பந்திக்கு முந்துவோர் அல்ல, பிந்துவோரே இயேசுவின் சீடர்கள்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

28 மே 2024  

பொதுக்காலம் 8ஆம் வாரம் -செவ்வாய்

1 பேதுரு  திருமுகம் 1: 10-16

மாற்கு 10: 28-31

முதல் வாசகம்.
 
இவ்வாசகத்தில், பேதுரு போந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு வாழும் கிறிஸ்தவர்களிடம், அவர்களுக்கு வரவிருக்கும் கடவுளின் இரக்கம் மற்றும் மீட்பைப் பற்றி இறைவாக்கினர்கள் முன்னுரைத்ததைக் குறித்துப் பேசுகிறார்.  இறைவக்கினர்கள், அவர்களில் இருந்த  கிறிஸ்துவின் ஆவியால் வழிநடத்தப்பட்டனர் என்றும் குறிப்பிடுகிறார்.    மேலும், இறைவாக்கினர் வெளிப்படுத்திய  இறைவாக்குகள்  அவர்களுக்கானது அல்ல என்றும்,  அவை புதிய கிறிஸ்தவ சபையினருக்கானது  என்றும் கூறுகிறார்.  

எனவே, புதிய கிறிஸ்தவ சபையினரை  கிறிஸ்துவர்களாகச் செயலாற்றத் தயாராகவும், அறிவுத் தெளிவுடையவர்களாகவும்,  இயேசு கிறிஸ்து வெளிப்படும் பொழுது அவர்களுக்கு  அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருக்கவும் அழைப்பு விடுக்கிறார்.

நிறைவாக, பேதுரு புதிய கிறிஸ்தவச் சபையினரைப் பார்த்து,   அவர்களை அழைத்தக் கடவுள் தூயவாராக  இருப்பது போல், அவர்களும் அனைத்திலும் தூயவர்களாக   இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். 


நற்செய்தி.

ஒருநாள்,  பேதுரு இயேசுவிடம், அவைப் பின்பற்றுவதற்காகவே,   அவரும் மற்ற சீடர்களும் எல்லாவற்றையும் துறந்துவிட்டார்கள் என்று தெரிவித்தார். பேதுருவின் வார்த்தையைக் கேட்ட இயேசு, தனக்காகவும், நற்செய்திக்காகவும் தங்கள் வீடு, குடும்பம் அல்லது உடைமைகளை தியாகம் செய்பவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஏராளமான கைமாறுகள் நிச்சயம் கிடைக்கும் என்று  இறுதியளித்தார். இருப்பினும், இந்த கைமாறுகள் பெரும்  சவால்கள் மற்றும் துன்புறுத்தல்களுடன் வரும் என்றும் குறிப்பிட்டுக் கூறினார்.   

நிறைவாக, சீடர்களில் முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்று கூறி முடிக்கிறார்.

சிந்தனைக்கு.

திருத்தூதர் பேதுரு  தனது முதல் கடிதத்தை எழுதும் நேரத்தில், அவர் தனது சீடத்துவத்தில்  முதிர்ச்சியடைந்துள்ளதை அறிகிறோம்.   மற்ற சீடர்களின் அறிவிப்பினாலும்  கடவுள் வெளிப்படுத்திய  நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை தம் திருமுகத்தில் நினைவுபடுத்துகிறார். நற்செய்தியைப் பெற்றவகள் தங்களுக்கு வழங்கப்பட்ட கடவுளின் கொடைகள் நிமித்தம் மாறுபட்ட  வாழ்க்கையை ஏற்க வேண்டும் என்று கூறுகிறார்.

மனமாறியப் புதுக் கிறிஸ்தவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடைகளைப்  பிரதிபலிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதோடு, அவர்கள்ளைக் கடவுளின் வாழ்க்கையில் பங்குகொள்ள  அழைக்கிறார். ஆம், கிறிஸ்தவ வாழ்வு என்பது வெறும் ஆலயம் சார்ந்த ஆன்மீக வாழ்வு அல்ல என்பதை பேதுரு  இங்கே எடுத்துரைக்கிறார். மாறாக, அது துன்பத்தையும், துயரத்தையும் கொண்ட அன்றாட வாழ்க்கை என்கிறார்.

தொடக்கத்தில் இயேசுவில் இணைந்த பேதுருவுக்கும் இன்றைய இத்திருமுகத்தை எழுதிய அதே பேதுருவுக்கும் இடையே  ஏற்பட்டுள்ள நிம்பிக்கை வளர்ச்சியை நம்மால் அறிய முடிகிறது. அன்று இயேசுவை மறுலித்தவர் இப்போது அவருக்காகப் பேசுகிறார். ஆம், நம்பிக்கை அல்லது மறையறிவு என்பது குறுகிய காலத்தில் முழுமையடையும் ஒன்றல்ல. அது வாழ்நாள் முழுவதும் முதிர்ச்சியை நோக்கியப் பயணத்தில் அடைவதாகும்.  

மறைநூல் வழியாக  வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கையை, உண்மையை  கடவுள் நமக்குப் கொடையாக  அளித்து தம் தூய ஆவியாரால் வழிநடத்துகிறார்.  ஆகவே, நமது ஞானம், அறிவு, நம்பிக்கை, ஆற்றல் அனைத்தும் கடவுளின் கொடை என்பதை நினைவில் கொண்டு, பெற்ற கொடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் பொருட்டு, நம்மில் உள்ள பலவீனங்களை, குறைபாடுகளைப் பேதுருவைப்போல் களைய வேண்டும்.

நற்செய்தியில், இயேசு பேதுருவையும் மற்ற சீடர்களையும் நோக்கி, அவரைப் பின்பற்றுவதற்கான அவர்களின் முடிவில் முழு நம்பிக்கை வைக்கும்படி  ஊக்குவித்தார். அவர்களின் தியாகம் பன்படங்கு பலன் தரும் என்கிறார். திருத்தூதர் பேதுரு,  "ஆண்டவரே, உம்மைப் பின்பற்ற நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்" என்றது போல், நம்மால் இன்று கூற முடிகிறதா?  ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் போன்றதுதான் நம்மில் பலரின் நம்பிக்கை வாழ்வு. நாம் அனைத்தையும் துறந்து ஆண்டியாக வாழ வேண்டும் என்பதல்ல கிறிஸ்துவின் அழைப்பு. குடும்ப வாழ்வும் இறை அழைத்தலுக்கு உட்பட்டதுதான். ஆனாலும், நமது உழைப்பு, நேரம், உடல்நலம், அறிவு, ஞானம் போன்றவற்றைப் பிறரின் நல்வாழ்வுக்கும் பகிர வேண்டும் என்பதே இயேசுவின் வேண்டுகோள். இத்தகைய வாழ்வுக்கு அவரிடமிருந்து கைமாறு கிட்டும். 

பேதுருவுக்கு பதில் அளித்த இயேசு  “முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார். ஆம், சலுகைக்கும் வசதிக்கும் முந்திக்கொண்டு முதல் வரிசையில் நிற்போராக நாம் இருக்க இயலாது. பணி வாழ்வுதான்  கிறிஸ்தவ வாழ்வு. பிறருக்கான அன்புப் பணியையும் சீடத்துவத்தையும் பிரித்துப் பார்போர் கடைசியாவர். சீடத்துவம் என்பது சலுகைக்கும்  பேருக்கும் புகழுக்கும் அப்பாற்பட்டது.  

 
இறைவேண்டல்.

‘நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். நண்பர்கள் என்பேன்’ என்றுரைத்த ஆண்டவரே, எனது வாழ்நாள் எல்லாம் நான் ஏற்ற சீடத்துவ வாழ்வில் பணிவையும் நட்பையும், இரக்கத்தையும் கொண்டு சீடத்துவம் சிறக்க வாழ அருள்புரிவாராக. ஆமென்.

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452