முன்மதியுடையோரா நாம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 21 வெள்ளி 
மு.வா: 1 தெச: 4: 1-8
ப.பா: திபா: 97: 1,2b. 5-6. 10. 11-12
நவ: மத்: 25: 1-13

நம் வாழ்வின் எல்லா நேரங்களிலும் முன்மதியுடையோராய் இருத்தல் என்பது அவசியம்.முன்மதி என்பது வாழ்வை நேர்த்தியுடன் வாழவும் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளவும் பிரச்சினைகள் வராமல் தவிர்க்கவும் மிகவும் உதவும் உன்னதமான பண்பாகும். ஏனெனில் முன்மதியுடையோர் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவனம் மிக்கவர்களாவும், எதார்த்தத்தை உணர்ந்து நடைமுறை வாழ்க்கைக்குத் தன்னை எப்போதும் தயார்படுத்துபவர்களாகவும் இருப்பர்.

சிறிய காரியங்களை நாம் செய்வதற்குக்கூட இம்முன்மதி அவசியமாகும் போது, ஆன்மீக காரியங்களில் நாம் எத்துணை முன்மதியுடையோராய் இருக்க வேண்டும் என்பதை நாம் இன்று உணர்ந்து செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் பத்துக் கன்னியர் உவமை தரப்பட்டுள்ளது. இப்பத்து கன்னியரில் ஐவர் முன்மதியுடையர். ஐவர் முன்மதி இல்லாதவர். முன்மதியுடைய கன்னியர் தங்கள் விளக்குகளை அணையாமல் காத்து திருமணவீட்டிற்குள் நுழைந்தனர். ஆனால் முன்மதியில்லா கன்னியரோ தங்கள் விளக்குகளில் எண்ணெய் தீரவே அதன் சுடர் அணையாமல் காக்க இயலாததால் திருமணவீட்டிற்குள் இயலவில்லை.

இவ்வுவமை நமக்கு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தைக் கற்றுத்தருகிறது. நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல இடையூறுகளுக்குக் காரணம் நமது முன்மதியின்மையே. முன்மதியின்றி ஆலோசிக்காமல் நாம் உதிர்க்கும் சொற்கள் உறவைப் பாதிக்கின்றன. முன்மதியின்றி நாம் செய்யும் செயல்கள் நம்மையே துன்பத்திற்கு ஆளாக்குகின்றன. சிலசமயங்களில் முன்மதியின்றி நாம் பிறருக்கு செய்யும் உதவிகள் கூட நம்மையே தீராத துன்பத்திற்குள் தள்ளுகின்றன. அதே போல நம் ஆன்மீக வாழ்வில் முன்மதியின்றி கண்போன வழியிலெல்லாம் மனம் போவதால் கடவுள் நமக்குத் தரவிருக்கும் நிலைவாழ்வையே இழக்கும் அபாயமும் உள்ளது.  

ஆன்மீக வாழ்வில் முன்மதியில்லாததால்தான் தேவையற்ற உலக காரியங்களை முதன்மைப்படுத்தி, நிலைவாழ்விற்கான செயவ்பாடுகளை மறந்துவிடுகிறோம். உலக வாழ்வில் முன்மதியில்லாமல் எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்ற புரிதல் இன்றி தடுமாறுகிறோம். எனவே இன்றைய நாளில் முன்மதியுடையோராய் வாழ இறைவனிடம் அருள் வேண்டுவோம். நம் வாழ்வென்னும் விளக்கு அணைந்து விடாமல் முன்மதி எனும் அக்கொடை காக்கும் என்பதில் ஐயமில்லை. 

இறைவேண்டல்
அன்பே உருவான இறைவா! முன்மதி எனும் கொடையைத் தந்து வாழ்வின் எதார்த்தங்களை தகுந்த உள்ளத்தோடு அணுகவும், அதனால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்