விழித்திருப்போம், வருவேன் என்றவர் வருவார்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
23 அக்டோபர் 2024, பொதுக்காலம் 29ஆம் வாரம் – புதன்
எபேசியர் 3: 2-12
லூக்கா 12: 39-48
விழித்திருப்போம், வருவேன் என்றவர் வருவார்!
முதல் வாசகம்.
இவ்வாசகப் பகுதியல் பவுல் அடிகள் எபேசியருக்கு எழுதும்போது, அவர்களின் நன்மைக்காக கடவுள் அவருக்கு அளித்த அருளைப்பற்றி குறிப்பிடுகிறார். கிறிஸ்து பற்றிய மறைபொருளைப் பவுல் அடிகளுக்கு கடவுள் வெளிப்படுத்தியதை எபேசியருக்கு நினைவூட்டுகிறார். முற்காலத்தில் முன்னோர்களுக்கு தெரிவிக்கப்படாத இயேசு கிறிஸ்து பற்றிய மறைபொருள் இக்காலத்தில், தூய ஆவி வழியாகத் திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையைப் பகிர்கிறார்.
அடுத்து, அந்த மறைபொருள் என்னவென்பதை விவரிக்கிறார். நற்செய்தியின் வழியாக பிற இனத்தாரும், கிறிஸ்து இயேசுவின் மூலம் ஒரே உடலாகிய திருஅவையின் உறுப்பினரும், வாக்குறுதியின் பங்காளிகளாகவும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள். ஆம், ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் பங்காளிகளாக இயேசுவின் மூலம் யூதர்கள் மட்டுமல்ல, புறவினத்தாரும் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை எடுத்துரைக்கிறார்.
‘இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையனாகிய எனக்கு இந்த மறைபொருளை எடுத்துரைக்கும் அருள் வழங்கப்பட்டுள்ளது’ என்று பவுல் எபேசியருக்குத் தெரியப்படுத்துகிறார்
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து நம்பிக்கைக்குரிய பணியாளர் யார்? பிரமாணிக்க மில்லாத பணியாளர் யார்? என்பதற்கான தெளிவான விளக்கத்தைத் தருகின்றார். இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ”எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்'' என்தாகும்,
அவருடைய இரண்டாம் வருகை தொடர்பாகப் பேசுகின்ற இயேசு, அவருடைய வருகையின்போது நம்பிக்கைக்குரிய பணியாளரைப் போன்று நமக்குக் கொடுப்பட்ட பணிகளை நல்லவிதமாய் செய்து, ஆயத்தமாய் இருந்தால், ஆசிர்வாதமும் கிடைக்கப்பெறுவோம் என்றும், அதைவிடுத்து ஆண்டவர் வரக் காலம் தாழ்த்துவார் என சொல்லிக்கொண்டு எப்படியும் வாழ்வோருக்குக் கிடைக்கின்ற தண்டனை பற்றி எடுத்துரைக்கின்றார்.
“தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே பொறுப்புள்ள பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன் என்று முடிக்கிறார்”.
சிநுதனைக்கு.
நம்மில் பலர் அழைக்கப்பட்ட நிலையில் ஆண்டவரின் பணியாளர்களாக திருஅவையில் உள்ளோம். இதில் என்னைப் பற்றி நான் சிந்திக்கையில், நான் பல வழிகளில் கடவுளின் கொடையைப் பெற்றுள்ளேன் என்பதை உணர முடிகிறது. நான் பெற்றுள்ள கொடைகளில் மிகவும் இன்றியமையாதது ஆண்டவரில், அவரது வார்த்தையில் நான் கொண்ட நம்பிக்கை. என்னுடைய வாலிப வயதிலேயே இந்த நம்பிக்கை எனும் கொடையை நன் அறிந்துகொண்டேன்.
மேலும் பல ஆண்டுகளாக நல்ல, கிறிஸ்தவ/கத்தோலிக்க கல்வியின் மூலம் வளரவும் கற்றுக்கொள்ளவும் வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்துக்கொண்டேன். ஆம். விழிப்பாக இருத்தலுக்கு நமது அழைப்பைப் பற்றிய புரிதல் அவசியம். ஆண்டவர் விழிப்பாக இருக்கும் பணியாளரை போற்றுகிறார்.
முதல் வாசகத்தில் புறவினத்தாருக்கும் மீட்பின் செய்தியைக் கொண்டு செல்ல அழைக்கப்பட்டவர் பவுல் அடிகள். அவர் மக்கள் மத்தியிலும் எதிர்ப்பவர்கள் மத்தியிலும் ஆற்ற வேண்டிய பணியில் ஆழ்ந்திருந்தார். எபேசியர்களிடம் புனித பவுல் கூறியது போல், நம்மால் முடிந்த வரை விழிப்பாக இருந்து செயல்பட ஆண்டவர் அழைத்த வண்ணம் உள்ளார்.
நமது வாழ்க்கையில் கடவுளின் உடனிருப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். உண்மையான தூய்மையான வாழ்க்கைக்கு நம்மை வழிநடத்தும் வகையில், இரவும் பகலும் நம்மோடு பேச அவர் விரும்புகிறார். அவருக்குச் செவிசாய்க்க நாம் விழிப்பாக உள்ளோமா என்பதே கேள்வி. ‘அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது’ ( 1 பேதுரு 5”8) என்று பேதுருவும் நம்மை எச்சரிக்கிறார்.
நிறைவாக, நாம் விண்ணக அரசுக்குள் நுழைய வேண்டுமென்றால் நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். ஆன்மா சாவான பாவ நிலையில் இருந்தால் விண்ணக அரசை இழந்து, பேரிடர் நிலைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்வோம். என்வே, இறந்த பின் நாம் இயேசுவுக்குள்ளும், இயேசு நமக்குள்ளும் என்றென்றும் நிலைத்திருக்க நமது விழிப்பு நிலை இன்றியமையாதது. நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு என்பதுபோல் காலமெல்லாம் சாக்குப்போக்குகள் கூறிக்கொண்டே இருந்தால், நமக்கு விடுதலை வாழ்வு என்பது பகல் கனவாகிவிடும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற எண்ணத்தில் எப்போதும் விழிப்புடன் இருக்க என்னை ஆசீர்வதியும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452