அன்பு செய்வோம்....சீடராவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

கிறிஸ்து பிறப்பு காலம்  (05.01.2024) 
மு.வா: 1யோவா:  3: 11-21
ப.பா:திபா 100: 1-2. 3. 4. 5
ந.வ: யோவா: 1: 43-51

இன்றைய இரு வாசகங்களும் நமக்கு இயேசுவின் சீடர்களாக வாழ அழைப்பு தருவதாக உள்ளன. இயேசு பிலிப்பை பார்த்து என்னைப் பின்பற்றி வா என்று நற்செய்செய்தியில் கூறுகிறார். முதல் வாசகத்திலோ ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும் என்ற கருத்தை புனித யோவான் கூறுகிறார். ஆம். அன்பு செய்து வாழ வேண்டும் என்பதே இயேசு நமக்கு கொடுத்த கட்டளை. அவ்வாறு நாம் ஒருவர் ஒருவரை அன்பு செய்து வாழ்வோமேயானால் நம்மால் நம் ஆண்டவர் இயேசுவை முழுமையாய் பின்பற்ற முடியும். 

அன்பு செய்து வாழ்வதற்கு நாம் இரு காரியங்களைக் களைய வேண்டும். அவை பொறாமை எண்ணம் மற்றும் முற்சார்பு எண்ணங்கள் ஆகும். 

முதல் வாசகத்தில் காயின் தன் சொந்த சகோதரனான ஆபேலிடம் பொறாமை கொண்டு அவனைக் கொன்றதால் அன்பில்லாதவனானான். அவனிடம் விளங்கிய நேர்மையற்ற உள்ளம் தன் சொந்த சகோதரன் மேலேயே பொறாமை கொள்ளத் தூண்டியது. எனவே நாமும் நம் பொறாமை உணர்வுகளைக் களைந்து கடவுள் முன் நேர்மையாளர்களாய் வாழ்ந்து அன்பு செய்ய வேண்டுமென்று யோவான் வழியாக கடவுள் வெளிப்படுத்துகிறார்.

இரண்டாவதாக முற்சார்பு எண்ணங்களைக் நாம் களைந்தால்தான் உண்மையான அன்பை வெளிக்காட்ட இயலும். "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ? " என்ற நத்தனியேலின் முற்சார்பு எண்ணம் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ள தடையாய் இருந்தது என நாம் வாசிக்கிறோம். எனவே நாம் நம் சகோதர சகோதரிகளைப் பற்றிய முற்சார்பு எண்ணங்களைக் களைய வேண்டும்.பிறருடைய இடம், குடும்பம், சமயம், இனம், மொழி போன்றவற்றை பற்றி நாம்  கொண்டிருக்கும் இந்த முற்சார்பு எண்ணங்களை அகற்றி சகமனிதர்களை அன்பு செய்ய வேண்டும். 

இயேசுவை நாம் பின்பற்ற வேண்டுமானால் இவ்விரு காரியங்களையும் நாம் நிச்சயமாக செய்ய வேண்டும். இதை உணர்ந்து அன்பு செய்வோம். ஆண்டவர் இயேசுவின் சீடராவோம். 

இறைவேண்டல் 
இயேசுவே! பொறாமை உணர்வுகளையும் முற்சார்பு எண்ணங்களையும் களைந்து அன்பு செய்து உம்மைப் பின்பற்ற வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்