அவரது ஒளி நம்மில் ஒளிரட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

29 ஜனவரி 2026
பொதுக்காலம் 3-ஆம் வாரம் – வியாழன்

2 சாமுவேல  7: 18-19, 24-29
மாற்கு  4: 21-25

 
அவரது ஒளி நம்மில் ஒளிரட்டும்!


முதல் வாசகம்.

இந்தப் பகுதியில்  தாவீதின் வழிமரபு  என்றென்றும் நிலைநாட்டப்படும் என்று நாத்தான் இறைவாக்கினர் மூலம் தெரிவிக்கப்பட்ட கடவுளின் வாக்குறுதிக்கு தாவீது அரசர் பதிலளிக்கிறார்.

அவர் கடவுள் முன்பாகப் பணிந்து,  ‘நான் யார்? என் குடும்பம் யாது?’ என்று கேட்டு மன்றாடுகிறார்.  கடவுள் தனக்குக் காட்டிய தயவு வியக்கத்தக்கது என்பதை ஒப்புக்கொள்கிறார். கடவுள் இஸ்ரயேலை என்றென்றும் கடவுளின் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார் , கடவுள் தாமே அவர்களின் கடவுளாகிவிட்டார் என்றும் அவர் உறுதிப்படுத்துகிறார்.

கடவுள் தனது அரசைப் பற்றி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற வேண்டும் என்று  அவர் மன்றாடுகிறார்.  கடவுளின் பெயர் என்றென்றும் மாட்சியுற வேண்டும் என்றும் வேண்டுகிறார். 

 
நற்செய்தி.


இந்த நற்செய்தியில், இயேசு ஒரு விளக்கின் உருவகத்தைப் பயன்படுத்தி, அவருடைய செய்தியின் நோக்கத்தையும், அதை நாம் எவ்வாறு பெற வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.    அவரது விளக்கத்தில், யாரும ஒரு விளக்கை ஏற்றி  ஒரு கூடை அல்லது படுக்கையின் கீழ் மறைத்து வைப்பதில்லை. மாறாக, அதை  ஒரு விளக்குத்தண்டின் மீது வைப்பார்கள்.  இதனால் அதன் ஒளி சுற்றி ஒளிவீசவும்  பிறரால் பார்க்கவப்படவும்  முடியும் என்கிறார். 

அதேபோல், இறையரசு எனும் ஒளியும் மறைக்கப்படுவதற்காக அல்ல, மாறாக காணக்கூடியதாகவும் பகிரப்படக்கூடியதாகவும்   இருக்க வேண்டும் என்கிறார். 

பின்னர் இயேசு அனைவருக்கும் ஒரு சவாலாக,  கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றதோடு,  “நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்று அறிவுறுத்துகிறார்.


 சிய்தனைக்கு.


இன்றைய இரண்டு வாசகங்களும் கடவுளுக்கான நமது மறுமொழியின் தன்மையை விவரிக்கின்றன.  

முதல் வாசகத்தில், தாவீது நன்றியுணர்வு, பணிவு மற்றும் நம்பிக்கையுடன் கடவுளின் வாக்குறுதியைப் பெறுகிறார் - கடவுளின் திட்டத்திற்கு தனது இதயத்தைத் திறக்கிறார்.

நற்செய்தியிலோ, ஒருவர் கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதற்கு பதிலளிக்கும் அளவைப் பொறுத்து ஒருவர் நம்பிக்கையிலும் புரிதலிலும் எவ்வளவு வளர்கிறார் என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.

கடவுளின் வார்த்தைக்கும் வாக்குறுதிகளுக்கும் நம்முடைய சொந்த அரப்பணிப்பைப் பற்றி சிந்திக்க இந்த வாசகங்கள் நம்மை அழைக்கின்றன: நாம் தாவீதைப் போல, முழுமையாக ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன், கடவுளின் கொடைகளை ஏற்று  நன்றியுடன் வாழ்கிறோமா? அல்லது நமது நம்பிக்கை விளக்கை மறைத்து, கடவுளின் ஒளி நம் வாழ்க்கையை மாற்றியமைத்து மற்றவர்களுக்கு பிரகாசிக்க விடாமல் தனித்து வாழ்கிறோமா?   

உண்மையான வெளிப்படைத்தன்மையில் கடவுளின் வார்த்தைக்கு செயலில் பதிலளிப்பதுதான் சிறந்த சீடத்துவ வாழ்வு.   எனவேதான் யாக்கோபு (2:18) “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்; செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள்” என்கிறார். 

 
ஒவ்வொரு கிறிஸ்தவரும் வெந்த சோற்றை உண்டுவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கும் வாழ்வுக்குரியவர் அல்ல. நற்செய்தியில், விளக்கு உலகிற்கு ஒளியாக வந்த கிறிஸ்துவைக் குறிக்கிறது என்றால், விளக்குத்தண்டானது அந்த ஒளியை (கிறிஸ்துவை) நாம் உயர்த்தி உலகோடு பகிர்ந்து கொள்ளும் வழிமுறையைக் குறிக்கிறது. நாம் ஒவ்வொருவரும் விளக்குத்தண்டு. அது நிமிர்ந்து நிமிர்ந்து நிற்பதுபோல்  நாம எல்லா வேளைகளிலும் நம்பிக்கையில் நிமிர்ந்து நிற்க வேண்டும். .

எல்லா மக்களுக்கும் கிறிஸ்து தேவை, அவர்கள் அதை அறியாவிட்டாலும் அல்லது கிறிஸ்துவின் ஒளியை எதிர்த்தாலும் கூட. கிறிஸ்துவுக்கு ஒரு விளக்குத்தண்டாக இருப்பதில் நாம் சிரமப்பட்டால், இயேசுவின் பின்வரும் படிப்பினையைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  " வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்”  
 
 இறைவேண்டல்.


உலகிற்கு ஒளி நீங்கள் என்றுரைத்த ஆண்டவரே,  உமது ஒளியை உலகில்  ஒளிரச் செய்யும் விளக்காக நான் வாழ உதவிடுவீராக. ஆமென்.

 
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452