பிறர் உழைப்பில் வாழ்வது வாழ்வல்ல! | ஆர்.கே. சாமி | VeritasTamil
8 நவம்பர் 2024 பொதுக்காலம் 31ஆம் வாரம் –வெள்ளி
பிலி 3: 17- 4: 1
லூக்கா 16: 1-8
பிறர் உழைப்பில் வாழ்வது வாழ்வல்ல!
முதல் வாசகம்.
இன்று நமது முதல் வாசகத்தில், புனித பவுல் பிலிப்பியில் வாழும் கிறிஸ்தவச் சமூகத்தை அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அவர் தன்னையும் தனது உடன் உழைப்பாளர்களையும் அச்சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக முன்வைக்கிறார்.
அவர் நற்செய்தியின் உண்மைக்கு எதிராகப் போதிக்கும் சில தவறான போதகர்கள் இருப்பதாக அவர் சமூகத்தை எச்சரிக்கிறார். அவர்கள் சுயநல ஆதாயங்களில் மட்டுமே ஆர்வமாக உள்ளனர் என்றும், அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியதே என்றும் கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிரான அவர்களைப் பற்றி மேலும் எடுத்துரைக்கிறார்.
தொடர்ந்து, பிலிப்பியருக்கு உண்மை கிறிஸ்தவர்களுக்கு இவ்வுலகம் அல்ல, மாறாக, விண்ணகமே நமக்குத் தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம் என்றும், அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர் என்றும் கிறிஸ்துவைப் பற்றிய நம்பிக்கையை வெளிப்படுத்தி எழுதுகிறார்.
நிறைவாக, அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள் என்றும் அவர்களை வாழ்த்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், தமது சீடர்களுக்கு மற்றுமொரு உவமையின் வழி விவேகத்தின் அல்லது முன்மதியின் அவசியத்தை எடுத்துரைக்கிறார் இயேசு. இறைமக்களுக்கு இத்தகைய கொடை அருளப்படுகின்றது. முன்மதியோடு நடந்து இறையாட்சியை மக்களுக்கு அறிவித்திடல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
இத்தகைய முன்மதியை விளங்கிக்கொள்ள ஓர் உவமையை இயேசு கையாள்கிறார். ஒரு தலைவரிடத்தில் பணிபுரியும் பொறுப்பாளரைக் குறித்து பேசுகின்றார். பொறுப்பாளரோ அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இல்லை என்பதும் அவரிடத்தில் தில்லு முல்லு உள்ளதையும் அறிகிறார். எனவே, அந்தப் பணியாளனை அழைத்து கணக்குக் கேட்கின்றார்.
தலைவருக்கு உண்மை தெரிந்தால் அவர் பணியிலிருந்து நீக்கப்படலாம் என்றுணர்ந்து, தப்பிக்க வழிதேடுகிறார். அப்போதுதான் அவருக்கு தன்னுடைய தலைவரிடத்தில் கடன்பட்டவர்களிடம் கொஞ்சம் சலுகை காட்டினால் தன்னால் நன்மை அடைந்த அவர்களால் பின்னாளில் உதவி கிடைக்கும என்ற எண்ணம் தோன்றுகிறது. அவர் தனக்குத் தோன்றிய இந்த எண்ணத்தின்படி படியே செய்கின்றார். தன் தலைவரிடம் அவர்கள் கடனாகப் பெற்றிருந்த பொருள்களின் எண்ணிக்கையைக் குறைத்து. புதிய கடன் சீட்டை தருகிறார். இதனால் முன்மதியோடு செயல்பட்ட அந்த வீட்டுப் பணியாளரை அவரது முன்மதியின் நிமித்தம் தலைவர் பாராட்டுகின்றார்.
சிந்தானைக்கு.
நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் நேர்மையாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதோடு, முன்மதியோடு செயல்படும் ஆற்றலும் தேவை என்கிறார் ஆண்டவர். வெள்ளம் வருமுன் அணைபோடு என்பார்கள். இயேசுவின் இந்த உவமைக்கு இப்பழமொழி மிகவும் பொருந்தும் என நினைக்கிறேன். ஆனால், நாம் அந்த வீட்டுப் பணியாளரை இயேசு பாராட்டியதால், அவர் போன்று தில்லு முல்லு கொண்டோராக வாழ வேண்டும் என்று இயேசு கூறவில்லை. அந்தப் பணியாளர் நேர்மையற்றவர் என்பதை மறுப்பதற்கில்லை.
இயேசு, இங்கே அறிவுறுத்துவது என்னவெனில், உலக மக்கள் (இருளின் மக்கள்) முன்மதியோடு நடந்துகொள்ளும்போது, ஒளியின் மக்கள் கட்டாயம் முன்மதியோடு நடக்க வேண்டும் என்ற செய்தியைத்தான் இயேசு சொல்ல வருகின்றார். எனவேதான், ‘இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே, பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்’ (மத் 10:16) என்றார். இதில் ஓநாய்கள் என்பதை இருளின் மக்கள் என்றும் பொருள் கொள்ளலாம். .
இந்த உவமையில், மற்றொரு செய்தியும் நமக்குத் தரப்படுகிறது. ஆம், கடவுள் நமது தலைவர், அனைத்திற்கும் உரிமையாளர். ஆதலால் அவரது விருப்பத்திற்குப் பதிலாக நமது சொந்த விருப்பத்திற்கும் சுயநலத்திற்கும் அவரது உடமைகளைப் பயன்படுத்தும்போது நாம் வழிதவறுகிறோம். எனவே, கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகும் முன் முன்மதியோடு நல்வழிதேடி நல்வழி நடக்க முயற்சிக்க வேண்டும்.
‘உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும்’ என்று தலைவர் சொல்வதை கடவுள் நம்மிடம் கூறுவதாக நாம் எடுத்துக்கொண்டால், நமது குற்றங்களுக்கு நம்மால் கணக்குக் காட்ட இயலுமா? முதல் வாசகத்தில், பவுல் பிலிப்பியரிடம், ‘கிறிஸ்தவர்களுக்கு இவ்வுலகம் அல்ல, மாறாக, விண்ணகமே நமக்குத் தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்’ என்கிறார். ஆகவே, இந்த தற்காலிக உலக வாழ்வுக்காக நாம் சுயநலப் பேரில் பெற விரும்பும் பொருள் செல்வத்தைப் பற்றிக்கொள்ள விழைவது குற்றம். நற்செய்தியில் அந்த பணியாளனின் தில்லுமுல்லு தனத்தை இயேசு பாராட்டவில்லை. அவன் நல்லவன் என்றும் கூறவில்லை. அவனுடைய அறிவுக் கூர்மையைத்தான் போற்றுகிறார்.
பொருள் செல்வத்தின் மீதான பற்றுதலிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று அவர் விரும்புகிறார், இதன் மூலம் நம்மிடமுள்ள அனைத்தையும் அவருடைய மாட்சிக்காகவும் அவருடைய நோக்கத்திற்கு ஏற்பவும் பயன்படுத்த நாம் நேர்மை உள்ளம் கொள்வோம். பவுல் அடிகளைப் போல் நம்மை நாம் பிறருக்கு மாதிரியகக் காட்ட விழைவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நீர் என் பொறுப்பில் ஒப்படைத்தவற்றைத் தவிர அடுத்தவருக்குச் சொந்தமான எதையும் நான் பற்றிக் கொள்ளாதபடி என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452