கிறிஸ்தவம், அழைப்பை ஏற்கும் சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

5 நவம்பர் 2024                                                                                    பொதுக்காலம் 31ஆம் வாரம் – செவ்வாய்
 
பிலி 2: 5-11
மத்தேயு 14: 15-24 
 


கிறிஸ்தவம், அழைப்பை ஏற்கும் சீடத்துவம்!

 
முதல் வாசகம்.

இவ்வாசகத்தில் பவுல் அடிகள் இயேசுவைப்  பற்றிய ஆழ்ந்த உண்மையை பலிப்பி சமூகத்தோடு பகிர்கிறார்.  கிறிஸ்து இயேசுவைப் போன்ற அதே மனநிலையைக் கொண்டிருங்கள் என்றும், அவர் கடவுள் வடிவில் விளங்கினாலும்,   அந்த நிலையை அவர் பற்றிக்கொள்ளவில்லை என்றும்,  மாறாக, அவர் தன்னைத் தாழ்த்தி, ஒரு அடிமையைப்போல போல  ஒரு மனிதனாகத் தோன்றினார் என்கிறார். 
அத்தோடு, அவர் கீழ்ப்படிந்து சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார் என்றும்,   அதன் காரணமாக, கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் என்றும்,  இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும் என்றும் போதிக்கிறார்.

நற்செய்தி. 

நற்செய்தியில்,  ஆண்டவர் இயேசுவிடம் ஒருவர் விண்ணக விருந்தைப் பற்றிப் பேசும்போது, இயேசு அவருக்கு தல்லதொரு பதிலை ஓர் உவமையின் வழி எடுத்துரைக்கிறார்.  அவரது உவமையில்,  ஒருவர் விருந்தொன்றை ஏற்பாடு செய்கின்றார். அந்த விருந்திற்கு அழைப்புப் பெற்றவர்களை அழைத்துவர தன் பணியாளர்களை நம்பிக்கையோடு அனுப்பி வைக்கிறார். ஆனால் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களோ  ‘நான் வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்’, ‘ஏர்மாடுகளை வாங்கி இருக்கிறேன்’, ‘இப்போதுதான் எனக்கு திருமணம் ஆகியிருக்கிறது’ என்று    காரணங்களை அடுக்கி அந்த விருந்திற்கு வருவதைத் தட்டிக் கழிக்கிறார்கள்.   
அதனால் விருத்துக்கு ஏற்பாடு செய்தவர் கோபம் அடைகிறார். நிறைவாக, அவர் தெருவோரங்களில் இருக்கின்ற சாதாரண மனிதர்களை அழைத்து, அவர்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தார்" என்று பதிலாகத் தந்தார். 

சிந்தனைக்கு.

அன்றும் இன்றும் கடவுள் அவரது அரசுக்குள் நம்மை அழைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் ஓய்வதில்லை.  ஆனால், நம்மில் பலர் அழைப்புக்குச் செவிசாய்க்கிறோம், அழைப்பை  உதாசினப்படுத்துகிறோம்.  இறைபணிக்கும் திருப்பலிக்கும்  நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு வாழ்க்கை மும்முரமாக இருப்பதாகக் கருதுபவர்களும் நம்மில் உண்டு. அதிலும் பலர் திருவிழா கிறிஸ்தவர்களாக மாறிவிட்டார்கள். 
மேலும் பலர் பகுதி நேர கிறிஸ்தவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நேரம் கிடைக்கும் போது தலையைக் காட்டுகிறோம்.  இதற்கு நாம் கூறும் காரணங்களை ஆராய்ந்துப் பார்த்தால் அறியாமையும், அக்கறையின்மையும், அந்தஸ்தும், பொருளீட்டும் பெரும் காரணமாக இருக்கும். 
ஆண்டவர், ‘சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்’ (மத் 22:21) என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.   கடவுளுக்கு உரிய நேரத்தைக் கடவுளுக்கு ஒதுக்க வேண்டும். நம்மில் பலர்  ‘கடவுள்  நேரில் வந்து கேள்விக் கேட்கப்போவதில்லை’ என்ற எண்ணத்திலும் தைரியத்திலும் கடவுளையே ஏமாற்றித் திரிகிறோம்.   
முதல் வாசகத்தில், கிறிஸ்து இயேசுவைப் போன்ற அதே மனநிலையைக் கொண்டிருங்கள் என்றும், அவர் கடவுள் வடிவில் விளங்கினாலும்,   அந்த நிலையை அவர் பற்றிக்கொள்ளவில்லை  என்றும் பவுல் விவரித்ததை வாசித்தோம். ஆம். இயேசவுக்கு எல்லாம் இருந்தும் தந்தையாம் கடவுளின் பணியேற்று  வறுமைக்குரியவராக வந்தார்.  அவர் தனக்கு நேரமில்லை எங்கும் எப்போதம்  ஒதுங்கவில்லை. 
இன்று நாம் கேட்ட இயேசுவின்  உவமையில், முதலில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அழைப்பை ஏற்கவில்லை என்பதால்  "ஏழைகள் மற்றும் ஊனமுற்றோர், குருடர்கள் மற்றும் முடவர்ள் அழைக்கப்பட்டனர். ஆம். ‘நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்ற ஆணவம் உள்ளோர் நிச்சயமாக ஓரங்கட்டப்படுவர்.  கடவுள் அவர்களுக்குப் பதிலாக மற்றவரைப் பணிக்கு அமர்த்துவார். ஆகவே, இறைப்பணியில் ஆணவம் கூடாது. 
இன்றும் இந்த விருந்து தொடர்ந்து வழங்கப்படுகிறது.  காற்றுள்ள போதை தூற்றிக்கொள்வது புத்திசாலிதனம்.  உடல் நலத்தோடு வாழும்  காலத்தில் கடவுளையும் அவரது அழைப்பையும் புறக்கணிப்போர், சாக்குப்போக்குக் கூறுவோர் ஒருநாள் திண்டாடுவர். அதிலும் பணம் படைத்தோர் பணத்தைக்கொண்டு எல்லாம் வாங்கிக்கொள்ளலாம், சிறந்த மருத்துவச் சிகிச்சை, சிறந்த வசதிகள் கொண்டு காலமும் மகிழலாம் என்று நினைப்பதுண்டு. இத்தகையோருக்கு கோவிட்-19 கற்றுக்கொடுத்தப் பாடமே போதும். 

கடவுள் அளித்த நேரத்தையும் செல்வத்தையும்  கடவுளுக்கும்  அவரது மக்களுக்கும் பகிர்ந்தளிப்பதே சிறந்த சீடத்துவம். அத்தகையோரை அவர் தம் மகனைப் போல உயர்த்துவார். அழைப்பை யாம் மறுத்தால் இழப்பு நமக்கா? இறைவனுக்கா?

இறைவேண்டல்.

அன்புள்ள ஆண்டவரே, நான் என்றும் உமது பணியில் மனத்தாழ்மையோடு நிலைத்திருக்க  அருள்வீராக. ஆமென்.

 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452