அனுப்பப்படத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 26 ஆம் வியாழன் 
I: 8: 1-4, 5-6, 7b-12b
II: திபா 19: 7. 8. 9. 10
III: லூக்: 10: 1-12

கடவுள் நம் ஒவ்வொருவரையும் அவரது பணிக்கென அழைத்திருக்கிறார். பிறருக்கு வாழ்வு கொடுக்கவும் பிறர் வாழ்வு வளம் பெறவும் நாமும் ஒரு கருவியாகப் பயன்பட இறைவன் அழைக்கின்றார். நான் திருச்சியில் இறையியல் படித்துக்கொண்டிருந்த பொழுது சிறைப்பணி   செய்தேன். அப்பொழுது ஒவ்வொரு வாரமும் சிறைக்கைதிகளின் வீட்டுக்குச் சென்று சந்தித்து அவர்களை வழிநடத்தும் பணியினை இந்திய சிறை பணி என்ற அமைப்போடு  இணைந்து   செய்தேன்.  அப்பொழுது இருவர் இருவராக செல்வது வழக்கம். அப்படி செல்கின்றபோது ஒருவகையான பாதுகாப்பும் இலக்கு தெளிவும் உற்சாகமும் இருந்தது . தனிமையில் சந்திக்க செல்லும் பொழுது ஒருவகையான தயக்கம் இருந்தது. இந்த உணர்வு தான் இன்றைய நற்செய்தியை  வாசிக்கும் எனக்கு சிந்தனையாக இருந்தது.சீடர்கள் இயேசுவால் இறைப்பணி செய்ய அனுப்பப்பட்டனர். ஒருவருக்கு ஒருவர் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இயேசு அவர்களை இருவர் இருவராக அனுப்பியிருக்கலாம்.

"அனுப்பப்படுதல்" என்ற வார்த்தையை சிந்திக்கும் பொழுது ஒரு பணியினை செய்ய அல்லது ஒரு இலக்கு நோக்கி பயணிக்க அனுப்பப்படுதல் என்பது  மிகவும் அவசியமான ஒன்றாகும் என்ற கருத்து நமக்கு புலப்படுகிறது. ஆண்டவர் இயேசு செய்த இறையாட்சிப் பணியினை செய்ய நம் ஆண்டவர் இயேசு இருவர் இருவராகத் தம் சீடர்களைப் பணிக்கு அனுப்பினார். இருவர் இருவராக அனுப்பியதன் காரணம் யூத சமூகத்தில் ஒருவரின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். குறைந்தது இருவரின் சாட்சியத்தை தான் ஏற்றுக் கொள்வார்கள். எனவே தான் ஆண்டவர் இயேசு சாட்சியமுள்ள நற்செய்தி பணி செய்திட இருவர் இருவராக அனுப்பி இருக்கலாம்.

இயேசுவின் முதன்மைப் பணியாக நற்செய்திப் பணி இருந்தது. அவர் செய்த நற்செய்திப் பணியை அவரோடு நிறுத்திக்கொள்ளாமல் அவருக்குப் பின்னரும் தொடரப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு சீடர்களை அனுப்பினார். தன்னிடம் இருக்கும் ஆற்றலைத் தனக்குள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல் பிறருக்கும் வழங்க கூடியவராக இருந்தார். இயேசுவிடம் பெற்ற ஆற்றலை சீடர்கள் முழுமையாக பயன்படுத்தி நோயாளர்களையும் ஏழை எளிய மக்களையும் முழுமையாக அன்பு செய்து அவர்களுக்கு நற்செய்தி பணி செய்தனர். இத்தகைய பணியைச் செய்யத்தான் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இந்த உலகத்திலே எவ்வளவு தீமைகள் இருந்தாலும் நாம் செய்கின்ற சின்னச்சின்ன நற்செயல்கள்   சிறந்த சமூகத்தை உருவாக்குகின்றது. எனவே நம்முடைய வாழ்வில் நம்மிடம் இருக்கும் ஆற்றலை நன்மை தனத்திற்காக  பயன்படுத்துவோம். அப்பொழுது நம்முடைய வாழ்வு முழு நிறைவைப் பெறும். 

நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல செயலும் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கடவுள் நமக்குக் கொடையாகக் கொடுத்த இந்த வாழ்வை நாமும் பிறருக்கு கொடையாகக் கொடுக்க முயற்சி செய்வோம். இதைத்தான் புனித வின்சென்ட் தே பால் என்ற புனிதரின் வாழ்வில் நாம் காண்கிறோம். அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களை அன்பு செய்து பற்பல நன்மைகளைச் செய்து எண்ணற்ற மக்களின் வாழ்வை உயர்த்தினார். மக்கள் நம்முடைய நன்மை தனங்களை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாம் நன்மைகளை செய்து கொண்டே செல்வோம்.

அப்போதுதான் நம் வாழ்வு கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வாக மாறும். ஒரு ஆத்ம திருப்தியை நம் வாழ்விலேயே பெறமுடியும். எனவே நம்மாலான நற்செயல்களை  ஆண்டவர் இயேசுவைப் போலவும் சீடர்களைப் போலவும் வின்சன்ட் தே பால் போன்ற புனிதர்களைப் போலவும் செய்ய முயற்சி செய்வோம். அப்பொழுது கடவுள் நம் வாழ்வை நிறைவாக ஆசீர்வதிப்பார். இப்படிப்பட்ட நற்செயல்கள் வழியாக நற்செய்தி அறிவிக்கத்தான்  நாம் அனுப்பப்பட்டுள்ளோம். எனவே நற்செயல்கள் செய்வதன் வழியாக இறையாட்சி மதிப்பீட்டுக்குச் சான்று பகர்வோம்.

 இறைவேண்டல்:
அன்பான ஆண்டவரே! ஏழை எளிய மக்களை அன்பு செய்து அவர்கள் வாழ்வை வளம் பெறச் செய்ய  இயேசுவை உலகிற்கு அனுப்பியவரே! என்னுடைய அன்றாட வாழ்வில் நன்மையான செயல்களை செய்வதன் வழியாக நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்து நாங்களும் உம்மால் அனுப்பப்பட்டவர்கள் என எண்பிக்கத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்