கிறிஸ்தவ வாழ்வின் ஆணிவேர் திருமுழுக்கு! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா (08.01.2023) 
I: எசா:  55: 1-11
II:எசா 12: 2-3. 4. 5-6
III: 1 யோவா: 5: 1-9
IV: மாற்: 1: 7-11

திருமுழுக்கு அருட்சாதனம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் முக்கியமான அருள்சாதனம். திருமுழுக்கு நம்மை இறைவனின் பிள்ளைகளாகவும் திருஅவையின் உறுப்பினர்களாகவும் மாற்றுகிறது. தூய ஆவியின் வல்லமையைப் பெற்று அரசக் குருத்துவத்தின் உறுப்பினர்களாகவும் மாற்றுகின்றது. பல நேரங்களில் இதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளாமல் வெறும்சடங்காக பார்க்கக்கூடிய அவல நிலை இருக்கின்றது. அவை முற்றிலும் களையப்பட வேண்டும். ஒரு பங்கில் திருமுழுக்கு கொடுப்பதற்காக ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். பங்குத்தந்தை அந்த குழந்தையின் பெற்றோரிடம் "எதற்காக வந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த பெற்றோர் "ஆலயத்தில் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தாய்மாமன் சீர் கிடைக்கும்" என்று கூறினர்.  அதைக் கேட்டவுடன் பங்குதந்தை வியப்புற்றார்.

திருமுழுக்கின் முக்கியத்துவத்தை  பல நேரங்களில் மேலோட்டமாக புரிந்து கொண்டு ஏனோதானோவென்று அந்த சடங்கில் பங்கேற்று வருகிறோம். ஆனால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வை   ஆழமானதாக வாழ்ந்திட திருமுழுக்கு அடிப்படை ஆணிவேராக இருக்கிறது. திருமுழுக்கின் வழியாக இறைவனின் அருளை முழுமையாகப் பெறுகிறோம். கடவுளுக்கு உகந்த  பாத்திரமாக நாம் மாறுகிறோம். திருமுழுக்கு அருள்சாதனம் மிகப்பெரிய ஆற்றலையும் சக்தியையும் நம்முடைய கிறிஸ்தவ வாழ்விற்கு கொடுக்கின்றது.

திருமுழுக்கின்  பொழுது  நாம் பயன்படுத்துகின்ற வெள்ளைத் துணியானது இயேசுவின் தூய்மையை சுட்டிக்காட்டுகிறது. இயேசு தூயவராக இருந்தது போல  திருமுழுக்குப் பெறும் ஒவ்வொருவரும் தூய வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம். தூய வாழ்வு வாழும் பொழுது தான் கடவுளின் உண்மையான இரக்கத்தையும் அருளையும் பெற முடியும். அதற்கு நம்முடைய பாவத்திலிருந்து முற்றிலும் மனம் மாற வேண்டும். எனவேதான் திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்கு கொடுத்த பொழுது "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் " என்று முழக்கமிட்டு மனமாற அழைப்பு விடுத்தார்.  

திருமுழுக்கு கொடுக்கும் பொழுது ஒளியானது கொடுக்கப்படுகிறது. அந்த ஒளி "கிறிஸ்துவே நமக்கு ஒளியாக இருக்கிறார் " என்ற சிந்தனையை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. ஒளியாம் நம் இறைவனை நாம் ஏற்றுக்கொண்டு அவரை  முழுமையாகப் பின்பற்றும் பொழுது எத்தனை இருள் சூழ்ந்த சோதனைகள் வந்தாலும் அவற்றிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று முழு நிறைவைக் காண முடியும். கிறிஸ்தவ வாழ்வை வாழும் பொழுது அலகையின் சோதனை நமக்கு அதிகமாக இருக்கும்.நம் ஆண்டவர் இயேசுவும் கூட திருமுழுக்கு பெற்ற பிறகு அலகையால் நாற்பதுநாள் சோதிக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் நாம் என்னதான் கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ முயற்சி செய்தாலும் பல்வேறு சோதனைகளும் இடையூறுகளும் துன்பங்களும் வந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இயேசுவே நமக்கு ஒளியாய் இருக்கிறார் என்று ஆழமாக நம்பும் பொழுது, நிச்சயமாக இறைவனின் வழிநடத்துதலை முழுமையாகப் பெற முடியும்.  இயேசுவின் ஒளியில் நடப்பதற்கு நாம் இறைவார்த்தையின் மீது ஆழமாக தாகம் கொள்ள வேண்டும். அதை வாசித்து ஒவ்வொருநாளும் தியானித்து வாழ்வாக்கி பிறருக்கு நற்செய்தியாக அறிவிக்க வேண்டும்.

திருமுழுக்கு வழிபாட்டின் பொழுது கிறிஸ்மா எண்ணைப் பூசப்படுகிறது. இது நாம் அனைவரும் இயேசுவின் அரசக் கூட்டத்தில் இணைக்கப் பெற்று பொதுக் குருத்துவத்தில் இணைகிறோம் என்ற சிந்தனையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.  

திருமுழுக்கு அருள்சாதனம் நம்முடைய ஆதிப் பாவத்திலிருந்து விடுதலை கொடுப்பதாக இருக்கின்றது. நம்மை திருஅவையின் உறுப்பினர்களாக மாற்றுகிறது. தூய ஆவியினுடைய கனிகளையும் கொடைகளையும்  நிறைவாகக் கொடுக்கிறது. எனவே திருமுழுக்கு என்ற அருள் சாதனத்தைப் பற்றி தெளிவான புரிதலோடு பெற்றுக் கொள்ளும் பொழுது, அது வழங்குகின்ற  அருளையும் ஆசியையும் நிறைவாக நாம் பெற முடியும்.

நம் ஆண்டவர் இயேசு பாவம் அறியாதவராக இருந்தாலும், திருமுழுக்கு பெறுவதன்  நோக்கம் கடவுளான அவர் நம்மோடு ஐக்கியமாகின்றார் என்பதை உணர்த்தவே. நாம் அவரோடு ஐக்கியமாக வேண்டுமெனில் மனமாற்றமும் பாவ மன்னிப்பும் அவசியம். அத்தகைய பாவ மன்னிப்பின் அடையாளமே திருமுழுக்கு.   நாம் அனைவருமே திருமுழுக்கு பெற வேண்டும் என்ற முன்மாதிரியை காட்டுவதற்கே இயேசுவும் திருமுழுக்கு பெற்றார். விண்ணேற்றத்தின் போது தன் சீடர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கும் பணியையும் அதிகாரத்தையும் அளித்தார். 

இயேசு திருமுழுக்குப் பெற்றதன் வழியாக திருமுழுக்கு என்ற அருள்சாதனம் இயேசுவால் அங்கீகரிக்கப்படுகிறது. இயேசு திருமுழுக்கு பெற்றதன்  வழியாக திருமுழுக்கு யோவானின் பணியை அங்கீகரிக்கிறார். இயேசு திருமுழுக்கு பெற்றதன் வழியாக தாழ்ச்சி நிறைந்த மனநிலையோடு நம் வாழ்வை வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார். இயேசு திருமுழுக்கு பெற்றதன் வழியாக தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெற்று தந்தையாம் இறைவனின் அங்கீகாரத்தை பெறுகிறார். இயேசு திருமுழுக்கு பெற்றவுடன் இறையாட்சிப் பணியை போதிக்கும் பணியின் வழியாகவும் வழிநடத்தும் பணியின்  வழியாகவும் புனிதப்படுத்தும் பணியின் வழியாகவும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார்.

தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆண்டவர்  இயேசுவைப் போல  போதிக்கும் பணியையும் புனிதப்படுத்தும் பணியையும் வழிநடத்தும் பணியையும் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்.  இன்றைய முதல் வாசகத்தில் இறைவனை எசாயா  குறிப்பிடுவது போல் நம்மிடையே உள்ள தடைகளைத் தகர்த்து, அனைவரும் ஒன்றுபட்ட சமூகமாக மாறிட திருமுழுக்கின் வழியாக தூய ஆவியால் புதுப்பிக்க நம்மையே முழுவதும் கையளிப்போம். பெற்ற திருமுழுக்கை இன்றைய நாளில் சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்து புதுப்பிக்க முயற்சி செய்வோம். தீமையின் ஆதிக்கத்தை நம்மிடமிருந்து அகற்றி  இறைவன்  மீது ஆழமான நம்பிக்கை கொள்வோம். அப்பொழுது நாம் வாழுகின்ற கிறிஸ்தவ வாழ்வு கடவுளுக்கு உகந்த வாழ்வாகவும் இறைத்தந்தையின் திருவுளத்தை  நிறைவேற்றக்கூடிய வாழ்வாகவும் மாறும்.  எனவே திருமுழுக்கு அருள்சாதனத்தை  வெற்றுச் சடங்காக பார்க்காமல்,  இறைவன் தரும் ஒப்பற்ற கொடையாக  பார்த்து இறைவனின் அருளையும் ஆசியையும் இன்றைய நாளில் பெற முயற்சி செய்வோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! ஆண்டவர் இயேசு திருமுழுக்குப் பெற்ற இந்த நாளில் எங்களையும் தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்து பெற்ற திருமுழுக்கின் படி  எங்கள் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்