நம்மில் மூட்டப்பட்ட அன்பின் தீ அணையா தீ ஆகட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

24 அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 29ஆம் வாரம் – வியாழன்

எபேசியர் 3: 14-21
லூக்கா 12: 49-53 
 
 
நம்மில் மூட்டப்பட்ட அன்பின் தீ அணையா தீ ஆகட்டும்!


முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகம் பவுல் எபேசியருக்காகச் செய்ய இறைவேண்டலாக அமைகிறது. 
ஒவ்வொரு குடும்பமும் தந்தையாம் கடவுளின் ஆசீரைப் பெற்றவை என்ற கருத்தை பவுல் அடிகள் வலியுறுத்துகிறார். எனவே, கிறிஸ்தவக் குடும்பங்களுக்கிடையை  யநிலவ வேண்டிய கிறிஸ்தவ ஒற்றுமையை மற்றும் நம்பிக்கையின் அவசியத்திற்காக தந்தையாம் கடவுளிடம்  மன்டியிட்டு மன்றாடுகிறார்.  
 அவருடைய மன்றாட்டில் :
•    கடவுளின் அளவற்ற மாட்சிக்கேற்ப தூய ஆவியார் எபேசியரின் உள்ளதில்  இறை வல்லமையையும்  ஆற்றலையும் அருளவேண்டும்,
•    நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து அவர்களின் உள்ளங்களில் குடிகொள்ள வேண்டும்,  
•    அன்பே அவர்களது வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைய வேண்டும், 
•    இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய மேன்மையான அன்பினை உணர வேண்டும், 
•    அறிவுக்கு எட்டாத இந்த கிறஸ்துவின் அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றலை அவர்கள்  பெற வேண்டும்,  
இவற்றின் வழியாக  கடவுளின் முழு நிறைவையும் எபேசியர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறார்.
மேலும் கிறிஸ்துவின் உடனிருப்பு  அவர்களின் உள்ளத்தில் நிலைத்திருக்க வேண்டும்  என்பதற்காகவும் வேண்டுகிறார். நிறைவாக, கடவுளுக்கே திருஅவையில்  கிறிஸ்து இயேசு வழியாகத் தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாக வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு தனது நற்செய்தி பிரிவினைக்கு ஆதாரமாக மாறக்கூடும் என்று வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறார்.  சிலர் அதை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள்.  மற்றவர்கள் அதை முற்றிலும் நிராகரிப்பார்கள்.  தனது நற்செய்தியானது, ஒற்றுமையையும் அமைதியையும் கொண்டுவர வேண்டும் என்று இயேசு   விரும்பினாலும், அது உண்மையில் சில குடும்பங்களுக்குள் பிளவுபடுத்தும் சக்தியாகவும் இருக்கலாம் என்கிறார்.
அவருடைய அன்பின் செய்தியை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள், கடவுளின் உடனிருப்பால் தூண்டப்பட்டு, கடவுளின் குடும்பத்தின் அங்கமாக இருப்பார்கள்.  அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் விலகிச் செல்வார்கள் என்றும் அவரது நற்செந்தியின் தன்மையை விவரிக்கிறார். இவற்றுக்கிடையில் 'ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்' என்கிறார் இயேசு.

சிந்தனைக்கு.

'ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்' என்று இயேசு கூறியதைப் பற்றி  முதலில் சிந்திப்போம். இயேசு பணிவாழ்வின் தொடக்கத்திலேயே திருமுழுக்கு யோவானால் திருமுழுக்குப் பெற்றார் என்பது நாம் அறிந்தது. ஆனாலும், இன்று அவரது மற்றொரு திருமுழுக்கைப் பற்றி இயேசு கூறுகிறார். இந்த திருமுழுக்கு நினைத்து அவர் ‘மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்' என்கிறார். மிகவும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியப் பாடுகள் மற்றும்  சிலுவை மரணத்தைக் கடக்க வேண்டும் என்பதை இயேசு இங்கே முன்னறிவிக்கிறார். 
அடுத்து, அவரது நற்செய்தியைக் கேட்ட எல்லா யூதரும் மனமாறவில்லை. பலர் அவருக்கு எதிராக வெகுண்டெழுந்தனர். அவர் அமைதியை விதைத்தாலும் அவரது வார்த்தைகள் எல்லாரையும் அவரோடு இணைக்கவில்லை. அவரில் இருந்துப் பிரிந்துச் சென்றனர். யூதர் மத்தியிலும் இயேசுவின் பக்கம் சிலரும் யூதர் பக்கம் சிலருமாக பரிந்திருந்தனர். 
முதல் வாசகத்தில், 'அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!' என எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்துகிறார் பவுல். இந்த அன்பிற்கு அடித்தளமாய் இருப்பது கிறிஸ்துவின் அன்பு என்கிறார். இயேசு அன்பைதூன் விதைத்தார், ஆனால் அவரது அன்பைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பலரிடம் இல்லாமல் போனது. 
நற்செய்தியில், “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்றும் கூறுகிறார். ஆக்கவும் அழிக்கவும் பயன்படுகின்ற தீயை மூட்டிவிட இயேசு வந்தார் என்றால் அதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இயேசுவின் உள்ளத்தில் ஒரு தீ எரிந்துகொண்டிருந்தது. அதுதான் கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் தணியாத ஆர்வம். இந்த ஆர்வத்தால் உந்தப்பட்ட இயேசு இவ்வுலகத்தில் மனித உள்ளங்களில் ஒரு தீயை மூட்டிட வந்தார். கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணரவேண்டும் என்னும் ஆர்வம்தான் இயேசுவின் போதனைக்கும் செயல்பாட்டுக்கும் உந்துசக்தியாக அமைந்தது.
இயேசு ஏற்படுத்திய இந்த தீ, ஏன் எரிந்துகொண்டிருக்க வேண்டும்? ஆம், இயேசு ஏற்படுத்திய தீ நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கான அவர் ஏற்படுத்திய தீ.  அவரது இரண்டாம் வருகை வரை அது இவ்வுலக மக்களிடையே எரிந்துகொண்டே இருக்க வேண்டும். அது அனைத்து ஆன்மாக்களையும் தூய்மையாக்கிக் கொண்டே இருக்க வெண்டும் என்பதை இயேசு விரும்புகிறார். அவர் ஏற்றிய அந்த தீ அணையவிடாமல் காக்க வேண்டியது நம் கடமை. அதாவது. நற்செய்தி பரப்புதல் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதாகும். இயேசு தன்னுயிரையே தந்து, இவ்வுலகில் மூட்டிய அன்புத் தீ, நம் வழியாகத் தொடர்ந்து எங்கும் பரவவேண்டும்.

இறைவேண்டல்.

ஆண்டவரைகிய  இயேசுவே, நீர் ஏற்றிய  அன்புத் தீ என் உள்ளத்தில்  என்றுமே அணையா விளக்காக எரிந்திட அருள்தாரும். ஆமென்.  

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452