கலங்கமற்ற சீடர்கள் திருஅவையின் உயிர்நாடி! | ஆர்.கே. சாமி | VeritasTamil
11 நவம்பர் 2024 பொதுக்காலம் 32ஆம் வாரம் –திங்கள்
தீத்து 1: 1-9
லூக்கா 17: 1-6
கலங்கமற்ற சீடர்கள் திருஅவையின் உயிர்நாடி!
முதல் வாசகம்.
ஆயர் பணித் திருமுகங்களுள் ஒன்று தீத்துவுக்கு எழுதப்பட்ட இத்திருமுகம். தீத்துவைப் பற்றி அதிக விபரங்கள் நமக்குத் தெரியா விட்டாலும், பவுல் அடிகள் எருசலேமுக்குச் சென்றபோது, தீத்துவுப் பர்னபாவும் உடன் சென்றனர் என்று அறிகிறோம் (கலா 2:1). தீத்து ஒரு கிரேக்கர். இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்டு மனமாறியவர். இவர் கிரேக்க நாட்டின் தெற்கே இருந்த கிரேத்துத் தீவின் சபைக்குப் பொறுப்பாக பவுல் அடிகளால் நியமிக்கப்பட்டவர்.
பவுல் அடிகள், தனது உடன் உதவியாளரான தீத்துவுக்கு இத்திருமுகத்தை எழுதுகிறார். அவர் தொடங்கிய நற்செய்திப் பணியைத் தொடரவும், வளர்ந்து வரும் கிறிஸ்தவச் சமூகத்தைக் கட்டி எழுப்ப உதவவும் கிரேத்துத் தீவில் தீத்து மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து, இறைமக்களைக் கண்காணிக்க நகர் தோறும் மூப்பர்களை ஏற்படுத்த வேண்டும் என்று பவுல் தீத்துவுக்குப் பணிக்கிறார்.
அப்படி தீத்து நியமிக்கும் ஆயர்கள் அல்லது மூப்பரகள் நற்குணங்களைப் பற்றி இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். அந்த மூப்பர்கள் மக்களின் குறைச்சொல்லுக்கு ஆளாகாதவராயும், ஒரு மனைவியைக் கொண்டவராயும் நம்பிக்கை கொண்ட பிள்ளைகளை உடையவராயும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அவர்கள் ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்பவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகவோ கட்டுக்கடங்காதவர்களாகவோ இருக்கக்கூடாது. என்பதை வலியுறுத்துகிறார்.
அத்துடன், தீத்து நியமிக்கும் கண்காணிப்பாளர்கள் அல்லது ஆயர்கள், அகந்தை, முன்கோபம், குடிவெறி, வன்முறை, இழிவான ஊதியத்தின் மேல் ஆசை ஆகியவையிலிருந்து விடுபட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று தீத்துவைப் பணிக்கிறார். நிறைவாக, அவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட உண்மைச் செய்தியைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று கற்பிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடர்களிடம் பாவத்தில் விழச் செய்யும் காரியங்கள் தவிர்க்க முடியாது என்றும், அப்பாவச் செயல்களுக்கு யார் காரணமோ, அவை யாரால் நிகழ்கின்றனவோ அவருக்குக் கேடு வரும் என்றும் எடுத்துரைக்கிறார்.
பாவத்திற்குக் காரணமாக உள்ளோரின் கழுத்தில் ஒரு எந்திரக்கல்லைக் கட்டி அவர்களைக் கடலில் தள்ளிவிடுவது அவர்களுக்கு நல்லது என்கிறார். இதனால் இளம் தலைமுறையினர் காப்பாற்றப்படலாம் என்கிறார். எனவே, அவர் தம் சீடர்களை பின்வருமாறு, எச்சரிக்கிறார்.
‘’உன் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கடிந்துகொள்;
அவர் மனந்திரும்பினால், அவரை மன்னியுங்கள்.
மேலும் அவர் ஒரே நாளில் ஏழு முறை உங்களுக்கு தவறு செய்தால்
ஏழு முறை உங்களிடம் திரும்பி வந்து, 'மன்னிக்கவும்,'
நீ அவனை மன்னிக்க வேண்டும்" என்கிறார்.
அப்போது, இயேசுவிடம் 12 திருத்தூர்களும், ‘திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்கவே, இயேசு, “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில், அதுவும் உங்களுக்குக் கீழ்ப்படியும்’ எனப் பதில் அளித்தார்.
சிந்தனைக்கு.
இந்த வாசகங்கள் எல்லா இறைமக்ளுக்கும் பொருந்தும் என்பது வெள்ளிடைமலை. ஏனென்றால் நாம் அனைவரும் நம்முடைய நம்பிக்கை வாழ்வில் கடவுள் நமக்கு விடுத்த அழைப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். நமது திருமுழுக்கினால், நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் மும்பெரும் பணிகளான் அரச, குருத்துவ மற்றும் இறைவாக்குப் பணிகளில் பங்கு கொள்ள வேண்டியுள்ளது.
நாம் ஒவ்வொருவரும் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பங்கெடுக்கும் கடமை உள்ளது. நாம் திருஅவையில் பேசா மடந்தைகளாகவும், வாய் இல்லாப் பூச்சிகளாகவும் காலத்தைக் கழிப்பதற்கானது அல்ல நமது தேர்வு. எனவேதான் நற்செய்தியில், சீடர்கள் இயேசுவிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்கின்றார்கள். நம்பிக்கை தங்களிடம் மிகுதியாகுகின்ற பட்சத்தில், நற்செய்தியைப் பிறரோடு துணிவுடன் பகிர முடியும் என்பதை அவர்கள் நம்பினர். ஆனால் இயேசுவோ. மிகுதியான நம்பிக்கை இருந்தால்தான் நற்பணி செய்ய முடியும் என்பதல்ல, குறைவான நம்பிக்கையும், அதாவது, “கடுகளவு நம்பிக்கை’ இருந்தாலும் போதும் சீடர்களால் சாதிக்க முடியும் என்கிறார்.
மேலும், திருமழுக்கால் இறைவாக்குப்பணி, ஆயர் பணி மற்றும் அரசப் பணிகளில் ஈடுபட வேண்டிய நம்மில், அகந்தை, முன்கோபம், குடிவெறி, வன்முறை, இழிவான ஊதியத்தின் மேல் ஆசை ஆகியவை இருக்கக் கூடாது என்கிறார் பவுல் அடிகள். இவரது இந்த படிப்பினை நமக்கு இன்றியமையாதது.
நற்செய்தியில், மற்றுமொரு ஆழமான படிப்பினையைத் தருகிறார் ஆண்டவர். ஆம், மனிதர்கள் இன்றைக்கு அதிகமாக அவதிப்படுவது நரம்புத் தளர்ச்சியினால் அல்ல, நம்பிக்கைத் தளர்ச்சியினால்” என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை தளர்ச்சியால் விளைவது அவநம்பிக்கை. அவநம்பிக்கை நமது சீடத்துவ வாழ்வை சீரழிக்கும்.
நிறைவாக, நாம் பிறரை பாவத்தில் விழச் செய்வது ஆகாது என்கிறார் ஆண்டவர். அத்தகையோர் வாழத் தகதியற்றவர்கள் எனும் பொருளில், அத்தகையோர் கழுத்தில், ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது நல்லது என்கிறார் ஆண்டவர். ஆம், நம்பிக்கை வாழ்வில் பலவீனமாக இருப்பவர்களை வழி நடத்த வேண்டியவர்கள் நாம். மாறாக, அவர்களைப் பாவ வாழ்வுக்குத் தூண்டக்கூடாது. முதல் வாசகத்தில் பவுல் அடிகள் கூறுவமைப்போல், கடவுள் நம்மை கண்காணிப்பாளர்களாக அழைத்துள்ளார். அனைவரையும் பாரபட்சமின்றி கண்காணித்து நம்பிக்கை வாழ்வில் கரைசேர்ப்பது நமது தலையாகப் பணியாகும்.
இயேசுவின் அரசப் பணியை ஏற்றுள்ள நாம் ஒவ்வொருவரும் ‘ஆயர்’ நிலையில் தீத்துவைப் போல கண்காணிப்பாளர்கள். ஆகவே, மக்களின் குறைச்சொல்லுக்கு ஆளாகாதவராயும், ஒரு மனைவியைக் கொண்டவராயும், நம்பிக்கை கொண்ட பிள்ளைகளை உடையவராயும் இருக்க வேண்டும் என இன்று நினைவூட்டப்படுகிறோம்.
இறைவேண்டல்.
இரக்கத்தின் ஆண்டவரே, நான் ஒருபோதும் பிறருக்குச் சோதனையின் கருவியாக மாறாமல், உமது அன்பின் தூதுவராக செயல்படும் சீடராகப் பணியேற்க அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452