நாம் திருஅவை எனும் கட்டடம், இயேசுவே இதன் மூலைக்கல்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
28 அக்டோபர் 2024, பொதுக்காலம் 30ஆம் வாரம் – திங்கள்
புனிதர்கள் சீமோன், யூதா – திருத்தூதர்கள்-விழா
எபேசியர் 2: 19-22
லூக்கா 6: 12-19
நாம் திருஅவை எனும் கட்டடம், இயேசுவே இதன் மூலைக்கல்!
பன்னிரண்டு திருத்தூதர்களில் இருவரின் நினைவு நாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். மறைநூலில் யூதா ததேயு (ஜூட்) மற்றும் சீமோன் ஆகியோரின் பெயர்களைத் தவிர இவர்களைப் பற்றிய வேறு எந்த விபரமும் நமக்குத் எளிவாகத் தெரியாது. இயேசுவின் பணியைத் தொடர "அனுப்பப்பட்ட" இவர்களின் பங்களிப்பைப் பற்றி இன்றைய வாசகங்கள் வழி அறிகிறோம்.
திருத்தூதர் என்பது ‘apostle’ என்ற கிரேக்கச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இலத்தின் மொழியில் ‘MIssio’ என்றுள்ளது. இதன் பொருள் ‘அனுப்பப்படுதல்’ என்பதாகும். ஆகவே, திருத்தூதர்கள் என்றாலே ‘அனுப்பப்பட்டவர்கள்’ என்று பொருளாகும்.
திருத்தூதர் சீமோன்.
திருத்தூதர் பட்டியலில் சீமோன் என்ற பெயரில் இருவர் காணப்படுகின்றனர். ஒருவர் பேதுரு என்னும் சீமோன் மற்றவர் தீவிரவாதி என்னும் சீமோன். இன்றைய விழா இரண்டாவாகக் குறிப்பிடப்பட்ட சீமோனுக்குரியது.
இவரைப் பற்றிய செய்தி திருவிவிலியத்தில், திருதூதர்கள் பெயர் பட்டியலைத் தவிர்த்து வேறு எங்கும் காணகிடைக்கவில்லை. லூக்கா நற்செய்தியில் இவர் தீவிரவாதி எனப்பட்ட சீமோன் என அழைக்கப்படுகின்றார்.
இவர் ஓர் தீவிரவாதியா?
பிறப்பால் எவரும் ஒரு தீவிரவாதியாவதில்லை. சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக, குறிப்பாக அவர்களுக்கான உரிமைகளும் உடமைகளும் மறுக்கப்படும் போது அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். உரோமையர் பாலஸ்தீனாவை ஆண்ட காலத்தில் யூதர்களின் பெரும்பாலான உரிமைகள் தடைசெய்யப்பட்டன. இதனை எதிர்த்து யூதர்களில் சிலர் கிளர்ச்சி செய்தனர். இழந்த உரிமைகளை மீண்டும் தம் மக்களுக்குப் பெற்றுத் தர மறைமுகமாகவும் தீவிரமாகவும் செயல்பட்டனர். இவர்கள்தான் பின்னர் ‘தீவிரவாதிகள்’ என பெயர் சூட்டப்பட்டனர். இவர்கள் கொள்கைவாதிகள். இத்தகையவர்களில் ஒருவராக திருத்தூதர் சீமோன் இருந்திருக்கலாம்.
இவர் இயேசுவிடம் பார்த்ததெல்லாம் பொதுவுடமை கொள்கை. ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும், ஒதுக்கப்பட்டோருக்குமான குரல். எனவே, இயேசுவோடு இணைந்தால் தனது கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் என்று கருதி சீமோன் இயேசுவின் அழைப்பை உடனே ஏற்றிருக்கலாம். இயேசுவில் இணைந்ததினால் காலவோட்டத்தில் இவரில் தீவிரவாதம் குறைந்து, மனிதநேயம் மேலிட்டது எனலாம்.
யூதா ததேயு (ஜூட்)
புனித யூதா ததேயு இயேசுவால் நேரடியாக அழைக்கப்பட்ட மற்றொரு திருத்தூதர். திருஅவையின் மரபு இவரை சமூகத்தில் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் ஆகியோரின் பாதுகாவலாராகப் போற்றுகிறது. கடும் நோயால் போராடிக்கொண்டிருப்பவர்களும் இவரின் பரிந்துரைக்கு வேண்டுவதுண்டு. இவரின் பரிந்துரை இறைவேண்டலால் கடவுளின் தயவைப்பெற்று நலம் பெற்றவர்கள் ஆயிரமாயிரம்.
நற்செய்தியில் இவர் பேசிய ஒரு வசனம், “ஆண்டவரே நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் செல்கிறேரே, ஏன்?” என்பதுதான் (யோவா 14:22).
சிந்தனைக்கு.
இன்றைய புனிதர்களான சீமோன் மற்றும் யூதா ததேயு பற்றி சிந்திக்கும்போது, நாம் மறைபரப்புப் பணியில் தமது பங்கை பற்றி சிந்தித்துச் செயல்பட நினைவூட்டப்படுகிறோம். உலகெங்கும் இன்று நூற்றுக்கணக்கான பிரிவினை சபைகள் தோன்றியுள்ளன, தோன்றிகொண்டும் உள்ளன. நேற்றுப் பெய்த மழையில் பூத்த காளான்கள் போன்று ஆங்காங்கே வெவ்வேறு பெயரில் சபைகள் முளைக்கின்றன. இவற்றுள் நாங்கள்தான் உண்மை, மற்றதெல்லாம் ‘போலி’ என்று மார்த்தட்டுவோரும் உண்டு. இதில் வேடிக்கை என்னென்றால், ஒரு போலி, மற்றொரு போலியை ‘போலி’ என்கிறது.
கத்தோலிக்கத் தாய் திருஅவை திருத்தூதர்கள் வழி வந்த திருஅவை எனும் பெருமைக்குரியது. திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறது என்று இன்றைய முதல் வாசகத்தில் புவுல் அடிகள் விவரிக்கிறார். அவ்வாறே, நாம் அனைவரும் இயேசுவோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறோம் என்கிறார்.
ஆகவே, புனித சீமோன் மற்றும் யூதா ததேயு போன்று அதிகம் பேசாமல், தூதரைப்பணியை இயேசுவின் அழைப்புக்கேற்ப, நாம் வாழும் இடங்களில் சிறப்புற, அக்கறையோடு செய்ய முற்படுவோம். ஒரே திருஅவை, அது கத்தோலிக்க, தூய, மற்றும் திருத்தூதர் வழி வந்த திருஅவை என்பதில் பற்றுறுதிக்கொள்வோம்.
இறைவேண்டல்.
திருத்தூதர்களை உமது பணிக்கு அழைத்த ஆண்டவரே, நானும் உமது தூதுரைப்பணியில் ஆர்வத்தோடு ஈடுபட அருள்தாரும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452