திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர், அரை நாள் பயிரல்ல! | ஆர்.கே. சாமி | VeritasTamil

24 மே 2024
பொதுக்காலம் 7ஆம் வாரம் - வெள்ளி
யாக்கோபு திருமுகம் 5: 9-12
மாற்கு 10: 1-12
முதல் வாசகம்.
இவ்வாசகத்தில், புனித யோக்கோபு உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கைக்கான அறிவுரையை வழங்குகிறார். முதலாவதாக, மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதையோ அல்லது தவறாகக் கருத்துரைப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும் கடவுள் எப்போதும் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் அறிவுறுத்துகிறார்.
கடந்த கால இறைவாக்கினர்களைப் போல, சிரமமான தருணங்களில் பொறுமையைக் கடைபிடிக்கவும் சிரமங்களைத் தாங்கிக்கொள்வதற்கான மனோபலத்தைக் கொண்டிருக்கவும் அழைக்கிறார். அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்ததோடு, அவர்களின் விடாமுயற்சியின் பொருட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்றும் விவரிக்கிறார்.
மறைநூலில் யோபுவின் கதையை நினைவுகூர்ந்து, அவர் பெரும் துன்பங்களைச் சகித்துகொண்டு கடவுளுக்கு உண்மை உள்ளவராக இருந்தார் என்றும், இறுதியில், கடவுளின் ஆசீரையும் இரக்கத்தையும் பெற்றார் என்றும் நினைவூட்டுகிறார்.
நிறைவாக, புனித யாக்கோபு விண்ணுலகின்மீதும் மண்ணுலகின்மீதும் வேறு எதன்மீதும் ஆணையிடாதீர்கள்என்றும், பேச்சில் ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்வன்மை உடையவராக இருங்கள் என்று முடிக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தி வாசகமானது திருமணத்தின் பிரமாணிக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றது. பரிசேயர் விவாகரத்து பற்றி கருத்துரைக்க இயேசுவிடம் கேட்கப்பட்டபோது, அவர் மோசே என்ன சொன்னார் என்று பரிசேயர்களிடம் கேட்கிறார். மோசேயின் திருச்சட்டத்தை மேற்கோள் காட்டி மோசே விவாகரத்துக்கு அனுமதியளித்ததாகப் பதிலளிக்கின்றனர்.
இயேசு இன்னும் ஒரு படி மேலே சென்று, தொடக்க நூலில் உள்ளபடி, கணவன்-மனைவி இணைவதைப் பற்றி கடவுள் வலியுறுத்தியதை முன்வைக்கிறார். “கடவுள் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். . .கடவுள் இணைத்ததை யாரும் பிரிக்கக்கூடாது என்கிறார். புனிதமான திருமணத்தில் கடவுளால் ஒன்றாக இணைக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் வாழ்நாள் முழுவதும் ஒருவர் ஒருவருக்கு அர்ப்பணிப்பதே சிறந்த இல்லறம் என்கிறார்.
மேலும், “தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொருவரை மணந்தவன்
அவளுக்கு எதிராக விபச்சாரம் செய்கிறான்; அவள் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு வேறொருவனை மணந்தால், அவளும் விபச்சாரம் செய்கிறாள்" என்று மறுமொழி கூறினார்.
சிந்தனைக்கு.
பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள் (மத் 7:1) என்று இயேசு கூறியது, புனித யோக்கோபுவின் படிப்பினையாக முதல் வாசகத்தில் பிரதிபலிக்கிறது. நற்செய்தியில் இரு வகை மக்களைக் காண்கிறோம். ஒரு கூட்டத்தார் இயேசுவின் இறையாட்சிக்கான செய்தியைக் கேட்டுணர வந்துள்ளனர்.
மற்றவர் பரிசேயர்கள். இவர்கள் எல்லாம் தெரிந்தவர்களாக இயேசுவைச் சோதிக்க வந்துள்ளன்ர். இரண்டாவது கூட்டத்தாரான பரிசேயர் இயேசவிடன் எழுப்பியக் கேள்வி ஒரு தந்திரமான கேள்வி. “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?”என்பதே அக்கேள்வி. முள்ளை முள்ளால் எடுப்பது ஒரு கலை. பரிசேயர்கள் மோசே அளித்தச் சட்டமான திருச்சட்டம் அறிந்தவர்கள். மறைநூல் அறிஞர்களும் இவர்களோடு இணைந்தே இருப்பர். எனவே, இயேசு ,“மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். இக்கேள்விக்குப் பதில் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்றனர்.
இயேசு ஒரு படி மேலே சென்று, திருமணத்தின் இறையியலை விளக்குகிறார். இன்று நமக்கிருக்கும் திருஅவை சட்டம் 1056ல், திருமணத்தின் இன்றியமையாத பண்புக் ஒருமைத்தன்மையும் முறிவுபடாத்தன்மையுமாகும் என்றுள்ளது.
ஆம், திருஅவை சட்டம் 1056-ன் படி, திருமணம் இறைவன் திட்டத்திற்கு ஏற்ப, முறிவுப்படாதன்மையைக் கொண்டுள்ளது. திருமணத்தை உருவாக்கியவர் கடவுளே. ஆதியில் அவர் ஆதாமைப் படைத்து அவனுக்குத் துணையாக ஏவாளையும் உருவாக்கி இருவரையும் திருமணத்தில் இணைத்தார். இதிலிருந்து திருமணம் மனித சிந்தனையில் உருவானதொன்றல்ல என்பதையும், அதைக் கடவுளே மனிதனுடைய நன்மைக்காக ஏற்படுத்தினார் என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம்.
படைப்பின் தொடக்கத்தில், கடவுள் ஏற்படுத்திய திருமணம் புனிதமானது. அதில் குறைபாடுகள் இருக்கவில்லை. ஆதாமும், ஏவாளும் பலகாலம் அமைதியோடும் அன்போடும் குடும்பவாழ்க்கை நடத்திவர வேண்டும் என்றே கடவுள் விரும்பினார். அதற்காக மட்டுமே அவர் திருமணத்தை உருவாக்கியிருந்தார். ஆனால், காலவோட்டத்தில் திருமணம் சீர்குலைந்தது. இன்று, மணவிலக்கு கேட்டு நீதிமன்றங்கள் செல்லும் தம்பதியரின் எண்ணிக்கை எண்ணிலடங்கா. மருத்துவ ரீதியாகவும் செயற்கை ரீதியாவும் குடும்பக் கட்டுப்பாடும் எல்லையை மீறிவிட்டது. நாமிருவர், நமக்கிருவர் என்ற நிலையும் மாறி, நாமிருவர் நமக்கேன் இன்னொருவர் என்ற எண்ணம் காட்டுத் தீயாகப் பரவுகிறது.
திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்ற கூறிய காலம் இன்றில்லை. சில திருமணங்கள் ஓரிரு நாள்கள் கூட நிலைப்பதில்லை. இது உண்மையிலேயே வெட்கக்கேடு. திருமணத்தில் அன்றிருந்த சகிப்புத்தன்மை இன்று மிக மிகக் குறைவு. இக்காலத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதால் பல குடும்பங்களில் இருவருக்கும் இடையில் நீயா. நானா எனும் ஆனவப் பேச்சு விண்ணை முட்டுகிறது. இறுதியில் கடவுள் இணைத்தை நீதிமன்றம் பிரிக்கிறது.
இயேசுவோ, தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார். இன்று இயேசுவின் இவ்வார்த்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கிறது. திருப்பீடத்தின் முன் அளித்த வாக்குறுதி இன்று தெருக்களில் செல்லாக் காசாக மாறுகின்றது.
இயேசு மீண்டும் இன்று தெளிவாக விவரிக்கிறார். திருஅவையில் திருமுழுக்கப் பெற்ற இருவருக்கிடையில் நிகழும் திருமணம் மணமுறிவுக்கு உட்பட்டதல்ல. எனவே “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.
எனவே, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்ற மறைநூல் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து திருமணத்தைச் சிறப்பு செய்யும் வகையில் நமது பிள்ளை வளர்ப்பில் நமது கவனம் இருக்க வேண்டும்.
இறைவேண்டல்.
இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல ஒரே உடல் என்று திருமணத்தைப் புனிதப்படுத்திய ஆண்டவரே, திருமண வாக்குறுதிக்கு நான் என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் வரம் அருள உம்மை மன்றாடுகிறேன். ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Comments
Daily Program

- Reply
Permalink