அன்பிலும் பண்பிலும் கிறிஸ்துவில் இரு மனங்கள் இணைவதே திருமணம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
29 அக்டோபர் 2024, பொதுக்காலம் 30ஆம் வாரம் -செவ்வாய்
எபேசியர் 5: 21-33
லூக்கா 13: 18-21
அன்பிலும் பண்பிலும் கிறிஸ்துவில் இரு மனங்கள் இணைவதே திருமணம்!
முதல் வாசகம்.
சகோதர சகோதரிகளே, ‘ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள், ஏனென்றால் நீங்கள் கிறிஸ்துவை மதிக்கிறீர்கள்’ என்கிறார் பவுல். இது கிறிஸ்துவின் மீதுள்ள மரியாதையின் காரணமாக ஒருவருக்கு ஒருவர் அடிபணிவதைப் பற்றியது. கிறிஸ்து திருஅவையின் தலை எனவும் திருஅவை அவருடைய உடல் எனவும் விவரிக்கும் ஆண்டவர், இந்த உண்மைக்கும் திருமணத்திற்கும் இடையே உள்ள தொடர்பை கொண்டு, கணவன் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார் எனும் தத்துவத்தை எடுத்துரைக்கிறார். ஆனாலும், மனைவிமார்கள், ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள் என்கிறார்
கணவனோ. தன் மனைவி மீது கிறிஸ்துவைப்போல் தியாக அன்பு கொண்டிருக்க வேண்டும் என்கிறார். அவளுடைய நன்மைக்கும் மகிழ்ச்சிக்கும் அவன் முதலிடம் அளிக்க வேண்டும் என்கிறார்.
அவ்வாறே, திருமணமான ஆண்களும், கிறிஸ்து திருஅவையை அன்பு செய்தது போலவே, கணவன்களும் அவர்கள் ஏற்குக்கொண்ட மனைவியரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று பணிக்கிறார். எப்படி கிறிஸ்து திருஅவைக்காக தம்மையே கையளித்தாரோ, எப்படி அவர் திருஅவையைத் தூய்மையாகவும் மாட்சி பெற்றதாகவும் விளங்கச் செய்தாரோ அவ்வாறு ஒவ்வொரு கணவனும் மனைவியை அன்பு செய்து குடும்பத்தை மாட்சியுறச் செய்ய வேண்டும் என்கிறார். அவர் மேலும் சுருக்கமாக, கணவர்கள் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
நிறைவாக, ‘“இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாயிருப்பர்” என மறைநூல் கூறும் கூற்றுக்கு ஆதராவகவும் தம் திருமண வாழ்வு படிப்பினையை நிறைவு செய்கிறார் பவுல் அடிகள்.
நற்செய்தி.
நற்செய்தியில் இயேசு, அவர் கொணர்ந்த இறையாட்சியை இரு உவமைப் பொருள்களைக் கொண்டு மக்களுக்கு விவரித்துக் கூறுகிறார். முதலாவதாக இறையாட்சியானது, ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும் என்கிறார். “ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின'' என்று இறையாட்சியின் வளர்ச்சியை ஒப்பிட்டு விளக்குகிறார்.
அடுத்து அவர், அதே இறையாட்சியை, புளிப்பு மாவோடு ஒப்பிட்டு விவரிக்கிறார். அவர், பெண் ஒருவர் சிறிதளவு புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார் எனவும் பின்னர், மாவு முழுவதும் புளிப்பேறியது எனவும் மக்கள் அறிந்த ஒன்றை உவமையாகக் கூறுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களில் இரு வகையான ஒப்பிடுதலைப் பார்க்கிறோம். முதல் வாசகத்தில் பவுல் அடிகள் திருமண வாழ்வில் கணவன் மனைவி இருவரும் கொண்டிருக்கும் அன்பை கிறிஸ்து திருஅவையோடு கொண்டிருக்கும் தூய அன்பிற்கு ஒப்பிட்டுப் போதித்தார். நற்செய்தியில், ஆண்டவர் இயேசு, இறையாட்சியை இரு வேறு பொருள்களுடன் ஒப்பிட்டு அதன் தன்மையை விவரிக்கிறார்.
இந்த இரு ஒப்பிடுதலிலும் மிகத் தூய்மையானதாக விளங்கியவை கிறிஸ்து திருஅவை மீது கொண்ட அன்பும் அவர் மண்ணகத்தில் நிலைநாட்ட விரும்பிய இறையரசும் ஆகும்.
குடும்பத்தில் இன்று காணப்படும் பெரும் பிரச்சனை கணவன் மனைவிக்குமிடையிலான ‘யார் பெரியவர்’ என்பதில் எற்படும் மோதல் எனலாம். முதல் வாசகத்தில் பவுல், கணவனை விட மனைவி குறைந்த மதிப்புள்ள நபர் என்று கூறவில்லை. கணவன் தன் மனைவிக்கு சொந்தக்காரன் என்றும் சொல்லவில்லை. மனைவி கணவனுக்குப் பணிந்திருக்க வேண்டும் என்றும் கணவன் தன் மனைவியை அன்பு செய்ய வேண்டும் என்றும் எடுத்துரைக்கிறார். மனைவி கணவனுக்குப் பணிந்திருப்பதென்பது அவள் கணவனுக்கு அடிமை என்பதல்ல. கடவுள் ஆணும் பெண்னுமாகப் மனிதனைப் படைப்பின் தொடக்கத்திலேயே உண்டாக்க்கினார். திருமணத்தின் முக்கியமான பண்பு அவர்களின் இணைபிரியா அன்பு; பிரிக்கமுடியாத பிணைப்பு. ஆனாலும் சிலர் ஒருவரை விட்டு ஒருவர் பிரிகிறார்கள். இதை அறியாமை என்பதா’ கொடுமை என்பதா? புரியவில்லை?
இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறன் என்று ஒருவர் மாறி ஒருவர் கொடுத்த வாக்குறுதி இன்று வியாபார ஒப்பந்தம்போல் ஆகிவிட்டது.
மேலும், அக்காலத்தில் பெற்றோர் பார்த்து நிச்சயித்து காலாகாலத்தில் கல்யாணம் செய்து வைப்பார்கள். இன்று அப்பழக்க வழக்கம் நடைமுறையில் இல்லை. திருமணத்தைப் பற்றிய திருஅவையின் படிப்பினை ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன’ கதைபோலாகி வருகிறது. இந்த சமய சடங்குகளை இந்த விடயத்தில் எதிர்த்து நிற்க மன உறுதி இல்லாமலும் வாளாவிருந்துவிடும் தமிழ் கிறிஸ்தவனும், கிறிஸ்தவப் பெண்ணும் தாங்கள் கிறிஸ்துவுக்கு அடிமைகளல்ல என்ற மனப்போக்கில் திருமணத்தை எங்கே நடத்தினால் அவர்களுக்குச் சிறந்ததோ அங்கே வைத்துக்கொள்கிறார்கள். இங்கே கிறிஸ்வுக்கு அவர்கள் பணிவதாக இல்லை. எல்லாம் ஒன்றுதான் என்ற சிந்தனை மோலோங்கி நிற்கிறது.
திருத்தந்தை பிரான்சில் தனது திருத்தூது மடல் ‘அன்பின் மகிழ்ச்சி’ எண் 321-ல் கணவன் மனைவி இருவரும், ஒருவர் மற்றவரில் குறைகளைக் காணும்போது அதை அன்பு நிறைந்த அக்கறையோடு கையாள வேண்டும் என்கிறார். ஆகவே, திருமண வாழ்வை கடவுள் ஏற்படுத்திய உறவாக எண்ணி இறுதிவரை அன்பில் நிலைத்து வாழ்வதே சிறந்த எதிர்நோக்காக இருக்கட்டும்.
இறைவேண்டல்.
‘கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்’ என்றுரைத்த ஆண்டவரே, எனது திருமண பிணைப்பை எந்நாளும் போற்றும் உமது சீடராக வாழும் மனவுறுதியைத் தாரும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452