நாம் வெற்றியின் மக்கள், அஞ்சலாகாது! | ஆர்.கே. சாமி | VeritasTamil
31 அக்டோபர் 2024 பொதுக்காலம் 30ஆம் வாரம் -வியாழன்
எபேசியர் 6: 10-20
லூக்கா 13: 31-35
நாம் வெற்றியின் மக்கள், அஞ்சலாகாது!
முதல் வாசகம்.
புனித பவுல் எபேசுவில் உள்ள கிறிஸ்தவச் சமூகம் நம்பிக்கை வாழ்வில் சந்திக்கவுள்ள சவால்களைப் பற்றி எச்சரிக்கிறார். கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் அவர்களது நம்பிக்கையை முன்னிட்டு சந்திக்கும் சவால்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்கிறார்.
அவர்கள் இயேசுவைப் புறக்கணிக்கும், நற்செய்தியை ஏற்க மறுக்கும் மனிதர்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கையைச் சீர்க்குலைக்க முற்படும் மக்களுக்கு எதிராக போராடுவது மட்டுமல்லாமல், அவர்கள் தீய ஆன்மீக சக்திகளுடன் போராட வேண்டியிருக்கும் என்கிறார். ஆனாலும், கிறிஸ்தவர்கள் அடையவிருக்கும் இறுதி வெற்றியைப் பற்றியும் அறிவுறுத்துகிறார். இறைமக்கள் ஒவ்வொருவரும் தீமைக்கு எதிராகத் தனித்து நின்று போராட வேண்டும் என்று நினைவூட்டுகிறார்.
அத்துடன், கடவுளின் வார்த்தையைத் தூய ஆவி அருளும் போர் வாளாக எடுத்துக் கொண்டு, எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்ப வேண்டும் என்றும், இறைமக்கள் எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்ய வேண்டும் என்றும் ஊக்குவிக்கிறார். நிறைவாக, நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் அறிவிப்பதற்கான ஆற்றலைக் கடவுள் அவருக்குத் தந்தருள அவருக்காக இறைவேண்டல் செய்யுமாறு பவுல் எபேசியரைக் கேட்டுக்கொள்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில் நல்ல சில பரிசேயர்களைச் சந்திக்கிறோம். லவர்கள் இயேசுவை நோக்கி, "ஏரோது உன்னைக் கொல்ல விரும்புகிறான், நீ போய்விடு" என்று எச்சரிக்கிறார்கள். அதற்கு இயேசு, "அந்த நரியிடம் நான் இன்றும் நாளையும் பிசாசுகளை விரட்டி குணமாக்குகிறேன் என்று சொல்லுங்கள், மூன்றாம் நாளில் என் பணியை முடித்துவிடுவேன். எருசலேமுக்கு வெளியே ஓர் இறைவாக்கினர் இறப்பது சரியல்ல என்பதால் நான் தொடர்ந்து செல்ல வேண்டும்’ என்று துணிவுடன் கூறுகிறார்.
அவர் எருசலேமைப் பற்றிப் புலம்பினார்: "எருசலேமே, இறைவாக்கினர்களைக் கொன்று, உன்னிடம் அனுப்பப்பட்டவர்களை நிராகரிக்கிறாய்! கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பது போல நான் உன்னைப் பாதுகாக்க விரும்பினேன், ஆனால் நீ அதை விரும்பவில்லை, உன் வீடு பாழாகிவிடும். இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். ‘ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்’ என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று தன் நிலையை வெளிப்படுத்துகிறார் ஆண்டவர்.
சிந்தனைக்கு.
நாம் நிலை வாழ்வுக்கான போரில் இவ்வுலகில் போராடிக்கொண்டு இருக்கிறோம். நமக்காக இயேசு இப்போராட்டத்தில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும், நாம் இன்னும் உலகில் தீமையை எதிர்த்துப் போராடுகிறோம். நம் நம்பிக்கை, அறிவு, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றை ஆழப்படுத்துவதன் மூலம் நமது வெற்றியை நம்மால் நிர்ணயிக்க முடியும் என்பதை ஆண்டவர் இன்று வலியுறுத்துகிறார். நாம் வெற்றிக்குரியவர்கள், நாம் வெற்றி பெறும் தரப்பினர்.
ஆண்டவரின் மரணம் மற்றும் அவரது மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல் மூலம் வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியை நாம் ருசித்துள்ளோம். எனவே தீய சக்திக்கு எதிரான நமது போராட்டமும் வெற்றியும் நமக்கு எட்டா கனிகள் அல்ல.
‘மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே?’ (யோபு 7:1) என்று யோபு கூறிய வார்த்தைகளை மனதில் கொள்ள வேண்டும். உண்மையை நிலைநாட்டவும் இறையரசை விதைக்கவும் இயேசு இறுதித் துளி இரத்தம் தன் உடலில் உள்ளவரைப் போராடினார். அதன் விளைவே அவரது உயிர்ப்பு.
இந்த நற்செய்தி வாசகத்தில், எருசலேம் மக்கள் மீது இயேசு கொண்ட அன்பின் வெளிப்பாடு நமக்கு வழங்கப்படுகிறது. அவர் எருசலேம் நகரத்தின் மீது தனது அன்பை வெளிப்படுத்தவில்லை, ஆனால், அந்த நகர மக்கள் குறித்துப் புலம்புகிறார். கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் இந்த எருசலேம் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன், ஆனால் ஏற்கப்படவில்லை என்று புலம்புகிறார்.
ஆம், தீய ஆவியின் பிடியில் உள்ளவரை நமது வெறியின் பாதை நமக்குப் புலப்படாது. எனவேதான் பவுல் அடிகள் எபேசு இறைமக்களிடம் நற்செய்தியின் மறைபொருளைத் துணிவுடன் அறிவிப்பதற்கான ஆற்றலைக் கடவுள் அவருக்குத் தந்தருள அவருக்காக இறைவேண்டல் செய்யுமாறு எபேசியரை கேட்டுக்கொள்கிறார். நமது தூய இறைவேண்டல் நமக்கு வழிகாட்டும்.
ஒரு கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளின் கீழ் கூட்டிச் செல்லும் உருவகத்தை இயேசு பயன்படுத்துகிறார். தாய் கோழி தன் குஞ்சுகளை மிகுந்த தைரியத்துடனும், தன் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமலும் தீயோரை எதிர்த்து நின்று போரடி பாதுகாக்கிறது. ஆபத்து நெருங்கும்போது, அது இறக்கைகளை நீட்டி, பாதிக்கப்படக்கூடிய தன் குஞ்சுகளைப் பாதுகாக்க முனைகிறது. அவ்வாறுதான், எருசலேம் மக்களை மட்டுமல்ல, நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்று தனது இரு கரங்களையும் விரித்தவராக உயிர் துறந்தார். அதனால் அவர் நம்மை எல்லா தீமைகளிலிருந்தும் பாதுகாப்பார் என்பது தெளிவாகிறது.
இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில், இயேசு ஏரோதை "நரி" என்று குறிப்பிட்டார். அவர் அந்த நரியின் ஆட்சியில்தான் பாடுகள் பட்டார் மரித்தார், உயிர்த்தார். ஆகவே, நம்மைச் சுற்றி ‘நரிகள் வடிவல் துன்பங்கள் பல இருந்தாலும் போராடுவோம்.. போராடி.. போராடி உயிர்த்தெழுவோம். தீய ஆன்மீக சக்திகளுக்கு எதிராக நாம் போராட தயாராக இருந்தால் மட்டுமே, நம் ஆண்டவரான இயேசு கிறிஸ்து பெற்ற வெற்றியை நம்மால் பகிர்ந்து கொள்ள முடியும்.
இறைவேண்டல்.
என் இரக்கமுள்ள ஆண்டவரே, இவ்வுலகில் உள்ள பல தீமைகளிலிருந்து என்னைக் காக்க ஏக்கம் கொண்டவராக நீர் இருக்கிறீர். எனதுத் துன்ப நேரங்களில் உமது சிறகுகளால் என்னைப் பாதுகாக்க விரைவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452