விண்ணக வாசல் திறக்கப்பட திருந்தி வாழ்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

30 அக்டோபர் 2024,                                                                                        பொதுக்காலம் 30ஆம் வாரம் -புதன்

எபேசியர் 6: 1-9 
லூக்கா 13: 22-30 
 
 
விண்ணக வாசல் திறக்கப்பட திருந்தி வாழ்வோம்!
  

முதல் வாசகம்.
நேற்று கணவன் மனைவி ஆகிய இருவருக்குமிடையிலான உறவு முறையைப் பற்றி அறிவுறுத்திய பவுல் அடிகள் இன்று, பிள்ளைகள், தந்தையர், அடிமைகள் மற்றும் ,  உரிமையாளர்கள் என நான்கு தரப்பினரைத் தொட்டு அறிவுறுத்துகிறார்.
தொடக்கமாக, பிள்ளைகள்  அவர்களது  பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று அறிவறுத்துகிறார். “உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” எனும் கட்டளையை ஏற்று, மதித்து வாழ வேண்டும் என்கிறார். இதன் விளைவாக அவர்கள் நல்ல வாழ்க்கையைப் பெறுவதோடு,  நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்  என்றும் குறிப்பிட்டு எழுதுகிறார். 
அடுத்து, தந்தைமார்கள், அவரவர் பிள்ளைகளுக்கு  எரிச்சல் மூட்டும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்றும்  அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்.  
மூன்றாவதாக, அடிமைகளுக்காகப் பரிந்துரைக்கிறார். அவர்கள்  கிறிஸ்துவுக்கு சேவை செய்வது போல் அவர்களின் உரிமையாளர்களிடம்  மரியாதையுடனும் நேர்மையுடனும் கீழ்ப்படிந்தும் பணி புரிய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்  அவர்களது  உழைப்பில் வெளிவேடம் இருக்கக் கூடாது என்கிறார். அவர்களின் நற்பணிக்கு ஏற்றவாறு கடவுள் அவர்களுக்கு வெகுமதி அளிப்பார் என்கிறார். 
இறுதியாக,  உரிமையாளர்கள் அவர்களது அடிமைகளை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும்  அவர்களைக் கொடுமைப்படுத்தக் கூடாது என்றும், அனைவருக்கும் விண்ணகத்தில் உள்ளவரே ஒரே தந்தை என்பதையும்   நினைவூட்டுகிறார்.  தந்தையாம் கடவுள் மனிதரிடையே வேற்றுமை பாராட்டுவதில்லை என்பதை உணர்த்துகிறார்.   

நற்செய்தி.


எருசலேமுக்குச் செல்லும் வழியில் இயேசு நகரங்கள் வழியாகப் பயணம் செய்தார். வழியில் ஒருவர் சிலர் மட்டுமே மீட்புப் பெறுவார்களா? என்று  இயேசுவிடம் கேட்டார். அக்கேள்விக்குப் பதில் அளிக்க விரும்பிய இயேசு, அவரிடம் பலர் இடுக்கமான வாயில் வழியாக நுழைய முயற்சிப்பார்கள் ஆனால் வெற்றி பெற மாட்டார்கள் என்றும், உள்ளே நுழைய  இயலாதவர்கள் வீட்டு உரிமையாளரிடம் (இயேசுவிடம்) ‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பார்கள், அவரோ, ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்றும், உங்களை எனக்குத்  தெரியாது’ என்றும்  பதில் கூறுவார் என்கிறார்.
எனவே, அவர்கள் வெளியே நின்றவாறு, தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள, ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வார்கள் என்கிறார். ஆண்டவரோ அப்போது,  அவர்களை அவருக்குத் தெரியாது என்று கூறி உள்ளே அனுமதிக்க மாட்டர், கதவைத்திறக்கவும் மாட்டார் என்பது பதிலாக இருந்தது.  
நிறைவாக, ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் போன்று   கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ்ந்தவர்கள் இறையரசில்  இருப்பதைப்   பார்க்கும்போது அவர்களுக்கு மிகுந்த வருத்தம் ஏற்படும் என்றும், எல்லா திசைகளிலிருந்தும் மக்கள் இறையரசுக்குள் இருப்பார்கள் என்றும் முதலாவதாக அழைக்கப்பட இருந்தவர்கள் (யூதர்கள்) கடைசியாகாவும் கடைசியாக அழைக்கப்படவிருந்தவர்கள் (புறவினத்தார்) முதாலவதாகவும் இறையரசுக்குள் இடம் பெற்றிருப்பர் என்றும் கேள்வி எழுப்பியவருக்குப் பதில் அளிக்கிறார் இயேசு.

சிந்தனைக்கு.

அப்படியானால் யார்தான் மீட்புப் பெறுவார்கள்?  நாம் இறந்தப் பிறகு நமது ஆன்மாவின் கதி என்ன ?  இன்றைய நற்செய்தியில் இயேசு இக்கேள்விக்குப் பதில் அளிக்கிறார். நம்மில் பலர்  இறக்கும் தருவாயில்  விண்ணகத்தில் (மோட்சத்தில்)   நுழையப் போகிறோம் என்று கருதுவதுண்டு.  அதைத்தான் நாமும் விரும்புவோம். மேலும், நமக்கு உரியவர்கள் இறந்த நாள் முதல் அவர்களின் ஆன்மா கடவுளில்  இளைப்பாற வேண்டும் என்பதற்காக மன்றாடுவார்கள்.  
ஆனால் நம்முடைய ஆண்டவர் அவர்களிடம் "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் எனக்கு உங்களைத் தெரியவில்லை என்றும் கேட்கக்கூடும்.   துன்மார்க்கரே, என்னைவிட்டு அகன்று போங்கள்!” என்றுகூட கூறலாம். சிலரை  ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்பார்.  ஆம், சில ஆன்மாக்களுக்கு கதவடைப்பு நிகழும், சில ஆன்மாக்களுக்கு சிகப்ப கம்பள வரவேற்புக் கிடைக்கும். 
ஆண்டவர் ஆள் பார்த்துத் தீர்ப்புக்கூறுகிறாராஅல்லது அவர்களின் மண்ணக வாழ்வைச் சீரத்தூக்கி தீர்ப்பளிக்கிறாரா? நாம் விழக்கூடிய மிக ஆபத்தான பாவங்களில் ஒன்று அனுமானம். அனுமானம் கொடியது, ஏனென்றால் அது நம்மீது இரட்டை விளைவை ஏற்படுத்தும். நமது அனுமானம் எப்போதும் சரியாக இருக்கும் என்று நம்ப இயலாது.  நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் சூழலும் ஏற்படுவதுண்டு. 
நற்செய்தியில், இயேசு பயன்படுத்தும் "குறுகிய வாசல்" என்பது விண்ணக வாழ்வைப் பெறுவது எளிதல்ல என்று இயேசு நமக்குச் சொல்லப் பயன்படுத்திய உருவகமாகும். அதற்கு நம் நேர்மையான, உண்மையான, இரக்கமிகு, தன்னலமற்ற  செயல்பாடுகள் இன்றியமையாதவை.   ஆனால், உயிர் வாழ்கையில்   நாம் வேண்டுமென்றே கடவுளின் விருப்பத்திற்குப் புறம்பாக வாழ்ந்தால் மறுவாழ்வில் நமது ஆன்மா துன்புறும்.   
முதல் வாசகத்தில் பவுல் அடிகள் அறிவுறுத்தியதைப்போல்   ஆள்வோரும் ஆளப்படுவோரும், ஒவ்வொருவரும் நேர்மையோடும், பணிவோடும், இரக்கத்தோடும் ஒருவரை ஒருவர் ஏற்று வாழ வேண்டும். நம்மில் பலருக்கு இதை ஏற்றுக்கொள்வது   கடினமாக இருந்தால், இந்த போதனை நேரடியாக இயேசுவிடமிருந்து வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  
விண்ணக வாசலை தட்டி, தட்டி  ஆண்டவரை அழைக்கும் ஒருவராக நாம் இருந்தால் நமது ஆன்மாவுக்கு நாமே கேடு விளைவிக்கிறோம். நம் ஆன்மாவைக் கண்டதுமே ஆண்டவர் கதவைத் திறந்து விட நமது மண்ணக வாழ்வைச் சீர்ப்படுத்த முயற்சிப்போம். முயற்சி திருவினையாக்கும். 

இறைவேண்டல்.

என் இரக்கமுள்ள ஆண்டவரே, நீர்  மட்டுமே எனக்கு விண்ணக வாசலைத் திறக்கக்கூடியவர் என்பதை ஏற்று, உமது அழைப்புக்கு ஏற்ற வாழ்வு வாழும் வரத்தைத் தருவீராக. ஆமென்.