அவர் குரலுக்குச் செவிசாய்க்கும் ஆடுகள் வாழ்வு பெறும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
7 நவம்பர் 2024 பொதுக்காலம் 31ஆம் வாரம் –வியாழன்
பிலி 3: 3-8
லூக்கா 15: 1-10
அவர் குரலுக்குச் செவிசாய்க்கும் ஆடுகள் வாழ்வு பெறும்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், பவுல் அடிகள் பிலிப்பியர்களிடம் அவர் ஒரு காலத்தில், குறிப்பாக அவரது இளமைப் பருவத்தில், யூதச் சமயத்தைத் தழுவியபோது, எல்லாம் தன்னிடம் இருப்பதாக நினைத்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் விருத்தசேதனம் செய்யப்பட்டவர் என்றும், அவர் இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேய பரிசேயர் என்றும் அவரைப் பற்றிய முழு விபரத்தைப் பிலிப்பிய கிறிஸ்தவச் சமூகத்துடன் பகிர்கிறார்.
அத்துடன், அவர் முழுமையாகத் திருச்சட்டத்தைக் கடைப்பிடிந்தவர் என்பதோடு, கிறிஸ்தவர்களைக் கடுமையாகத் துன்புறுத்தினார் என்றும், அவரது இளைமைப் பருவத்தின் செயல்பாட்டை எடுத்துரைக்கிறார். இப்போது, பவுல் அடிகளைப் பொறுத்தமட்டில் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவையே அவர் பெறும் ஒப்பற்ற செல்வமாக எண்ணுவதாகவும், கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள மற்றனைத்தையும், குறிப்பாக அவரது பழைய நம்பிக்கை வாழ்வைக் குப்பையாகக் கருதுவதாகவும் பிலிப்பியருக்கு எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் இயேசு கடவுளின் தேடல் குறித்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார். கடவுள் நம்மில் யாரைத் தேடுகிறார் என்பதை எடுத்துரைக்க இயேசு இரு உவமைகளைப் பயன்படுத்துகிறார்.
முதல் உவமையில், மந்தையிலிருந்து வழிதவறிச் செல்லும் செம்மறி ஆடு குறித்து பேசுகிறார். நல்ல மேய்ப்பன் தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டுவிட்டு தொலைந்து போனதைத் தேடி வெளியே செல்கிறான். காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டால், மேய்ப்பன் அதைக் கடிந்துகொள்வதில்லை அல்லது தண்டிப்பதில்லை, மாறாக, காணாமல் போன ஆட்டினை அன்புடன் தோளில் தூக்கிக்கொண்டு தொலைந்து போனதை மீண்டும் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறான்.
இரண்டாவது உவமை தனது பத்து நாணயங்களில் ஒன்றை இழக்கும் ஒரு பெண்ணைப் பயன்படுத்துகிறார். ஒரு முழுமையான தேடலுக்குப் பிறகு, அவள் தொலைந்துபோன நாணயத்தைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியைப் பகிர அண்டை வீட்டாரை அழைக்கிறாள். நிறைவாக, ‘அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று முடிக்கிறார்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில், இயேசு குறிப்பிடும் ‘நூறு’ என்பதை முழுமையைக் குறிக்கும் அடையாள எண்ணாக நாம் பொருள் கொள்ளலாம். இயேசுவே, மனுக்குலத்தின் மேய்ப்பராக இருக்கிறார். திருப்பாடல் 23-ல், வசனங்க்ள 23-25 வரை உள்ள வசனங்களும் தொடரும் வசனங்களும் ‘ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்’ என்று ஆண்டவராகிய இயேசுவை முன்குறித்து எழுதப்பட்டவையாக நாம் பார்க்கிறோம்.
முதலில், இயேசுவின் இந்த உவமையில் அந்த ஆயர் வழி தவறிய ஆட்டின் மீது கோபம் கொண்டு தேடாமல் அக்கறையினாலும் அன்பினாலும் தேடுகிறார். நாம் வழிதவறிச் செல்லும் போது நம் இறைவன் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இயேசு வலியுறுத்தும் இந்த படிப்பினையைப் புரிந்துகொள்வது அவசியம். அவருடைய ஆழ்ந்த அக்கறையையும், தேடுதலில் அவர் கொண்ட விடாமுயற்சியையும், நாம் வழிதவறிச் செல்லும் நிலையில் நம்மைக் கண்டுபிடிப்பதற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வாறே, வழி தவறிய நபர் கடவுளிடம் திரும்பும்போது ஏற்படும் மகிழச்சியை அடுத்த உவமையின் வழி விவரிக்கிறார். ஒரு முழுமையான தேடலுக்குப் பிறகு, அந்த பெண் தொலைந்துபோன நாணயத்தைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியைப் பகிர அண்டை வீட்டாரை அழைக்கிறாள், அவர்களோடு மகிழ்கிறாள்.
நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள், நாம் புனிதராக இருக்கும் போதல்ல, நம்முடைய பாவ நிலையில் ஒவ்வொருவரிடமும் வர வேண்டும் என்று நம் ஆண்டவர் பெரிதும் விரும்புகிறார். அவரே நமது நல்ல ஆயன். நம்மே தேடுகிறார்.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள் அவர் எத்தகைய பாவ வாழ்வு வாழ்ந்தார் என்றும், ஆண்டவரின் திருவுடலாகிய திருஅவைக்கு எதிராக வாழ்ந்தார் என்றும் விவிரித்தார். யூதர்கள் மத்தியில் காணாமல் போன ஆடுகளில் அவரும் ஒருவராக இருந்தார். இயேசு அவரைக் கண்டுபிடித்துத் தோளில் போட்டவாறு மகிழ்ந்து கொண்டினார். ஆம், ஆயனாகிய இயேசு நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் அறிந்து வைத்திருக்கின்றார். பவுலே..பவுலே என்றதுபோல நம்மையும் பெயர் சொல்லி அழைக்கின்றார், நாம் தொலைந்து போகையில் நம்மை தேடுகின்றார்.
இக்காலத்தில் அநேகக் குடும்பங்களில், பெற்றோர்கள் சொல்வது என்னவென்றால் என் மகன், என் மகள் எங்கள் பேச்சை கேட்பதில்லை என்பதாகும். ஏன் இந்நிலை என்று சிந்தித்தால். பெற்றோர்களின் அன்பான, ஆதரவான குரலை பிள்ளைகள் அறியவில்லை என்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கும். குடும்பதில் ஓயாத சண்டை சச்சரவாக இருந்தால் பெற்றோரின் குரல் கேட்கப்படாது. வீடு அமைதியாக இருந்தால் மனம் நிம்மதியாக இருக்கும். பிள்ளைகள் நெருங்கி வருவார்கள். பெற்றோரின் குரலுக்குச் செவிசாய்ப்பார்கள்.
ஆடுகளாகிய நாமும் அவரது குரலுக்கு செவிசாய்த்து, அவரின் வழி நடத்துதலைப் பின்பற்றும் போது வழி தவறாமல், நேர்வழியில் சாட்சிய சீடர்களாக வாழலாம்..
இறைவேண்டல்.
நல்லாயனாகிய இயேசுவே நீரே எனது நல்ல ஆயன். நான் வழிதவறும் வேளையில் நீரே என்னை தேடி நல்வழிப்படுத்துகின்றீர். என்மீது நீர் கொண்ட அன்புக்கும் உமது ஆசீருக்கும் நன்றி. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452