இறைவார்த்தைக்கு செவிமடுத்து மனமாறுவோமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 26 ஆம் வெள்ளி 
I: பாரூக்: 1: 15-22
II: திபா 79: 1-2. 3-5. 8. 9
III: லூக்:  10: 13-16

மனிதன் பலவீனன், தவறக் கூடியவன். ஆனால் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும்போது அதை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்வது அழிவைத் தரும். எனவேதான் மனம் திருந்தாத நகரங்களுக்கு ஐயோ உங்களுக்கு கேடு என்று ஆண்டவர் கூறுகிறார். பல அதிசயங்களையும் அற்புதங்களையும் அனுபவித்தும் கூட திருந்த மறுத்த கொராசின், பெத்சாய்தா நகரங்களைப் போன்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இறைவனின் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் சுவைத்திட பற்பல வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. திருப்பலியை போல பாக்கிய செல்வம் இந்த உலகத்தில் எதுவும் இல்லை. ஆனால் பல நேரங்களில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் திருப்பலியில் மேலோட்டமாக பங்கெடுக்கின்றோம். கிறிஸ்மஸ், அருளடையாளங்கள் பெறும்போது, ஈஸ்டர் போன்ற நேரங்களில் மட்டும் ஆலயத்தில் திருப்பலிப் பங்கெடுக்கும் அவல நிலை உள்ளது. அது ஓரிரு நாட்களில் மட்டும் கடவுளின் அருளை நிறைவாகப் பெற முடியாது. வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாம் திருப்பலியில் முழுமையாக பங்கெடுத்து இறைவார்த்தையின் ஒளியில் வாழவேண்டும். அப்பொழுது மட்டுமே நாம் மனமாற்றத்தின் மக்களாக இருந்து, கடவுளின் ஆசியை நிறைவாக பெறமுடியும்.

அதே போல நம்முடைய கத்தோலிக்கத் திருஅவையில் அருள்சாதனங்கள் 7 ஒவ்வொருவருக்கும் பொக்கிஷமாகும். அருள்சாதனங்கள் கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்ள கொடுக்கப்பட்ட கருவிகளாகும்.  எனவே முழு ஈடுபாட்டோடு அருள்சாதனக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்து இறைவார்த்தையின் ஒளியில் வாழும் பொழுது ஆசீர்வாதங்களை நிறைவாக பெறுகிறோம்.  

இவ்வாறாக கடவுள் நாம் மனமாற்றத்தின் மக்களாக வாழ்ந்திட எவ்வளவோ வாய்ப்புகளை கொடுத்தும் அவரது வார்த்தைகளை ஒரு பொருட்டாக கருதாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதே வாய்ப்புகள் அடுத்தவருக்கு கொடுக்கப்பட்டால் உடனே மனம் மாறுவார்கள். விவிலியத்திற்கு முதலிடம் அளித்த புனித எரோனிமூஸ் போன்று இறைவார்த்தைக்கு அதிகம் செவிமடுப்போம். இறைவார்த்தையின் ஒளியில் பயணித்து பாவத்திலிருந்து மனம்மாறி ஒளியின் மக்களாக வாழ முயற்சி செய்வோம். அப்பொழுது கடவுளின் ஆசியை நிறைவாகப் பெற முடியும்.

 இறைவேண்டல்
அன்பான இறைவா!  எங்களுடைய அன்றாட வாழ்வில் எங்களுடைய பலவீனங்களை கடந்து இறைவார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஆசீர்வாதத்தின் மக்களாக விளங்கிட அருளைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்