சீடத்துவம் என்பது கனி தரும் மரம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

26 அக்டோபர் 2024, பொதுக்காலம் 29ஆம் வாரம் -சனி
எபேசியர் 4: 7-16
லூக்கா 13: 1-9
சீடத்துவம் என்பது கனி தரும் மரம்!
முதல் வாசகம்.
நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக இவ்வாசகம் அமைக்கிறது. இது கிறிஸ்தவ சமூகத்திற்கான இரக்கம், ஒற்றுமை மற்றும் வளர்ச்சியின் இன்றியமையாத் தன்மையைப் பற்றி விவரிக்கிறது. பவுல் அடிகள் தனக்குப் பிடித்த இரண்டு ஒப்புமைகளான ‘உடல்’ மற்றும் ‘கட்டடம்’ ஆகிய இரண்டையும் பயன்படுத்தி மீண்டும் எபேசியருக்கு அறிவுறுத்துகிறார்.
முழு உடலின் செயல்பாடு என்பது பல உறுப்புகள் இணைந்து செயல்படும் ஓர் ஒருங்கிணைப்பு. 2) பல்வேறு பொருள்களைக் கொண்டு உருவாகுவது ஒரு கட்டடம். இந்த ஒத்தமைவுகளிலும் பவுல் அடிகள் இயேசுவை மையமாகவும் முக்கிய அங்கமாகவும் விவரிக்கிறார்.
அடுத்து கொடைகள் குறித்து பேசுகையில் அருளும் கொடைகளும் கிறிஸ்துவின் இரக்கத்தால் வழங்கப்பட்டுள்ளது என்கிறார் பவுல். இந்த அருளானது தனிநபர்கள் சமூகத்திற்கு வெவ்வேறு வழிகளில் பணி செய்ய உதவுகிறது என்கிறார்
தொடர்ந்து பவுல் அடிகள் கிறிஸ்துவின் ‘ஏறுதல் மற்றும் இறங்குதல்’ பற்றி விவரிக்கிறார். அவர் விண்ணிலிருந்து வந்தவர் என்பதால் அவர் மண்ணுலகின் பாதாளம் வரைச் என்று மீண்டும் எங்கிருந்து வந்தாரோ அங்கே சென்றார் என்ற இறையியல் எடுத்துரைக்கிறார். மேலும், கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர். அவரே சிலரைத் திருத்தூதராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார் என்பதை எடுத்துரைக்கிறார், இவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் உடல் என்று குறிப்பிடப்படும் திருஅவையைக் கட்டியெழுப்புவதற்குப் பொறுப்பாளிகள் என்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, மனமாறாத கலிலேயரைப் பார்த்து, ‘மனம் மாறாவிட்டால், நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்’ என்கிறார். தமது இந்த அறிவுறுத்தலை மேலும் விளக்கிக்கூற அத்திமர உவமையைப் பயன்படுத்துகிறார்.
ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டுவைத்து, அதை நல்லமுறையில் பராமரித்து, காய்க்கும் காலம் வந்ததும் மரத்தில் கனியைத் தேடுகின்றார். ஆனால் அதில் கனி இல்லாததைக் கண்டு, தன்னுடைய தோட்டத் தொழிலாளரைக் கூப்பிட்டு, “பாரும் இந்த மரத்தில் மூன்று ஆண்டுகளாகக் கனிகளைத் தேடுகிறேன். ஆனால் இது எந்தவொரு கனியையும் கொடுப்பதாகத் தெரியவில்லை. என்றும், எனவே, இந்த மரத்தால் பயனொன்றுமில்லை இதனை வெட்டி எறிந்துவிடுங்கள்” என்கிறார்.
அதற்குத் அத்தொழிலாளர் தன் முதலாளியைப் பார்த்து, “இந்த ஆண்டு இதை விட்டுவிப்போம், இதற்கு நன்றாகக் கொத்தி எருபோடுவோம். அடுத்த ஆண்டும் இது பலன் கொடுக்கவில்லை என்றால், பேசாமல் வெட்டி எறிந்துவிடுவோம்” என்று, மரத்தை அழிக்க மனமில்லாதவராக மாற்று வழிமுறையைப் பரிந்துரைக்கிறார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள் கூறுவதைப்போல் நாம் இறைவாக்கினரகவும், நறசெய்திப் பணியாளர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளோம். இப்பொறுப்புகள் அனைத்தும் உலகில் கடவுள் எதிர்பார்க்கும் பலனைத் தரவேண்டும். நாம் அவரது மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். திருஅவை எனும் கட்டடத்தைக் கட்டி எழுப்பவும் வளர்ச்சியை கொண்டு வரவும் நம் பங்கை செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
எல்லாம் நம்மைச் சார்ந்தது என்ற எண்ணம் கொண்டு நாம் நம் பங்கைச் செய்ய வேண்டும். ஆனால் எல்லாமே கடவுளைச் சார்ந்தது போல் நாம் இறைவேண்டலிலும் வழிபாட்டிலும் மட்டும் மூழ்கிக் கிடக்கிறோம். நல்ல பலன் தருவது என்பது வெற்றுப் பேச்சின் விளவு அல்ல. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. சோம்பித்திரிபவர்களால் திருஅவைக்குப் பயனேதும் கிடையாது.
இன்று, தமது கிறிஸ்தவ வாழ்வு காய்க்காத இந்த அத்தி மரத்தைப் போல் இருப்பதை நினைத்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நம் ஆண்டவர் நம்மிடம் வந்து நிலத்தை (உள்ளத்தை) பண்படுத்தி உரமிட நாம் அனுமதிக்க வேண்டும்ய நாம் நல்ல பலனைக் கொடுக்க வேண்டுமானால், நம் ஆண்டவரின் இந்த தலையீடு நமக்குத் தேவை. ஏனெனில், நாம் கடவுள் பண்படுத்தும் தோட்டமாக உள்ளோம் (1 கொரி 3:9).
நம்மில் நல்ல பலனைக் காண அவர் நம்மைப் பண்படுத்துகிறார் என்பதை உணர்ந்தால் நமக்கு ஆசீர்வாதம். இல்லையேல், ஆண்டவர் மனமாறாத கலிலேயருக்குக் கூறிய அழிவு நமக்கும் நேரிடும் என்பதை மறுப்பதற்கில்லை. நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும் (மத். 7:19) என்கிறார் ஆண்டவர்.
நல்ல மரங்கள்தான், ஆனால் கனி தராதவை. எனவே, பயனறற்வை என்கிறார் ஆண்டவர். ‘சிலர் அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஸ்ட்டம் இல்லை என அலுத்துக்கொள்வார்’ என்பது கனிதராத அத்திமரத்திற்கு ஒப்பாகும். முதல் வாசகத்தில் பவுல் அடிகள் கூறுவதை நினைவுகூர்ந்தால், ஆண்டவர் அருளும் கொடைகள் எல்லாம் திருஅவையைக் கட்டி எழுப்புவதற்குப் பயன்பட வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உமது கொடைகளால் நான் திருஅவையின் உண்மை பணியாளராகவும் கனிதரும் மரமாகவும் செழித்தோங்க அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
