நற்செய்தியால் மனிதர்களைப் பிடிப்போமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
புனித அந்திரேயா - திருத்தூதர் விழா
I: உரோ: 10: 9-18
II: திபா 19: 1-2. 3-4
III: மத்: 4: 18-22
இன்று நாம் திருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவினைத் திருஅவையோடு இணைந்து கொண்டாடுகிறோம்.
இயேசுவால் முதன்முதலில் அழைக்கப்பட்ட சீடர்களில் ஒருவர் இவர் என்பதும் இயேசுவின் பணிவாழ்வில் அவருடன் இணைந்திருந்தவர் என்பதும் நாம் அறிந்ததே.மேலும் இவர் திருத்தூதரான பேதுருவின் சகோதரரும் ஆவார். உயிர்த்த இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதில் தனக்கே உரிய பங்களிப்பை அளித்தவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இத்தகைய திருத்தூதரின் விழாவில் நற்செய்தியைப் பறைசாற்றி எவ்வாறு மற்றவரை கடவுள் பால் ஈர்ப்பது என்பதைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய நற்செய்தியில் கலிலேயக் கடலில் வலைவீசிக்கொண்டிருந்த சீமோன் மற்றும் அந்திரேயாவிடம் "என் பின்னே வாருங்கள் .உங்களை மனிதர்களைப் பிடிப்பவராக்குவேன்" என்று இயேசு கூறி தன் அழைப்பு எனும் மேலான கொடையை அவர்களுக்கு வழங்குகிறார்.அவர்களும் உடனடியாக இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். இதன் உண்மையான பொருள் என்ன? கடலில் வலை வீசினால் மீன்கள் கிட்டும். அதைப்போல மனிதர்களைப் பிடிக்க நாம் எத்தகைய வலையை வீச வேண்டும் என்பதைக்குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
இயேசுவின் பணிவாழ்வின் போது அவர் மக்களைத் தன்பால் ஈர்த்தார். அதற்காக அவர் பயன்படுத்திய கருவிகள் என்ன என்று ஆராய்ந்தால் அவை அன்பு,இரக்கம், மன்னிப்பு, அமைதி,பகிர்வு, பரிவு போன்றவையே. சுருங்கக் கூறின் நற்செய்தி. இறையாட்சியில் அனைவருக்கும் பங்குண்டு என்ற நற்செய்தியை வார்த்தையாலும் வாழ்க்கையாலும் போதித்ததால் மனிதரைப் பிடிப்பவரானார் இயேசு. செல்லுமிடமெல்லாம் மக்கள் அவரைத் தொடர்ந்தனர். அவருடைய சொற்களைக் கெட்டு, செயல்களைக் கண்டு அதன்மூலம் இறையாட்சியை உணர்ந்தனர்.
இயேசு எவ்வாறு தன் சொல் செயல் பணிவாழ்வால் நற்புச்செய்தியைப் பறைசாற்றி மக்களை கடவுளுக்காகத் திரட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரோ அவ்வாறே நற்செய்திப் பணியால் கடவுள் பால் மனிதரை ஈர்க்க அழைக்கப்பட்டவர்களே திருத்தூதர்கள். அதே பணியைத் தொடரவே கிறிஸ்தவர்களாகிய நாமும் அழைக்கப்பட்டுள்ளோம்.
நாம் எவ்வாறு மனிதர்களைப் பிடிக்கப்போகிறோம்? இயேசுவைப் பற்றிய நற்செய்தியை நம் வாயால் அறிக்கையிட்டு, நம் அன்பாலும்,இரக்கத்தாலும்,பகிர்தலாலும், மன்னிப்பாலும், ஒருவர் மற்றவரை சமத்துவத்தோடும், சகோதரத்தோடும் , குறை நிறைகளோடு ஏற்றுக்கொள்ளும் பண்பாலும், துன்ப நேரத்தில் உடனிருப்பாலும், ஆற்றித் தேற்றும் குணத்தாலும் , மனித நேயத்தாலும் அவரைப் போல வாழ முழுமுயற்சி எடுக்கும் போது நாமும் கடவுளுக்காக மனிதரைப் பிடிப்பவராகிறோம்.
இயேசு ஆண்டவர் என்பதை மனதார நம்பி வாயார அறிக்கையிட்டு கடவுளுக்கு ஏற்புடையவராகவும் மீட்பைச் சொந்தமாக்குபவராகவும் நாம் வாழ வேண்டுமென புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் கூறுவதுதான் நமக்கு முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது.இத்தகைய வாழ்வுதரும் நற்செய்தியானது பாரபட்சமின்றி அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டும் எனபதையும் வலியுறுத்துவதாக இவ்வாசகம் அமைகிறது.
ஆம் நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் அழகானவை என்ற வார்த்தையை உண்மையாக்கும் விதமாக கிறிஸ்து பிறப்புக்காக நம்மைத் தயார் செய்யும் வேளையில் அவரே ஆண்டவர் என்பதை உள்ளூர நம்பி அறிக்கையிடுவோம். திருத்தூதர்களைப் போல வார்த்தையாலும் வாழ்க்கையாலும் நற்செய்தியை அறிவித்து மனிதர்களை பிடிப்பவராவோம். நம் வாழ்வை நெறிப்படுத்தி மற்றவரையும் கடவுள் பால் ஈர்ப்போம். அதற்கான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா அன்று திருத்தூதர்களை அழைத்தது போல இன்று எங்களையும் உம் பணிக்காய் அழைத்துள்ளீர். எம் வாழ்வாலும் வார்த்தையாலும் நற்செய்தியை அறிவித்து உம்பால் மனிதரை ஈர்க்க எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்