கிறிஸ்தவர் ஒன்றிப்பே கிறிஸ்துவின் வெற்றி! | ஆர்.கே. சாமி | VeritasTamil

25 அக்டோபர் 2024, பொதுக்காலம் 29ஆம் வாரம் -வெள்ளி
எபேசியர் 4: 1-6
லூக்கா 12: 54-59
கிறிஸ்தவர் ஒன்றிப்பே கிறிஸ்துவின் வெற்றி!
முதல் வாசகம்.
இவ்வாசகத்தில், புனித பவுல் எபேசு மக்கள் தாங்கள் பெற்ற அழைப்புக்கு ஏற்ற வாழ்க்கையை வாழுமாறு தம் கடிதத்தில் வலியுறுத்துகிறார். தங்களை தூய வாழ்வுக்கு அழைத்தவரை அவர்களது வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
புனித பவுல் எபேசியர்களுக்கு அவர்கள் இனி அவர்களுக்குச் சொந்தங்கள் தங்கள் அல்ல என்றும், தனிநபர்கள் அல்ல என்றும் எடுத்துரைக்கிறார். அப்படியென்றால் அவர்கள் யார் என்ற கேள்விக்குப் பதில் தருகின்றார். அவர்கள் ஒரே கடவுளுடன் உறவு கொண்டு வாழ் அழைக்கப்பட்ட இறைமக்கள் சமூகம் என்பதை விவரிக்கிறார். எனவே, இந்த இறைமக்கள் சமூக உறவு அவர்களது, செயல்களிலும் நம்பிக்கையிலும் வெளிப்பட வேண்டும் என்பதோடு, அவர்கள் எவ்வளவு அதிகமாகக் கடவுளுடன் ஒன்றாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் ஒருவரோடொருவர் இணைகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்களின் வாழ்க்கை ஒரே கடவுளின் பண்புகளையும் இயல்புகளையும் பிரதிபலிக்கும் என்கிறார்.
நிறைவாக, ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர் என்று மூவொரு கடவுளின் மகத்துவத்தை எபேசியருக்கு அன்றும் நமக்கு இன்றும் எடுத்தியம்புகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில் இயேசு, காலத்தின் அறிகுறிகளை அறிந்து வாழ அழைக்கிறார். தம்மைச் சூழ்ந்திருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டிக்கிறார், ஏனெனில் அவர்கள் காலத்தின் அறிகுறிகளைக் கண்டறியத் தவறிவிட்டனர். கடவுளின் ஆட்சியை அறிவிக்க அவர் வந்திருக்கிறார் என்பதே இயேசுவின் காலத்தின் அடையாளங்கள். இறைவாக்கினர்களின் முன்ன்றிவிப்இன் நிறைவு காலம் அது. இறையாட்சியைத் தொடங்குவதற்காக இயேசுவின் செயல்களில் வெளிப்படும் அடையாளங்களை மக்கள் அறிந்திருந்தால், அவர்கள் அவருக்குச் செவிசாய்த்திருப்பார்கள், மனமறாற்றம் அடைந்திருப்பார்கள். வித்தியாசமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
மாறாக, அவர்களோ, யாருடன் ஒத்துப்போகவில்லையோ அவர்களுடன் சமரசம் செய்ய முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் சண்டையிடுகிறார்கள் என்கிறார். ஆகவே, அவர்கள் அவர்களின் எதிரியோடு நீதிமன்றம் போகும்போது, வழியிலேயே அவர்களது வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்றும், இல்லையேல், நடுவர் தீர்ப்பினால் அவர்களை சிறையிலடைக்கப்படுவர் என எச்சரிக்கிறார்.
சிந்தனைக்கு.
திருஅவையில் கூட்டொருங்கியக்கம் இன்றியமையாதது. இன்று எங்கும் சினோடலிட்டி (Synodality) என்று பேசப்படுகிறது. இதன் பொருள் திருஅவையில் மொழி, இனம், பண்பாடு போன்ற பன்முகத்தன்மையில் நல்லிணக்கத்தோடு, இன்றித்து கூட்டாக இயங்குதல் என்ற பொருள் பொதிந்துள்ளது. முதல் வாசகத்தில் எபேசியரை இத்தகைய கூட்டொருங்கியக்க வாழ்வுக்கே பவுல் அடிகள் அழைக்கிறார்.
இறைமக்களின் சமூக உறவு அவர்களது செயல்களிலும் நம்பிக்கையிலும் வெளிப்பட வேண்டும் என்பதோடு, அவர்கள் எவ்வளவு அதிகமாகக் கடவுளுடன் ஒன்றாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் ஒருவரோடொருவர் இணைந்து வாழ்வார்கள் என்கிறார் பவுல்.
எப்போதும் சமரசம் செய்துகொள்வது கிறிஸ்தவர்களுக்கான தனி அழைப்பு எனலாம். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பார்கள். நம்மைச் சுற்றி உள்ளோரின் குற்றங்களைப் பெரிது படுத்திக்கொண்டே இருப்பதால், இறுதியில் நாம் தனி மரமாக நிற்க வேண்டிய நிலைதான் ஏற்படும். கிறிஸ்துவின் சீடர்கள் ஒருபோதும் தனிமரங்களாக இருக்க முடியாது. நமது வாழ்வும் வழிபாடும் சமூகத்தன்மை கொண்டது. சமூகத்தன்மை அற்றது எதுவுமே கிறிஸ்துவம் ஆகாது.
நமது வாழ்க்கையின் எந்தப் பகுதி ஒத்திசைவற்றதாக உள்ளது என்பதை ஆராய்ந்தறிய வேண்டும். புனித பவுல் இயேசுவின் சீடர்களாக நாம் கொண்டிருக்கும் ஒன்றிப்பை வலியுறுத்துவது திருஅவையின் உயிர் நாடியாக உள்ளது. ஒன்றிப்பும் ஒருமைப்பாடுமின்றி கடவுளின் மீட்புத்தட்டம் விரைவில் நறைவேறாது. நமது ஒன்றிப்பில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது. எனவெதான், ‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!’ (யோவான் 17:21) என்று ஆண்டவர் மன்றாடினார். ஒற்றுமையாய் அல்லது ஒன்றாய் இருக்கவேண்டும் எனில், நாம் நமது தனித்துவத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதல்லை. மாறாக, இனம், மொழி, குலம் போன்ற அடையாளங்களைக் கடந்து நாம் ஒன்றாய் இருப்பது என்பதாகும். ‘எனது குலம்’, ‘எனது மொழி’ என்ற வறட்டுப் பிடிவாதம் திருஅவையின் வளர்ச்சிக்கு உதவாது.
கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நாம் ஒன்றாய் இருக்கின்றோம் (கலா 3: 28) என பவுல் நினைவூட்டுகிறார். காலத்தின் அறிகுறிகளை அறிந்து வாழ ஆண்டவர் அழைக்கிறார். இன்று ஒளியின் மக்களாக உள்ளோம். எனவே, சமத்துவம். ஒன்றிப்புப் போன்ற ஆண்டவரின் அழைப்புக்குச் செவிசாய்ப்போம்.
இறைவேண்டல்.
ஆண்டவரராகிய இயேசுவே. நான் உமது உடலின் உறுப்புக்களில் ஒன்று என்பதை உணர்ந்து வாழும் வரத்தை அருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
