அகம் காத்தால் அனைத்தும் நலமே!| ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் 5ஆம் வாரம் –புதன்
தொ.நூ. 2: 4b-9, 15-17
மாற்கு 7: 14-23
அகம் காத்தால் அனைத்தும் நலமே!
முதல் வாசகம்.
கடந்த இரு நாள்களாக குருக்கள் மரபினரின் படைப்பு விபரத்தை அறிந்த நமக்கு இன்று மனிதரின் மற்றொரு படைப்பு விபரத்தை யோவே மரபினர் தருகின்றனர். இன்று மனிதனின் படைப்பில் கடவுள் கூடுதல் கவனம் செலுத்தினதைப் பார்க்க முடிகிறது.
அதிகாரம் 2: 4b-ல் தொடங்கும் படைப்பின் இரண்டாவது விபரத்தில் கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் என்று கூறப்படுகிறது. இந்த விபரத்தின் அடிப்படையில் மனிதன் மண்ணிலிருந்துதான் படைக்கப்படுகிறான். ஆனாலும், இங்கே கடவுள் அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் என்று குறிப்பிடப்படுள்ளது.
கடவுள் ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே குடிவைத்து, ஆதாமுக்கு உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றார். உணவு தாவரங்களையும் பழ மரங்களையும் அளிக்கின்றார். கடவுள் ஆதாமை நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைத் தவிர மற்ற மரங்களின் கனிகளைத் தின்ன அனுமதி அளிக்கிறார். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார் என்று இந்த யாவே மரபினர் குறிப்பிட்டுள்ளனர்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் இயேசு பாவத்தின் மூலத்தை விளக்க மற்றொரு உவமையைப் பயன்படுத்துகிறார். இயேசுவின் சீடர்கள் கழுவாத கைகளால் உணவு உண்டதைப் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் மிகப்பெரிய குற்றமாகப் பார்த்தனர். இன்று, மக்கள் கூட்டத்தை அழைத்து அவர்களிடம், மனிதருக்கு வெளியே இருந்து வருபவை அல்ல, மனிதருக்கு உள்ளே இருந்து வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார்.
சிந்தனைக்கு.
மனிதனைப் படைத்த கடவுள் அவனுக்கு ஓர் எச்சரிக்கையைக் கொடுக்கிறார். ஏதேன் தோட்டத்தில் ‘நன்மை தீமை அறிவதற்கு ஏதுவாக இருக்கும் மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே’ என்ற கடவுளின் கட்டளைக்கு மனிதன் கீழ்ப்படிந்து நடந்திருக்க வேண்டும். அவன் மீறினான். இதனிமித்தம் மனித உள்ளத்திலிருந்துதான் தீயன தோன்றுகின்றன என்பது தெளிவாகிறது. தீமை என்பது மனிதன் உண்ணும் உணவிலோ, உடுத்தும் உடையிலோ இல்லை. அவனில் தோன்றும் தீய எண்ணமே அடிப்படைக் காரணம் என்பதை இயேசு வெளிச்சமாக்குகிறார்.
கடவுள் நமக்குச் சிறந்ததை வழங்குகிறார். நம் உடலுக்கு உணவு மற்றும் நம் மனதுக்கும் ஆன்மாவுக்கும் உணவு ஆகியவற்றை அவரே வழங்குகிறார். நாம் கடவுளின் சாயலிலும் உருவிலும் உருவாக்கப்பட்டுள்ளோம். மரம் செடி கொடிகளுக்கும், பிராணிகளுக்கும் உயிர் கொடுத்த இறைவன், மனிதனுக்கு மட்டும் உயிரோடு, அவருடைய மூச்சை ஊதி ஆன்மாவும் அளித்தார்.
இயேசு குறிப்பிடும், உங்களுக்குள் இருந்து வருவதுதான் தீமைகள் பிறக்கின்றன என்கிறார். அவற்றுள், பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவை சில எடுத்துக்கட்டுகளாகத் தரப்படுள்ளன.
இன்று, ஆண்டவரால் அடையாளம் காணப்பட்ட இந்த பாவங்களின் பட்டியலைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். தமது பலவீனத்தை எளிதாக அடையாளம் காணவே, இயேசுவே, இந்த பட்டியலைத் தந்துள்ளார். ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பாவத்தையும் அது உண்மையில் என்னவென்று பார்க்கவும் அவற்றை நிராகரிக்கவும் வேண்டும். நாம் இந்த பாவங்களை அறிந்துணர்ந்து அவற்றை நிராகரிக்கும்போது, நம்முடைய ஆண்டவர் நம்மை திடப்படுத்தவும் நம் இதயத்தைத் தூய்மைப்படுத்தவும் தொடங்குவார்.
அனைத்துக்கும் மேலாக நாவடக்கம் இன்றியமையாதது. நமது வாயிலிருந்து வரும் தீய, கடுமையான வார்த்தைகளும் நம்மை பாவத்தில் தள்ளும் என்பது இயேசு கூறும் அறிவுரையில் அடங்கியுள்ளது.
இதனையே, திருவுள்ளுவரும்:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (குறள் 200)
என்று மொழிந்தார். இக்குறளுக்கு, ‘சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது’ என்று மு. வரதராசன் அவர்கள் விளக்கமளித்ததையும் நினைவில் கொள்வோம்.
‘கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள் (1 கொரி 6:20) என்று பவுல் அடிகள் கூறும் அறிவுரையை மனதில் கொள்வோம்.
இறைவேண்டல்.
என் ஆண்டவரே, நான் என் பாவச் செயலை நிராகரிப்பதற்கும், முழு இதயத்தோடு உம்மிடம் திரும்புவதற்கும் எனக்குத் தேவையான அருளைத் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452