கடவுளின் திருவுளத்திற்குப் பணியாவிடில் நாமும் ஒரு கயபாதான்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

12 ஏப்ரல் 2025
தவக்காலம் 5ஆம் வாரம் –சனி
எசேக்கியேல் 37: 21-28 யோவான் 11: 45-57
கடவுளின் திருவுளத்திற்குப் பணியாவிடில் நாமும் ஒரு கயபாதான்!
முதல் வாசகம.
நமது முதல் வாசகம் எசேக்கியேல் இறைவாக்கினரிடமிருந்து வருகிறது. எசேக்கியேல் பாபிலோனியரால் நாடுகடத்தப்பட்ட காலத்தில் அவரோடு நாடுகடத்தப்பட்ட யூதர்களிடம் பேசுகிறார். பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் கடவுள் அழைப்பு விடுக்கிறார். கடவுளிடம் திரும்பி வந்து ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும், அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ, அவர்களின் வேறெந்த குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளிக்கிறார்.
இஸ்ரயேலின் முன்னாள் வடக்கு கோத்திரங்களும் யூதாவின் தெற்கு கோத்திரங்களும் தாவீதின் சந்ததியினரின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்றும், பிளவுபட்டவர்கள் மீண்டும் இணைவர் என்றும் இழந்த நாட்டை, கடவுள் மீட்டெடுப்பார் என்ற வாக்குறுதியையும் கடவுள் முன்வைக்கறார்.
நற்செய்தி.
இலாசரின் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து வரும் இன்றைய நற்செய்தி வாசகத்தில், மரியாவின் இல்லம் வந்திருந்த யூதர் பலர் இயேசு இலாசருக்கு உயிர் அளித்ததை கண்டு அவரை நம்பினர். ஆனால், தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, இயேசுவும் அவருடைய போதனையும் யூதர்களை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைப் பற்றி விவாதிக்கிறார்கள். உரோமையர் வந்து எருசலேமை அழித்து, உரோமை பேரரசு முழுவதும் யூத மக்களை சிதறடிக்கும் வகையில் இயேசு மக்களை வழிநடத்துவார் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
எனவே, யுதர்களையும் யூதேயாவையும் காப்பாற்ற இயேசுவை பலியிடுவது நல்லது என்று அவர்கள் முடிவெடுத்தனர். ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள்.
மேலும், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள் என்று யோவான் குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இன்று ‘ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்’ என்று முதல் வாசகத்திற்குப் பதிலுரையாகக் கூறினோம். கடவுளுடைய மக்கள் அனுபவித்த துன்பமும் துயரமும், அவர்கள் தங்கள் கடவுளுடனான உடன்படிக்கை உறவை மீண்டும் நிலைநாட்டும் போது மகிழ்ச்சியாக மாறும் என்று இந்த பதிலுரைப்பாடல் வழியாக எரேமியா கற்பிக்கிறார்.
இன்றைய வாசகங்கள் அனைத்தும், அடுத்து வரும் புனித வாரத்திற்குக் கடவுள் எவ்வாறு நம்மை தயார் செய்கிறார் என்பதை உணர்த்துகின்றன. இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய மீட்பின் மறைபொருள் நிகழ்வுகளை துக்கத்துடனும் தொடர்ந்து மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் ஆண்டின் உச்சக்கட்டத்திற்கு நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம்.
இயேசுவின் பாடுகளை நினைவுகூர்தலும், வாழ்வோடு இணைத்தலும், அவற்றில் வாழ்தலும் கிறிஸ்தவர்களுக்கு இன்றியமையாத கடப்பாடாக உள்ளது என்பதை மனதில் நிறுத்தி இந்த புனித வாரத்திற்குள் காலடி வைக்க வேண்டும். அடுத்து வரும் புனித வாரத்தை ஆண்டுதோறும் வந்துபோகும் ஒரு நிகழ்வாக மட்டும் கருதினால், நமக்கு அது தோல்வியே. நாம் இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளின் ஒரு பகுதியாக இருக்கிறோம். இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம், நாம் கடவுளுடனான உறவுக்குள்ளும், அவரது மீட்பின் செயலுக்குள்ளும் கொண்டு வரப்படுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உண்மையில், "கடவுளின் திருவுளத்தை அறிவது மிகப்பெரிய ஞானம் என்றால், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது அதைவிட மிகப்பெரிய சாதனை எனலாம். நாம் மாபெரும் அறிவாளிகளாக இருபது கடவுளுக்குப் பெருமை அல்ல. அவரது திருவுளத்தை மண்ணகத்தில் நிறைவேற்றும் மக்களாக இருப்பதில்தான் அவர் மகழ்ச்சியுறுகிறார்.
நற்செய்தியில், ‘இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை” என்று பரிசேயர்களிடம் கயபா எனும் தலைமைக் குரு கூறினார் என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றும் கணிப்பும் முற்றிலும் தவறு. மக்களுக்காக பலியாவது ஒருமனிதரானாலும் அவராலேயே அதே கயபா மற்றும் யூதர்கள் உட்பட உலகிற்கு மீட்பு கிட்டும் என்பதை அன்று கயபா அறிந்திருக்கவில்லை.
நாமோ, கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளார் (எபே 1:7-8) என்று அறிந்த மக்களாக உள்ளோம்.
இயேசு எல்லாருக்குமாக இறந்தார் எனில், அவரது தியாகத்தை நாம் எண்ணிப் பார்க்கும் வேளையில், நாம் நம்மிடம் இருக்கும் வேற்றுமைகளை களைந்து, ஒரே திருஅவையினராக வாழ்வது கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதாக இருக்கும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, தூய ஆவியாரின் வல்லமையால், உமது அன்பின் மகத்துவத்தை என்னில் புதுப்பித்தருளும், இதனால் உமது பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் எனது வாழ்வுக்கு அளிக்கும் புதுப்பித்தலை நான் முழுமையாக அறியச் செய்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம் +6 0122285452
Daily Program
