திருச்சட்டதை மிஞ்சியது மனிதநேயம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
6 மார்ச் 2024
தவக்காலம் 3ஆம் வாரம் - புதன்
இணைச்சட்டம் 4: 1, 5-9
மத்தேயு 5: 17-19
முதல் வாசகம்
முதல் வாசகத்தில், மோசே இஸ்ரயேலரிடம் உரையாற்றுகிறார். கடவுள் இதுவரை அவர்களுக்குக் கொடுத்துள்ள விதிகள் மற்றும் சட்டங்களைப் பற்றியும் அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தையும் மோசே வலியுறுத்துகிறார். ஏனெனில் அது கடவுள் அவர்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நல்ல நெறிமுறை வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்கிறார்.
எனவே, இஸ்ரயேலர் கொடுக்கப்பட்ட சட்டங்களையும் விதிமுறைகளையும் உன்னிப்பாகக் கவனித்து, அவற்றைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று மோசே படிப்பிக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம், இஸ்ரயேலர் கடவுள் முன் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்கள் என்பதை மற்ற நாட்டினர் அறிந்துகொள்வர் என்று அவர் நம்புகிறார். அவர்களின் கடவுள் தனித்துவமானவர் என்பதையும் அவர்களுக்கு உணர்த்துகிறார்.
நற்செய்தி :
இன்றைய நற்செய்தியில், தம் சீடர்களிடம் உரையாடும் இயேசு, பழைய ஏற்பாட்டு சட்டங்கள் மற்றும் இறைவாக்கினரின் போதனைகளை அழிப்பதற்கல்ல, மாறாக நிறைவேற்றுவதற்கே வந்ததாக கூறுகிறார் .
ஒழிப்பதற்காக அல்ல, நிறைவேற்றுவதற்காக:
இயேசு, கடவுள் மோசே வழி அளித்த திருச்சடங்களையோ இறைவாக்கினரின் படிப்பினைகளையோ முற்றாக ஒழிக்க வரவில்லை, அவற்றை நிறைவேற்றவே வந்ததாகக் கூறுகிறார். அதாவது, விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாகக் கூறுகிறார்.
கட்டளைகளை மீறுவதோடு, மற்றவர்களுக்கும் அவற்றை மீறக் கற்றுக்கொடுப்பவர்கள் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார் என்றும், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து கற்பிப்பவர்கள் விண்ணரசில் பெரியவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் இயேசு தம் சீடர்களுக்குத் தெளிவுப்படுத்துகிறார்
சிந்தனைக்கு:
கடவுள், தாம் தேர்ந்து கொண்ட மக்களுடனும் மனுக்குலத்தின் அனைத்து மக்களோடும் நெருங்கிய உறவைத் தொடர தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்து மனுவுருவாகச் செய்தார். இதனிமித்தம், பழைய சட்டங்களைச் சீர்ப்படுத்தி, இயேசு நிறைவேற்றுகிறார். நாம் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல அவரால் அன்பு செய்யப்படும் மக்கள் என்று இயேசு நம் அனைவருக்கும் உறுதியளிக்கிறார்.
இதனல், இயேசு கட்டளைகளையும் அக்காலத்தின் திருச்சட்டங்களையும் ஒரு புதிய நிலைக்கு உயர்த்துகிறார். கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பை நாம் உணர்ந்து அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இன்றியமையாதது என்பதை எடுத்தியம்புகிறார். எனவேதான் திருச்சட்டத்தை கடவுள் மீது அன்பு மற்றும் அடுத்திருப்பவர் மீது அன்பு என்று இரு கட்டளைகளில் எளிமைப்படுத்துகிறார்.
மோசே கொடுத்த சட்டங்கள் யாவும், கடவுள் தந்தது என்றாலும், மகனாகிய இயேசுவும் அப்போது உடனிருந்தார் என்பதை நாம் மறுக்க இயலாது. ஏனெனில், ‘தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர்’ (யோவான் 17:5) என்று இயேசு கூறுகிறார். யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தின் தொடக்கத்திலும், வாக்காக இயேசு கடவுளோடு இருந்தார் என்று அறிகிறோம். எனவே, எதற்காக தந்தையாம் கடவுள் திருச்சட்டங்களை அன்று இஸ்ரயேலருக்குத் தந்தார் என்பதை இயேசு நன்கு அறிவார். எனவே, இன்று காலம் நிறைவேறிய போது அவர் அச்சட்டங்களைச் சீர் செய்கிறார்
புனித பவுல் அடிகள் திருச்சட்டத்தைப் பற்றி பேசும்போது, அது அவசியமற்றதொன்றாகக் கருதுகிறார். ஏனெனில் திருச்சட்டம் மோசேவால் கொடுக்கப்படாத காலத்திலேயே ஆபிரகாம் மீட்கப்பட்டார் என்கிறார். இங்கே புனித பவுல் திருச்சட்டம் அல்ல, நம்பிக்கையே மேன்மையானது என்கிறார்.
மேலும், ‘திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம் (உரோ் 3:28) என்கிறார் புனித பவுல்.
எனவே, நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் சீடர்கள் என்றால், பரிசேயர்கள் போலன்றி மனிதநேய அன்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டியவர்கள் என்பதை நினைவில் கொண்டு செய்பட வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை. இதுவே, இயேசுவின் எதிர்ப்பார்ப்பும் இத்தவக்காலத்தின் நினைவூட்டலுமாகும்.
இறைவேண்டல்:
அன்பு இயேசுவே, என்னை நான் புதுப்பித்துக்கொள்ளவும், மனிதநேயத்துக்குரிய உம் பணியாளனாக மாறவும் எனக்கு உமதருளைப் பொழிந்து என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452