின்றார்.
நற்செய்தி.
திருத்தூதரான புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்திலிருந்து, நமது நம்பிக்கை வாழ்வுக்கான நடைமுறைகள் மற்றும் இந்த தவக்காலத்தில் நாம் செய்யும் செயல்களான நோன்பு, இறைவேண்டல், தானதர்மம் போன்றவற்றுடன் தொடர்புடைய நெறிமுறைகளைக் கேட்கிறோம். ஆண்டவர் இயேசு தம்முடைய சீடர்களுக்கும், அவருக்குச் செவிசாய்க்க கூடியிருந்த அனைவருக்கும் தெளிவுபடுத்தியது போல, இந்த தவக்காலத்தின் போது நாம் அடிக்கடி செய்யும் நோன்பு, இறைவேண்டல்களை மேற்கொள்ளும்போது, அவற்றில் வெளிவேடம் இருக்கக்கூடாது என்று கற்பிக்கிறார்.
நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களால் புகழப்படுவதற்கும் போற்றப்படுவதற்கும் இந்த செயல்களைச் செய்யக்கூடாது. மாறாக, கடவுளுக்கு முன்பாக நமது தகுதியின்மை மற்றும் பாவங்களின் ஆழத்தை உணர்ந்து, நாம் உண்மையாகவும் நேர்மையாகவும் மனந்திரும்புவதற்கு அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.
சிந்தனைக்கு.
தவக்காலம் வந்து போகும் அதனால் என்ன என்று இருப்போர் பலர். நாம் மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவே கடவுள் மனிதனானார், பாடுகள் பட்டு, சிலுவை மரணத்தை ஏற்றார். இதற்கு மேல் அவர் என்ன செய்ய வேண்டும்? திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது உண்மைதான். நாம் பலவீனமாக இருப்பது அலகைக்குத்தான் சாதகம்.
நமது பலவீனத்தில் இருந்து மீளவும், மனத்திடன் கொண்டு நன்னெறி வாழ்வைப் பற்றிக்கொள்ளவும் பயிற்றுவிப்பது இந்த தவக்காலம்.
நமது தவக்கால நடைமுறைகளின் மூன்று முக்கிய தூண்களையும் நற்செய்தி பகுதி நமக்கு நினைவூட்டுகிறது. முன்னர் குறிப்பிட்டது போல, நோன்பு, இறைவேண்டல் மற்றும் தானதர்மம் ஆகிய மூன்றும் இக்காலத்தில் வலியுறுத்தப்படுகின்றன. இந்த நடைமுறைகள் ஒவ்வொன்றும் நமது கவனத்தையும் வாழ்வையும் இறைவனிடம் பற்றுக்கொள்ள உதவும். நமது பேராசை மற்றும் தன்னலம், பெருமை போன்றவை இன்னும் அதிகமாகக் கட்டுப்படுத்தி இறைவனிடத்தில் சரண்டைய வழிவகுக்கும்.
எதிர்நோக்கின் திருப்பயணிகளாக பயணிக்கும் நாம், வாழ்க்கை எனும் பயணத்தில் நமது பாவ மூட்டைகளின் எடை நாளுக்கு நாள் அதிகரிக்கும் போது, நமது எதிர்நோக்கை அடைவது கடினம். இதனை நன்கு அறிந்தவர் ஆண்டவர். எனவேதான், ‘ “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத். 11:28) என்று இன்று அழைப்பு விடுக்கிறார்.
தொடர்ந்து, இவ்வருட தவக்கால செய்தியில், நாம் நம்மைப் பற்றியே எப்போதும் சிந்திப்பவர்களாக இராமல் இறைவனை நோக்கியும், நம் சகோதர சகோதரிகளை நோக்கியும் நடைபோடுபவர்களாக இருக்க வேண்டும் என தவக்காலச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். நம் பயணத்தில் எவரும் விடுபட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடாது, ஏனெனில் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற வகையில் பொது மாண்பை கொண்டுள்ளவர்கள் என்று குறப்பிட்டுள்ளார். ஆகவே, அடுத்திருப்பவரை அன்பு செய்யாமல், ஏழைகளுக்கு யாதொரு உதவியும் செய்யாமல் வெறும் நோன்பாலும், இறைவேண்டலாலும், சைவ உணவாலும் தவக்காலத்தை நிறைவு செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரைகிய இயேசுவே, இந்த தவக்காலத்தில் எனது ஒவ்வொரு நற்செயலையும் தவ முயற்சியையும் நீர் ஆசீர்வதிப்பீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
