அர்ப்பணமற்ற சீடத்துவம் அற்பம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் 33ஆம் வாரம் –திங்கள்
திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு
தி.ப. 28: 11-16, 30-31
மத்தேயு 14: 22-23
அர்ப்பணமற்ற சீடத்துவம் அற்பம்!
முன்னுரை.
இன்று திருத்தூதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் பெயரிலான பேராலய அர்ச்சிப்பு விழாவைக் கொண்டாடும் நாம், இவ்வாலயங்களின் வரலாற்றை அறிய முற்படுவோம்.
உரோமை நகரின் முதன்மையான பேராலயங்கள் நான்கு: புனித பேதுரு, புனித பவுல், புனித யோவான் லாத்தரன், மற்றும் புனித மரியன்னை என்பனவாகும்.
பனித பேதுரு பேராலயம்
கீழ் கி.பி. 64 ஆம் ஆண்டு, திருத்தூதர்களின் தலைவரும் முதல் திருத்தந்தையுமான பேதுரு உரோமையை ஆண்டு வந்த நீரோ மன்னனால் வத்திக்கான் குன்றின் கீழ் கொல்லப்பட்டார். அதன்பின் கி.பி. 313-ல் கிறிஸ்தவத்தைத் தழுவிய கான்ஸ்டான்டைன் என்ற மன்னர் பேதுருவின் கல்லறை இருந்த இடத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டினார்.
ஆண்டுகள் உருண்டோடின. ஆலயமும் பழுதடைந்தது. எனவே, 1506 ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ், அங்கு புதிதாக ஆலயம் ஒன்றைக் கட்டத் தொடங்கினார். இவர் தொடங்கிய இந்தப் பணியை, திருத்தந்தை எட்டாம் அர்பன் என்பவர்தான் 1626 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 18 ஆம் நாள் நிறைவுசெய்தார் என்று திருஅவை வரலாறு கூறுகிறது. பல அற்புத கைவேலைப்பாடுகளுடன் பலருடைய உழைப்பில், பல ஆண்டுகளாகக் கட்டி எழுப்பப்பட்ட புனித பேதுரு பேராலயம் இன்றைக்கும் அதே பொழிவோடும் எழிலோடும் மக்களுக்குக் காட்சி அளிக்கிறது என்றால் மிகையாகது.
புனித பவுல் பேராலயம்.
அடுத்ததாக, திருத்தூதர் புனித பவுல் உரோமையில் கொல்லப்பட்டார். இங்கேயும் கான்ஸ்டான்டைன் மன்னர் புனித பவுலுக்கென்று பேராலயம் கட்டத் தொடங்கினார். இப்பணி பின்னர், தருத்தந்தை பெரிய லியோவின் ஆசியோடு முதலாம் தியோடர் என்ற மன்னர் அதை கட்டி முடித்தார்.
இவ்வாலயம் 1833 ஆண்டு ஏற்பட்ட தீயில் சேதமடைந்தது. எனவே திருத்தந்தை பதினோறாம் பத்திநாதருடைய காலத்தில், உலகெங்கிலும் பரவியிருந்த கிறிஸ்தவர்களிடமிருந்து நீதி திரட்டப்பட்டு, புனித பவுல் பேராலயமானது சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டது.
நிறைவாக, இந்த இரு ஆலயங்களின் அர்ச்சிப்புப் பெருவிழா நவம்பர் 18 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு, இன்றுவரை அதே தேதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம் பவுல் உரோமையை அடைந்த நிகழ்வை சித்தரிக்கிறது. அங்கு, பவுல் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தார். வாடகை வீட்டிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் சொந்த வீடு ஒன்றை வாங்கி, அல்லது கட்டி, வாழ்வது இயலபான ஒன்று. ஆனால், பவுல் அடிகளோ, நற்செய்திப் பணிக்காக தன் சொந்த வீட்டை விட்டு வெளியேறினார். நற்செய்திப் பணிக்காக நாடோடியாகத் திரிந்தார். இறுதியில் உரோமையில் வாடகை வீட்டில் தங்கலானார்.
கடவுளின் அழைப்பை ஏற்ற பவுல் அனைதைதையும் துச்சமெனக் கருதினார். நற்செய்திக்காகப் பவுல் கொண்டிருந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக, அவரது தியாகச் செயல் அமைந்தது. உரோமையில் கொல்லப்பட்டார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், பேதுரு கடலின் மேல் நடக்கும் அவரது முற்போக்கான செயலை வாசிக்கிறோம். அவர் ஒரு மீனவர். 'மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத் தர வேண்டுமா...' நிச்சயமாக அவருக்கு நீந்தத் தெரிந்திருக்கும். ஆனால், இயேசுவுக்காக அந்தத் திறனை அவர் வெளிப்படுத்தவில்லை என்றே கூற வேண்டும். 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' என்ற அவருடைய வார்த்தைகளை எப்படி ஏற்பது என்பது நமக்குப் புரியாத புதிர். ஆனாலும், நமது சோதனை நேரத்தில், 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' என்று கதறி அழ பேதுரு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். இயேசு அவரை தம் கரங்களால் பற்றித் தூக்கினது போல நம்மையும் தூக்குவார் என்ற அரிய படிப்பினையைப் பேதுரு இன்று நம்மோடு பகிர்கிறார்.
சிந்தனைக்கு.
இந்த இரண்டு ரோமானிய பேராலயங்களின் அர்ப்பணிப்பை நாம் காணும்போது, இவற்றை இதர தேவாயங்களை விடவும் அதிகமாக மதிக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 அன்று, திருஅவை புனிதர்களான பேதுர் மற்றும் பவுல் ஆகியோரின் தனித்துவத்தைக் கொண்டாடுகிறது. இன்று, நவம்பர் 18 ஆம் தேதி, இந்த இரு புனிதர்களையும் அவர்களின் கல்லறைகளின் மீது கட்டப்பட்டு, அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பேராலயங்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் போது, மீண்டும் ஒருமுறை நமது அன்பையும், மரியாதையையும் பதிவுச் செய்கிறோம்.
புனித பேதுரு மற்றும் பவுல் ஆகிய இருவரின் கல்லறைகள் மேல் எழுப்பப்பட்ட இந்த இரண்டு பேராலயங்களும் நமது நம்பிக்கை வாழ்வுக்கும் சாட்சிய வாழ்வுக்கும் அடித்தளமாக நிற்பதைப் போல, அவர்களின் வாழ்க்கையும் பணி வாழ்வும் நமது பணி வாழ்வுக்கு உந்துதலாக இருக்கின்றன. விண்ணகத்தின் திறவுகோல் வழங்கப்பட்ட முதல் திருத்தந்தையாக புனித பேதுரு விளங்குகின்றார்.
புனித பவுலோ புறவினத்தாருக்குச் சிறந்த நற்செய்தியாளராக இருந்தார், மேலும் புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியைக் கொண்ட அவரது விரிவான எழுத்துக்களின் காரணமாக, திருஅவை அதன் வாழ்க்கை மற்றும் நம்பிக்கையின் இறையியல் வெளிப்பாட்டைப் பெற்றது என்றால் மிகையாகாது.
ஆகவே, புனித பேதுரு மூலம் நாம் உறுதியான திருஅவையாக ஒருங்கிணைக்கப்பட்டாலும், புனித பவுலைப் போல அனைவருடனும் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டு மண்ணகத்தின் எல்லை வரை செல்ல வேண்டும். இல்லையேல் மேற்கண்ட இரு பேராலயங்களும் உலகில் இரு காட்சியகங்களாகவே தோன்றும்.
கிறிஸ்துவின் பணிக்காக நமது சொந்த வாழ்க்கையை அர்ப்பணிப்பதை இன்று புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நமது அர்ப்பண வாழ்வே நம்மில் கடவுளின் எதிர்ப்பார்ப்பு.
இறைவேண்டல்.
புனித பேதுருவையும் பவுல் அடிகளையும் அழைத்த ஆண்டவரே, உமது பணியில் நானும் சிறந்தோங்க அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452