புனித யோசேப்பு - புனித கன்னி மரியாவின் கணவர்-பெருவிழா | ஆர்.கே. சாமி | VeritasTamil

19 மார்ச்  2024                                                                                          

தவக்காலம் 5ஆம் வாரம் - செவ்வாய் 

2 சாமுவேல் 7: 4-5a, 12-14a, 16                                                                           

உரோமையர் 4: 13, 16-18, 22                                                                                          

மத்தேயு 1: 16, 18-21, 24a

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்!

முதல் வாசகம்: 

இன்றைய முதல் வாசகத்தில்   இறைவாக்கினர்ன் கடவுள் அறிவித்த செய்தியை தாவீதுக்கு எடுத்துரைக்கிறார்.  தாவீது எருசலேமில் கடவுளுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நிலைத்திருக்கும் வேளையில், ஆண்டவராகிய கடவுளின் திட்டம்  தாவீதின் மனக் கோட்டையைத் தவடுபொடியாக்கியது.  தாவீதின் இறுதி நாள்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் அத்தருணத்தில், கடவுள் அவரது மாற்றுத் திட்டத்தை நாத்தான் வழியாக வெளிப்படுத்துகிறார். தாவீது ஆற்றல் வாய்ந்த ஓர் அரசராக விளங்கியபோதும், அவர் நினைத்தை அவரால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை.   

இரண்டாம் வாசகம் :

இரண்டாம் வாசகத்தில்  பவுல் அடிகள் உரோமையருக்கு இம்மடலை எழுதும்போது, ஆபிரகாம் அவரது நம்பிக்கையினால் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனார் என்றும், “உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்ட வாக்குறுதி நிறைவேறும் என்பதற்கான  சாத்தியம் இல்லாததுபோல் தோன்றினாலும், ஆபிரகாம் கடவுளின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்தார் என்கிறார் புனித பவுல். இந்நிலையில் ஆபிரகாம் அல்ல கடவுளின் தலையீடும் ஈடுபாடுமே இன்றியமையாதவை என்றுரைக்கிறார் புனித பவுல்.

நற்செய்தி : 

இந்த பகுதி இயேசுவின் பிறப்புக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விவரிக்கிறது. புனித யோசேப்பு இயேசுவின் உயிரியல் தந்தையாக இல்லாவிட்டாலும் மரியாவின் கர்ப்பத்தை ஏற்றுக்கொள்வதில் அவர் ஏற்ற பங்கை மையமாகக் கொண்டுள்ளது.

1.யோசேப்பு மற்றும் மரியா கணவன்  மனைவியாக ஒன்றாக வாழ்வதற்கு முன்பு, மரியா கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் யோசேப்பு மரியாவின் கர்ப்பத்திற்கு அவர் காரணம் அல்ல என்பதை அறிந்திருந்தார். 
2.யோசேப்பு   ஒரு நேர்மையாளர்  என்பதால், மரியாவை பொது அவமானத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை, எனவே அவர் அமைதியாக அவளை விவாகரத்து செய்ய திட்டமிட்டார்.
3.இருப்பினும், ஆண்டவரின் தூதர்  கனவில் யோசேப்புக்குத் தோன்றி, மரியாவை தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம் என்றும், மரியாவின்  குழந்தை தூய  ஆவியால் கருத்தரிக்கப்பட்டது என்றும் அறிவுறுத்துகிறார்.
4.கடவுளின் தூதர் யோசேப்புவின்  குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டார்.  யோசேப்பு வானதூதரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து மரியாவை  தன் மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

சிந்தனைக்கு :

“நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்” என்பது வழக்கத்தில் உள்ள ஒரு முதுமொழி. ஒருவன் ஒரு காரியத்தைத் தான் எண்ணியவாறு முடிக்க எண்ணும்போது, கடவுள் வேறு ஒன்று எண்ணுவது இயல்பான ஒன்று. அதே வேளையில் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்பதும் உலக வழக்கு. இதற்கொப்ப அமைகிறது இன்றைய பகிர்வு.
இன்றைக்கு நமது திருஅவை புனித யோசேப்பு - புனித கன்னி மரியாவின் கணவர்-பெருவிழாவைக்  கொண்டாடுகிறது. பனித யோசேப்பைப் பற்றிய பின்னணி விபரங்கள் நற்செய்திகளில் அதிகம் இல்லை எனினும், புனித மத்தேயு சில விபரங்களைத் தந்துள்ளார்.  அவர் தாவீதின் வழிவந்தவர். நேர்மையாளர். குழந்தைக்கு நல்ல பாதுகாப்பான தந்தை  போன்ற சில விபரங்களை அறிகிறோம். மனித இயல்பில் அவர் சில முடிவுகளை எடுக்கத் துணித்தாலும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ  முற்றிலும் உடன்படுகிறார்.

அவர் தச்சனாக வாழ்க்கை நடத்தும் ஒரு தொழிலாளி. ஆதலால், தனக்கு மண ஒப்பந்தமாகியிருக்கும் இளம் பெண் கர்ப்பமாக இருக்கும் சூழலில்,  எதற்காக தான் மரியாவை  மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்? அதனால் சமூகத்தில்  ஏன் கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டும்?  ஒரு பெண்  கணவனை அறியா நிலையில்  தூய ஆவியினால் கருத்தரித்திருக்க முடியுமா? இதை நம்ப முடியுமா?  அத்தோடு, எதற்காக தான் வாழ்க்கை முழுவதும், இந்த குடும்பத்திற்கு காவலாக இருக்க வேண்டும்? போன்ற உண்மை கேள்விகள்  அவருடைய எண்ணத்தில் தோன்றி அவரைப் படாத பாடு படுத்தியிருக்கும்.

புனித யோசேப்பு கடவுளின் அழைப்புக்கும் திருவுளத்திற்கும் அடிபணிந்தவராக   பொறுமையை, மௌனத்தை ஆயுதமாகக் கொள்கிறார்.   கடவுளே அவரை நேர்மையாளர் என்று  கருதி தம் மகனுக்குப் மண்ணகத் தந்தையாகும் பொறுப்பை அளிக்கிறார்.  

புனித யோசேப்பு  , நேர்மை மற்றும் இறைப்பற்று இவற்றுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். உழைத்துத் தன் குடும்பத்தை மேன்மைப்படுத்துகிறார். ‘தச்சனின் மகன்' என்று மக்கள் இயேசுவை அழைக்கும் அளவுக்கு அவர் தன் தொழிலில் மையம் கொண்டிருந்தார். 

பொறுமை

பொறுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு யோசேப்பு. வாழ்வை பொறுமையோடு அணுகியதுதான்  யோசேப்பின் வெற்றி. மரியா கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி கேள்விப்பட்டதும், அவர் மரியாவின் இல்லம் சென்று தெருவில் நின்று, கூச்சல் போடவில்லை. அவர் பொறுமை காத்தார். பொறுமையைக் கையாள்வது அவ்வளவு எளிதான கலையல்ல. அது அன்று புனித யோசேப்பிடம் காணப்பட்டது. 

இன்று நாம் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றுதான் பல வேளைகளில் செயல்படுகிறோம். இன்றைக்கு பல தம்பதிகள்  விவாகரத்து ஒன்றே சிறந்த முடிவென்று ‘தீடிர்’ முடிவெடுக்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் பொறுமையற்ற  வேகம் தான். பொறுமையும் நிதானமும் நீடித்த குடும்ப வாழ்வுக்கு இரு கண்கள் போன்றவை. அத்தகைய பொறுமையின் இன்றியமையாத் தன்மையைப் புனித யோசேப்பு நமக்குக் கற்றுத் தருகிறார்.  ஆம், விட்டுக் கொடுப்பார் கெட்டுப்போவதில்லை.


மௌனம் சிறந்த மருந்து. 

யோசேப்பு இதை சொன்னார், அதை சொன்னார் என்றெல்லாம் எந்த நற்செய்தியாளரும் கூறவில்லை.  ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியையும், தொடர்ந்து குழந்தையையும் ஏற்றுக்கொள்கின்றார்.  கடவுள் பணித்தவாறே, நிறைமாத மரியாவைக்  கூட்டிக்கொண்டு பெத்லகேமுக்கும், இருவரையும் காப்பற்ற தன் உயிரைத் துச்சமென கருதி எகிப்துக்கும், பின்னர் நாசரேத்துக்கும் புறப்பட்டுப் போகிறார்.  இதன் வழி புனித யோசேப்பு ஒரு கடமை வீரராகவும் தலைசிறந்த கடவுள் பணியாளராகவும் திகழ்ந்தார் என்று தலைமுறை தலைமுறையாகப் போற்றப்படுகிறார். எனவே, முதல் வாசகத்தில் கண்ட தாவீதைப்போல் அல்லாமல், கடவுளின் திருவுளம் அறிந்து வாழ நம்மை கையளிப்போம்.
நிறைவாக, நம்மோடு இணைந்திருப்பவர்களில்  சிலர் நேர்மையாளர்களாக இல்லாவிட்டாலும், அவர்களை இகழ்ச்சிப்படுத்தாமல், அவர்களின் நற்பெயரைக் கெடுக்காமல், அவர்களுக்கு உதவிசெய்ய முன்வர வேண்டும் என்ற நல்லதொரு பாடத்தை கடவுள் புனித  யோசேப்புவைக் கருவியாகக் கொண்டு கற்றுத் தருகிறார். 

இறைவேண்டல்: 

அன்பு  இயேசுவே, உமது நல வாழ்வில் உம்மோடு உடனிருந்து,  உமக்கும் உம் தாயாருக்கும் சிறந்தப் பாதுகாவலராக விளங்கிய புனித யோசேப்பு காட்டிய முன்மாதிரியில்,   நானும் நேர்மையாளராக  வாழவும், பிறர்மீது நல்லெண்ணத்தில் வளரவும் அருள் தாரும். ஆமென். 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452